Published:Updated:

`ஈழத்து மகளே எங்கிருக்கிறாய்?'- காணாமல்போன கதாநாயகிக்கு இயக்குநரின் கண்ணீர்க் கடிதம்!

பிரஷாந்தி
பிரஷாந்தி

என்னுடைய `கடல் குதிரைகள்’ தான், நீ நடித்த முதல் திரைப்படம். அதுவே உன்னுடைய கடைசிப் படமாக ஆகிவிடக்கூடாது என்கிற பரிதவிப்புடன் இதை எழுதுகிறேன்.

`உச்சிதனை முகர்ந்தால்', `கடல் குதிரைகள்' ஆகிய படங்களின் இயக்குநர், புகழேந்தி தங்கராஜ். கடல் குதிரைகள் திரைப்படம், கூடங்குளம் அணுஉலை போராட்டம் நடைபெற்ற இடிந்தகரை கிராமம் மற்றும் ஈழத்தமிழர்களின் போராட்ட வாழ்க்கையைப் பின்னணியாகக்கொண்டு உருவாக்கப்பட்டது. அதில், பிரஷாந்தி என்ற ஈழப்பெண் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்ததிலிருந்து அவருக்கு போலீஸார் விசாரணை, மிரட்டல்கள் தொடர்ந்தன. கடந்த சில மாதங்களாக, அவரும் அவரது குடும்பத்தினரும் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில், `எங்கிருக்கிறாய் பிரசாந்தி?' என்று ஒரு தந்தையின் தவிப்போடு இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் எழுதிய கடிதம் விகடனுக்கு பிரத்யேகமாகக் கிடைத்தது. அதை அப்படியே வாசகர்களின் பார்வைக்கு முன்வைக்கிறோம்...

``அன்பும் அறிவும் அர்ப்பணிப்பும் கொண்ட தமிழ்மகள் பிரஷாந்திக்கு,

ஒவ்வொரு நொடியும் உன் நினைவுச் சுமையில் நசுங்கிக் கொண்டிருக்கிற புகழேந்தி தங்கராஜ் எழுதும் மடல். என்னுடைய `கடல் குதிரைகள்’ தான், நீ நடித்த முதல் திரைப்படம். அதுவே உன்னுடைய கடைசிப் படமாக ஆகிவிடக்கூடாது என்கிற பரிதவிப்புடன் இதை எழுதுகிறேன். `கடல்குதிரைகள்' படம் சென்ற ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகு உன்னை சந்திக்கிற வாய்ப்பு கிட்டவில்லை. ஓரிருமுறை என்னை அலைபேசியில்அழைத்து நலம் விசாரித்திருக்கிறாய்… அவ்வளவுதான்!

