Published:Updated:

`அரசியல் ஆண்மை உள்ளவர்': திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு - ஆண்மைதான் ஆளுமைப்பண்பா? #VoiceOfAval

Leadership (Representational Image)

2016 வரை பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக நிர்வகிக்கப்பட்டது அ.தி.மு.க. ஒற்றைத் தலைமையுடன் தன் மறைவு வரை கட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்தார் ஜெயலலிதா. இப்போது அந்தப் பதவியை ‘ஆண்மை’க்கு உரியதாகக் குறிப்பிடுகிறார் திண்டுக்கல் சீனிவாசன்.

`அரசியல் ஆண்மை உள்ளவர்': திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு - ஆண்மைதான் ஆளுமைப்பண்பா? #VoiceOfAval

2016 வரை பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக நிர்வகிக்கப்பட்டது அ.தி.மு.க. ஒற்றைத் தலைமையுடன் தன் மறைவு வரை கட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்தார் ஜெயலலிதா. இப்போது அந்தப் பதவியை ‘ஆண்மை’க்கு உரியதாகக் குறிப்பிடுகிறார் திண்டுக்கல் சீனிவாசன்.

Published:Updated:
Leadership (Representational Image)

’அரசியல் ஆண்மை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடலாம்!’ என்று பேசியிருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன். ‘ஆம்பளைன்னா வாடா பாக்கலாம்...’ என்ற ஆணாதிக்க வார்த்தைகளில் மொழி நாகரிக காகிதம் சுற்றப்பட்ட வெர்ஷன்தான் இந்த ‘அரசியல் ஆண்மை உள்ளவர்கள் போட்டியிடலாம்’ என்ற அழைப்பு.

ஜெயலலிதா |
ஜெயலலிதா |

1989-ம் ஆண்டு ஜெயலலிதா அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார். 2016 வரை பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக நிர்வகிக்கப்பட்டது அ.தி.மு.க. அது சர்வாதிகாரமோ, ராணுவக் கட்டுப்பாடோ... எந்த எதிர்க்குரல்களும் இல்லாத ஒற்றைத் தலைமையுடன் தன் மறைவு வரை கட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்தார் ஜெயலலிதா. இப்போது அந்தப் பதவியை ‘ஆண்மை’க்கு உரியதாகக் குறிப்பிடுகிறார் திண்டுக்கல் சீனிவாசன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கு எதிர்வினை புரியும்போது, ’நேத்து வரை ஜெயலலிதா கால்ல விழுந்தவங்கதானே நீங்க? இப்போ ஆண்மை பத்தி பேசுறீங்களா?’ என்று பொதுச் சமூகத்தின் மனம் சட்டெனக் கேட்டுவிடலாம். ஆனால், அந்தக் கேள்வியும் தவறானதே. காரணம், அதுவும் ஆணாதிக்க இருக்கையில் இருந்துகொண்டு, பெண்ணை ஆணுக்குக் கீழ் இறக்கிவைத்து, ஓர் ஆணை, ‘இப்படி செய்த நீயெல்லாம் ஆம்பளையா?’ எனக் கேலி செய்யும் வெளிப்பாடே.

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

1991-ம் ஆண்டுத் தேர்தலில் அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றிபெற்று, ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, அவர் காலில் செங்கோட்டையன் விழுந்தார். அவரைத் தொடர்ந்து கட்சியின் பிற முக்கிய நிர்வாகிகளும் விழுந்தனர். அ.தி.மு.க.வில் காலில் விழும் ’கலாசாரம்’ தொடங்கியது அப்போதுதான். அதிலிருந்து, ‘அடக்கொடுமையே... ஒரு பொம்பள கால்ல போய் இப்படி எல்லா வெள்ளை வேட்டியும் விழறாங்களே...’ என்ற குரல் ஒரு தரப்பிலும், ‘ஒரு பொம்பள எப்படி இத்தனை ஆம்பளங்கள கால்ல விழ வெச்சிருக்காங்க பாரு’ என்ற குரல் ஒரு தரப்பிலும் கேட்டபடி இருக்கும்.

