Published:Updated:

`12 வருட தாமதம், 3000 ஏக்கர் நிலம்!'- போராட்டத்துக்குத் தயாராகும் பெரம்பலூர்

இம்மாவட்டத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைந்தால் ஐந்து ஆண்டுகளில் ஐம்பது ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா வழங்குவதாகவும் வாக்குறுதிகளை அள்ளி வீசியது.

பெரம்பலூர்
பெரம்பலூர்

``விவசாயம் செய்ய நிலம் இல்லாததால் பிழைப்பு தேடி வெளிமாநிலத்திற்குச் செல்லவேண்டிய நிலை பெரம்பலூர் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இனியும் தாமதிக்கமாட்டோம். திட்டத்தைக் கொண்டு வாருங்கள். இல்லையென்றால் எங்களுடைய நிலத்தை எங்களிடமே திருப்பி வழங்குங்கள்" என்று அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

போரட்டக் குழுவினர்
போரட்டக் குழுவினர்

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக 2007-ம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த ஜி.வி.கே குழுமம் டிக்கோவோடு இணைந்து 3000 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தியது. ஆனால், இன்றுவரை இந்தத் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்பதால் நிலத்தைக் கேட்டு விவசாயிகள் போராடத் தொடங்கியுள்ளனர்.

போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரையிடம் பேசினோம். ``இம்மாவட்டத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைந்தால் ஐந்து ஆண்டுகளில் ஐம்பது ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினரின் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகும் வீட்டுமனைப்பட்டா வழங்குவதாகவும் வாக்குறுதிகளை அள்ளிவீசியது.

நிலத்தைக் கொடுத்த மக்கள்
நிலத்தைக் கொடுத்த மக்கள்

இதனால் மக்களும் தங்களுக்கு வேலை கிடைக்கப்போகிறது என்று நிலங்களைக் கொடுத்தார்கள். ஆனால், இன்று வரையிலும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. அத்தோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இந்தப் பகுதிகளில் 827 கோடி ரூபாய் மதிப்பில் விமான உதிரிப்பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதாகக் கூறி அறிக்கையும் வெளியிட்டார். அத்தோடு சரி. 12 வருடங்கள் கடந்துவிட்டன.

இன்று வரையிலும் திட்டம் வந்தபாடில்லை. இதனால் நிலம் இல்லாமல் இங்குள்ள விவசாயிகள் சென்னை கோயம்பேடு சந்தையில் முட்டை தூக்கும் தொழிலுக்கும், திருப்பூர், கேரளா போன்ற வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

மக்கள்
மக்கள்

நாங்களும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துங்கள் என்று பலமுறை ஆட்சியர் முதல் அமைச்சர் வரை பலரிடமும் மனுகொடுத்துவிட்டோம். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் கையாளாகாத அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை நம்பி எந்தப் புண்ணியமும் இல்லை. எங்களுடைய நிலங்களை மீட்க நாங்களே போராட்டத்தை அறிவித்திருக்கிறோம். இதற்கு எந்தவித எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்" என்று முடித்தார்.