கடல் குதிரைகள்
கடல் குதிரைகள்

இரண்டு மாதங்களுக்கு முன், திடீரென ஒருநாள் அலைபேசியில் அழைத்த உன் குரலில் பதற்றம் தெரிந்தது. அவசரமாகச் சந்திக்க வேண்டுமென்றாய். அடுத்த ஒரு மணி நேரத்தில், கடற்கரை காந்தி சிலையருகே சந்தித்தோம். என்னைப் பார்த்ததும் ஓடிவந்து கைகளைப் பற்றிக்கொண்டு நீ அழுததும், நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டுமென்று முழு உரிமையுடன் பொறுப்பை என்மீது சுமத்தியதும், நேற்றுதான் நடந்ததைப்போலிருக்கிறது. கியூ பிராஞ்ச் அலுவலகத்திலிருந்து விசாரணைக்கு அழைத்ததாகத் தெரிவித்தபோதே உன் குரல் உடைந்துவிட்டது. அதற்குப் பிறகு உன்னால் பேச முடியவில்லை. ஒரு பெண் அதிகாரி, உன்னுடைய `டேட்ஸ்’ பற்றி அலைபேசியில் விசாரித்ததாக உன் தாயார் தெரிவித்த பிறகுதான், உன் கலக்கத்தின் காரணம் புரிந்தது.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காவல்துறையில் இருக்கிற நல்ல அதிகாரிகளையும் சந்தித்திருக்கிறேன் என்பதால், இப்படியெல்லாம்கூட அதிகாரிகள் இருக்கிறார்களா என்கிற அதிர்ச்சியிலிருந்து அவ்வளவு சீக்கிரத்தில் விடுபட முடியவில்லை. கடல் குதிரைகளில் நடிக்க வந்தபோது, 16 வயது முடிந்துவிட்டதாகச் சொன்னாய். அதைவைத்துப் பார்த்தால், இப்போது உனக்கு 20 முடிந்திருக்கும். வளர்ந்துவிட்டிருக்கும் ஒரு சிறுமி தொடர்பான சிக்கல் என்பதால், இந்தப் பிரச்னைக்கு எப்படித் தீர்வு காண்பது என்கிற கேள்விதான் பெரிதாக இருந்தது. பத்திரிகையாளர்களிடம் முறையிடலாமா அல்லது ஈழப்பிரச்னையில் உண்மையான அக்கறைகொண்ட தலைவர்கள் எவரிடமாவது முறையிடலாமா என்று யோசித்தேன். `யோசித்தேன்’ என்று சொல்வதைவிட, ‘யோசித்தோம்’ என்று சொல்வதுதான் பொருத்தமானது.

கடைசியில், வைகோவைத் தொடர்பு கொண்டு பேசலாமென்று தீர்மானித்தோம். அவர் ஒருவரால்தான் எவரையும் எளிதாகத் தொடர்புகொள்ள முடியும். சட்டப்படியோ தார்மீக அடிப்படையிலோ நீதி கேட்க முடியும். அதனால்தான் அவரை அணுகுவதென்று முடிவெடுத்தோம். நமது துரதிர்ஷ்டம், அவரை அணுகி விஷயத்தைச் சொல்வதற்குள், உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவிட்டார். டாக்டர் மைத்ரேயனும் வைகோவைப் போன்றவர்தான். ஈழப் பிரச்னையில் உடனடியாகத் தன்னால் ஆனதை செய்யக் கூடியவர். ஆனால், சொந்தக் கட்சியில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியால் அவர் வெளியுலகுக்கு வராதிருந்த நிலையில், அவரை அணுகத் தயங்கினேன்.

யார் மூலம் உன் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்கிற முடிவுக்கு உடனடியாக வரமுடியாத நிலையில், பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் பிரச்னையை எடுத்துச்சொல்லி, அதற்கு எந்த விதத்தில் தீர்வு காணமுடியும் என்று வழிகாட்டும்படி கேட்டுக் கொண்டேன். அவரிடம் உன் தொடர்பு எண்ணையும் கொடுத்தேன்.

நீ நெருப்பின் விளிம்பில் நின்றுகொண்டிருக்க, அதை அணைப்பதற்கான முயற்சியில் நான் முழுமையாக இறங்குவதற்கு முன்பாகவே, உன்னுடைய தொடர்பு முற்றிலுமாக அறுந்துவிட்டது. காலையிலும் மாலையிலும் இரவிலும் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த உன்னிடமிருந்து, 3 மாதமாக எந்தத் தகவலுமில்லை. எங்கே இருக்கிறாய், என்ன ஆனாய்… தமிழ்நாட்டுக்குள்தான் இருக்கிறாயா? கியூ பிராஞ்ச் உன்னை விசாரித்தார்களா, இல்லை... அவர்களால் உனக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டதா... எதுவுமே தெரியாத நிலையில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப்போல நிலைகுலைந்து நிற்கிறேன், இரண்டு மாதங்களாக. உடுக்கை இழந்தவன் கைபோல உனக்கு உதவியிருக்கவேண்டிய நான்தான், என் பொறுப்பை உணராமல் காலதாமதம் செய்துவிட்டேனோ என்கிற குற்ற உணர்வில்தான் விடிகிறது ஒவ்வொரு நாளும்! இங்கே இருந்தால் எப்படியாவது என்னைத் தொடர்புகொண்டிருப்பாய். எங்கேயிருக்கிறாய் என்பதை நிச்சயமாக எனக்குத் தெரிவித்திருப்பாய்… ஆனால், அப்படி எந்தத் தகவலும் உன்னிடமிருந்து எனக்கு வரவில்லை. கியூ பிராஞ்ச் தொல்லையைத் தாங்க முடியாமல், வேறெங்காவது போய்விட முயன்று, எல்லையற்ற இன்னல்களை எதிர்கொண்டிருக்கிறாயா என்பதும் தெரியவில்லை.