ஜெயலலிதாவின் காலில் அ.தி.மு.க நிர்வாகிகள் விழுந்ததை, பாலின கண்ணோட்டத்துடன் சொல்லப்படும், ‘இப்படி பொம்பள கால்ல விழலாமா?’ என்ற அங்கலாய்ப்புகளும் சரியல்ல. ‘ஆம்பளைங்களையே கால்ல விழ வெச்ச தைரியம்’ என்ற வியந்தோதலும் சரியல்ல. ஒரு மனிதன், சக மனிதனை தன் அதிகாரத்தால் காலில் விழவைக்கும் சர்வாதிகாரப் போக்கே இங்கு கண்டிக்கப்பட வேண்டியது. அந்த வகையில், தனக்குக் கீழ் உள்ளவர்களை தன் அதிகாரத்தால் காலில் விழவைத்த ஜெயலலிதாவை இந்தச் செய்கையின் அடிப்படையில் ‘பெண் ஆளுமை’ என்பது சரியல்ல. அதேபோல, காலில் விழுந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்லர். தங்களுக்குக் கிடைக்கக்கூடிய கட்சிப் பொறுப்பு, தேர்தல் வாய்ப்பு உள்ளிட்ட பொருள் தேவைகளுக்காக, தங்கள் சுயமரியாதையை பலி கொடுத்தவர்களே அவர்கள்.

அ.தி.மு.க
அ.தி.மு.க

ஆக, காலில் விழவைத்ததை எப்படி ‘ஆளுமை’ என்று ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதேபோல, ‘அரசியல் ஆண்மை’ என்பதையும் ஆளுமை பண்புக்குரியதாக அனுமதிக்க முடியாது.

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர்களாக இதுவரை எம்.ஜி.ஆர் (1972 - 1978), இரா. நெடுஞ்செழியன் (1978 - 1980), ப.வ.சண்முகம் (1980 - 1985), இரா. இராகவனந்தம் (1985 - 1986), எம்.ஜி.ஆர் (1986 - 1987), இரா. நெடுஞ்செழியன் (1987 - 1989), ஜெ. ஜெயலலிதா (1989 - 2016), வி.கே.சசிகலா (இடைக்காலப் பொதுச்செயலாளர் 2016), க.பழனிசாமி (இடைக்காலப் பொதுச்செயலாளர்) எனப் பதவி வகித்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் அரசியல் பணிகள், அனுபவ முதிர்வு, சட்டென மாறிய அரசியல் காட்சிகள் போன்ற பல்வேறு காரணங்களால் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்தவர்கள். ’அரசியல் ஆண்மை உள்ள யாராக இருந்தாலும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடலாம்’ என்று கூறியுள்ள திண்டுக்கல் சீனிவாசனின் ‘தகுதி நிர்ணயத்தின்’ அடிப்படையில், இவர்களில் இந்தப் பதவிக்கு வந்தவர்கள் யார் என்று அவரால் குறிப்பிட முடியுமா?

இது திண்டுக்கல் சீனிவாசன் என்ற அரசியல்வாதியின் ’ஆண்மை’ முழக்கம் மட்டுமல்ல. நம் சமூகத்தின் ஆணாதிக்கத்தின் பிரதிபலிப்பே அவர். இதில் ’பேராண்மை’ என்ற டபுள் கோட்டிங் அடிக்கப்பட்ட சொற் பிரயோகமும் பயன்படுத்தப்படுகிறது.

Leadership (Representational Image)
Leadership (Representational Image)
Pixabay

காலம் காலமாகவே, நம் குடும்பங்கள் முதல் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் வரை ஆளுமை, வீரம், தைரியம் போன்ற தலைமைப் பண்புக்குரிய குணங்கள் எல்லாம் ஆண்மைக்குரியதாகவே குறிப்பிடப்படுகின்றன. ஆனால், உண்மையில் தலைமைப் பண்பு என்பது தன்னம்பிக்கை, பொறுப்புணர்வு, நேர்மை, பணிவு, நம்பகத்தன்மை உள்ளிட்ட குணங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவது. இதில் பாலினம் இல்லை.

என்று ஒழியும் இந்த ஆணாதிக்கம்?!

- அவள்