Published:Updated:

``நீங்கள் கமர்சியல் விமானத்தில் செல்ல வேண்டாம்!''- இம்ரானுக்கு தன் விமானத்தைக் கொடுத்த சவுதி இளவரசர்

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சவுதியிடம் இம்ரான்கான் ஆதரவு கேட்டார்.

சவுதி இளவரசருடன் இம்ரான் கான்
சவுதி இளவரசருடன் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரு நாள்களாகச் சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மானையும் இம்ரான் கான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சவுதியைத் தொடர்ந்து, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இம்ரான் கானின் பயணத்திட்டம்.

imran khan
imran khan

இதற்காக, ரியாத்திலிருந்து நியூயார்க் நகருக்குச் செல்ல செப்டம்பர் 21-ம் தேதி கமர்சியல் விமானத்தில் இம்ரான் கான் உடன் வந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் பிரதமர், தன் பரிவாரங்களுடன் சாதாரண கமர்சியல் விமானத்தில் பயணிப்பதைச் சவுதி இளவரசர் விரும்பவில்லை. 'நீங்கள் எனது விருந்தினர். நியூயார்க் செல்ல என் தனி விமானத்தை எடுத்துக் கொள்ளுங்கள்' என்று விமானத்தைக் கொடுத்தார். தொடர்ந்து, இம்ரான் மற்றும் அமைச்சர்கள் அந்த தனி விமானத்தில் பறந்து அமெரிக்கா சென்றடைந்தனர்.

`அமெரிக்காவின் நிதியுதவியுடன் தீவிரவாதிகளை உருவாக்கினோம்!' - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

அமெரிக்காவில் இன்று அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை இம்ரான் கான் சந்தித்துப் பேசுகிறார். ஹூஸ்டன் நகரில் நேற்று நடந்த 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் முன்னிலையிலேயே பாகிஸ்தானைக் கடுமையாகச் சாடியிருந்தார்.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்

இதனால், ட்ரம்ப்புடனான இம்ரான் கான் சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. வரும் 27-ம் தேதி ஐ.நா சபைக் கூட்டத்திலும் இம்ரான் கான் உரையாற்றுகிறார். அப்போது, காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான் கான், பேசவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் எந்தக் காரணத்தை முன்வைத்து பாகிஸ்தான் பிரச்னையைக் கிளப்பினாலும் , அதற்குப் பதிலடி தர இந்தியா தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.