2015-ல், கூடங்குளம் இடிந்தகரையிலிருந்து ஐந்தாறு கடல் மைல் தொலைவில், நடுக்கடலில் `கடல்குதிரைகள்’ படப்பிடிப்பு. இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளான படகிலிருந்து நீயும் டேவிட் பெரியாரும் நீந்திவருகிற காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தோம்.

கதையின்படி, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிற டேவிட்டை ஒரு கையால் இழுத்துப் பிடித்தபடி நீ நீந்திவர வேண்டும். உங்கள் பாதுகாப்புக்காக மூன்று படகுகளில் மீனவத் தோழர்கள் தயார் நிலையில் இருந்தார்கள். நீந்துவதில் சிரமமிருப்பதாகத் தெரிந்தால், கடலில் குதித்து உங்களை அவர்கள் மீட்டு வந்துவிட வேண்டுமென்று ஏற்பாடு. கரையில்தான் அலை இருக்கும், நடுக்கடல் அமைதியாக இருக்குமென்கிற நம்பிக்கையோடுதான் கடலுக்குள் போனோம். மலை மாதிரி உருண்டு புரண்டு எழுந்துவந்த பிரமாண்ட அலைகள், அந்த நம்பிக்கையைத் தகர்த்துக்கொண்டிருந்தன. உன்னை கடலில் குதிக்கச் சொல்லவே அஞ்சினேன்.

படப்பிடிப்பையே ரத்துசெய்துவிடலாமா என்று யோசித்தேன். அப்போது, என் கையைப் பிடித்து நீ எனக்குத் தைரியம் சொன்னதை ஒருபோதும் நான் மறக்க முடியாது.

``நீங்க கவலைப்படாதீங்க அங்கிள்… நான் சமாளிச்சிடுவேன். எனக்கு ஒண்ணும் ஆகாது. இவ்வளவு தூரம் உள்ளே வந்துட்டு திரும்பப் போக வேண்டாம்’' என்று என்னை சமாதானப் படுத்திவிட்டுத்தான் கடலில் குதித்தாய்!

சிறிதுதூரம்தான் நீந்தியிருப்பாய், டேவிட்டிடம் தடுமாற்றம் தெரிய, நீயும் தடுமாறுவதாக எனக்குத் தோன்றியது. ஒரு பெரிய அலையில் நீ மூழ்கிவிடுவதைப் போல் தோன்ற, ஒரு நொடி ஆடிப் போய்விட்டேன். அப்போதிருந்த பயத்தில் நான் அவசர அவசரமாக விசிலடிக்க, மீனவத் தோழர்கள் கடலில் குதித்து உங்களை இழுத்துக்கொண்டு வந்து படகில் ஏற்றிவிட்டார்கள்.

கடல் குதிரைகள்
கடல் குதிரைகள்

``உனக்கு ஒண்ணும் ஆகலையே’' என்று கேட்டேன். ``நீங்கதான் பயந்துட்டீங்க'’ என்று சொல்லிவிட்டு சிரித்தாய்! ``எனக்கு ஒன்றும் ஆகலை'’ என்றாய். ``நீ சிரமப்படுவது மாதிரி தெரிந்தது'’ என்றேன். ``இல்லை அங்கிள்… கஷ்டப்பட்டு நீந்தி வருவது மாதிரி தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் அலையில் மூழ்குகிற மாதிரி நடித்தேன்'’ என்றாய்! வியப்புடன் பார்த்தேன். வழக்கம்போல வெள்ளந்தியாகச் சிரித்தாய்.'' நீ ஈழத்திலிருந்து உயிர்தப்பி இங்கே வந்திருக்கிறாய். உனக்கு ஏதாவது ஆகிவிட்டால், நான் வெளியே தலைகாட்டவே முடியாது. அந்தப் பழியிலிருந்து ஒருபோதும் விடுபட முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, எனக்கு நீச்சல் தெரியாது. `நீச்சல்கூட தெரியாத நீ ஒரு ஈழத்துப் பிள்ளையை நடுக்கடலில் கொண்டுபோய்த் தள்ளிவிட்டாயே' என்று யாராவது கேட்டால் நான் என்ன பதில் சொல்ல முடியும்? அந்த அச்சத்தில்தான் விசிலடித்தேன்’ என்றேன். ``பயப்படாதீங்க அங்கிள்…. எனக்கு ஒண்ணும் ஆகாது'’ என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னாய்…

கடல் குதிரைகள் படத்தின் புகைப்படம்
கடல் குதிரைகள் படத்தின் புகைப்படம்

நடுக்கடல் படப்பிடிப்பு மறுநாளும் தொடர்ந்தது. ஆழ்கடலில் நீண்டதூரம் போய், உன்னை நீந்திவரச் சொன்னோம். டேவிட்டை ஒரு கையால் இழுத்தபடி அச்சமில்லாமல் நீந்திவந்தாய். படப்பிடிப்பு மதியத்துக்கு மேலும் தொடர்ந்தது. கேமரா இருந்த படகில் நானும், வேறொரு படகில் நீயும் இருந்ததால், கைக்குட்டை மூலம்தான் உனக்கு `ஆக்ஷன்’ சொல்லவேண்டியிருந்தது. கைக்குட்டையை அசைத்ததும் நீயும் டேவிட்டும் கடலில் குதிப்பீர்கள். படகு உங்களை விட்டுவிட்டு எங்கள் பக்கம் வந்துவிடும். மீண்டும் கைக்குட்டையை அசைத்ததும் நீங்கள் நீந்த ஆரம்பிப்பீர்கள். பிற்பகலில், ஓர் இடத்தில் நீ நீந்திவருவதைப் படமாக்கிக்கொண்டிருந்தபோது, உண்மையிலேயே நீ சிரமப்படுவதாகத் தோன்றியது. நான் மட்டுமல்ல, எல்லோருமே அதை உணர்ந்தனர். நான் விசிலடிப்பதற்கு முன்பே மீனவத் தோழர்கள் கடலில் குதித்துவிட்டார்கள். எங்கள் படகிலிருந்த இடிந்தகரை சகோதரி மெல்ரெட் கூட பயந்துபோய் கடலில் குதித்து உன்னை நோக்கி நீந்தத் தொடங்கினார். அதற்குள் மற்றவர்கள் உங்களை மீட்டு வந்துவிட்டார்கள். அன்று இரவு உணவுக்குப் பிறகு, எனக்கிருந்த சந்தேகத்தை உன்னிடம் மீண்டும் மீண்டும் தெரிவித்த பிறகே, உனக்கு ஓரளவுதான் நீச்சல் தெரியும் என்பதை ஒப்புக்கொண்டாய். சென்னைப் புத்தகக் கண்காட்சியில், என் புத்தகம் ஒன்றில் கையெழுத்து வாங்க வந்தபோது பார்த்த ஈழத்துச் சிறுமியான உன்னை, கடல் குதிரைகளுக்காகத் தொடர்புகொண்டபோது, `நீச்சல் தெரியுமா’ என்றுதான் முதலில் கேட்டேன். `தெரியும்’ என்று உறுதியான குரலில் நீ கூறியதால்தான் நடிக்கவைத்தேன்.

முள்வேலி முகாமிலிருந்து தப்பி, நீந்தியே தமிழகத்துக்கு வந்துவிடுகிற ஈழச் சிறுமியாக, ஈழத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியே நடித்தால் பொருத்தமாக இருக்குமென்கிற ஆர்வமே அதற்குக் காரணம். என்னுடைய அந்த ஆர்வத்தைவிட, உன்னுடைய ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறது. அதுதான், பெரிதாக நீச்சல் தெரியாத உன்னை நடுக்கடலில் துணிவோடு நீந்த வைத்திருக்கிறது. கடல்குதிரைகள் படத்தின் ஓர் இடத்தில் தலைவாசல் விஜய், `அது அந்த மண்ணுக்கே உரிய குணம்’ என்று சொல்வார். அந்தக் குணம், ஈழம் என்கிற வீரம்செறிந்த மண்ணில் பிறந்த உனக்கு இயல்பாகவே இருந்தது.

கடல் குதிரைகள் படத்தின் புகைப்படம்
கடல் குதிரைகள் படத்தின் புகைப்படம்

இடிந்தகரை அருகே, உடற்பயிற்சி செய்யும் காட்சியைப் படம்பிடித்தபோது, உனக்கும் உன்னுடைய பள்ளித் தோழிகளாக நடித்த மற்ற நான்குபேருக்கும் உடற்பயிற்சி அசைவுகளைச் சொல்லிக்கொடுத்துவிட்டு, படம்பிடிக்கத் தொடங்கினோம்.

மற்ற நால்வரின் அசைவுக்கும் உன் அசைவுக்கும் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிய, மீண்டும் படமாக்கினோம். அப்போதும், மற்றவர்கள் ஒரு மாதிரியும் நீ வேறு மாதிரியும் கைகளை அசைப்பது தெரிந்தது. உன்னை அழைத்து கடுமையாகக் கண்டித்தேன். `ஐவரின் அசைவும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். மற்றவர்கள் நான் சொன்னமாதிரியே செய்ய, நீ மட்டும் உன்னிஷ்டத்துக்குச் செய்கிறாயே... சொன்னால் கேட்க மாட்டியா’ என்று கடிந்துகொண்டேன்.

அருகே நின்ற கதாநாயகி ஸ்ரீ சொல்லித்தான், நீ இடக்கை பழக்கம் கொண்டவள் என்கிற உண்மை தெரிந்தது. மற்றவர்கள் வலதுகையிலிருந்து ஆரம்பிக்க, நீ இடது கையிலிருந்து தொடங்கியதுதான் பிரச்னை. கொஞ்சம் கடுமையாகப் பேசியதற்காக உன்னிடம் மன்னிப்புக் கேட்டேன். `என் மேலதான் பிழை. நான்தான் சாரி சொல்லணும்’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தாய்! அது, கள்ளங்கபடமில்லாத ஒரு பூவின் புன்னகை.

ஒருநாள், நடுக்கடல் படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது, மழை பிடித்துக்கொண்டது. நீ இருக்கிற படகு கண்ணிலேயே தெரியாத அளவுக்கு அடைமழை. கடலின் ஆவேசம் அதிகரித்து, அலைகளின் வேகம் கூடியிருந்தது.

உன் படகு பத்திரமாகக் கரைபோய்ச் சேர வேண்டும் என்கிற பரிதவிப்பில், எனக்குள் பதற்றம் தொற்றிக்கொண்டது. கரையை நெருங்கிய நிலையில், இடிந்தகரை லூர்துமாதா ஆலயத்தின் கோபுரம், மழை விழுதுகளுக்கு இடையே மெலிதாகத் தெரிய, `என் பிரஷாந்தியைப் பத்திரமாகக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடு தாயே’ என்று மனப்பூர்வமாகப் பிரார்த்தித்துக் கொண்டேன்.

கரை வந்து சேர்ந்தபோதுதான், உன் படகு எங்களுக்கு முன்பே கரை சேர்ந்திருப்பதும், நீ கரையில் நின்றுகொண்டிருப்பதும் தெரிந்தது. நான் படகிலிருந்து இறங்கியதும் ஓடிவந்து கையைப் பற்றிக் கொண்டு, ``உங்க படகைக் காணோமேன்னு பயந்து போயிட்டேன்'’ என்றாய்! கரையிறங்கியதும், நேராக லூர்து மாதா ஆலயத்துக்குத்தான் போனேன். நீயும் என்னைப் பின்தொடர்ந்து வந்துவிட்டாய். 'என் பிள்ளையைப் பத்திரமாகக் கொண்டுவந்து கரை சேர்த்ததற்கு நன்றி தாயே' என்று நான் மனத்துக்குள் பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன். அருகிலேயே நீயும் மண்டியிட்டுப் பிரார்த்தித்துக்கொண்டிருந்தாய்! உன் கண் கலங்கியிருந்தது.

ஏனென்று நீயும் சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை.

இப்போது, உன்னைக் குறித்த என்னுடைய அச்சம்கூட அர்த்தமற்றதாக இருக்கலாம். நாளையே நீ என்னைத் தேடிவந்து, என் கையைப் பிடித்து வெள்ளந்தியாகச் சிரிக்கலாம். `எனக்கு ஒண்ணும் ஆகலை அங்கிள்… நான் நல்லாத்தான் இருக்கேன்…’ என்று இயல்பாகப் பேசலாம்.

கடல் குதிரைகள் படத்தின் புகைப்படம்
கடல் குதிரைகள் படத்தின் புகைப்படம்

பிரஷாந்தி...

நான் என்னளவில் ஒரு தைரியசாலியைப் போல தோற்றமளித்தாலும், மற்றவர்கள் விஷயத்தில் அநியாயத்துக்குப் பயப்படுபவன். இந்த கியூ பிராஞ்ச் என்கிற காவல்துறைப் பிரிவு, ஈழத்துச் சொந்தங்களை எப்படியெல்லாம் கிள்ளுக்கீரையாகக் கருதுகிறது என்பதை தம்பி செந்தூரன் விஷயத்தில் கண்கூடாகப் பார்த்தவன். அதனால்தான் பயப்படுகிறேன்.

ஈழ அகதிகளுக்கு இழைக்கப்படுகிற அவமரியாதைகளையும் அநீதிகளையும் எதிர்த்து 23 நாள் உறுதிகுலையாமல் உண்ணாவிரதம் இருந்தவன், தம்பி செந்தூரன். இருபதாவது நாளன்று, என்னிடம் செந்தூரன் சொன்னது இப்போதும் நினைவிருக்கிறது. `தொப்புள் கொடி உறவுகள் என்கிற நம்பிக்கையில்தான் உயிருக்குப் பயந்து இங்கே ஓடி வரோம். விருந்தினர் மாதிரி எங்களை உபசரிக்கத் தேவையில்லை. குறைந்தபட்சம் மனிதர்கள் மாதிரியாவது நடந்த வேண்டாமா? சந்தேகத்துடனேயே பார்ப்பது என்ன நியாயம்? எங்களில் யாராவது ஒருத்தர் இந்த அநீதியை எதிர்த்துப் போராடி செத்தாத்தான் அதிகாரத்தில் இருப்பவர்கள் திருந்துவார்கள்’ என்று செந்தூரன் சொன்னதை, அப்படியே மைத்ரேயனிடம் சொன்னேன். ஜெயலலிதா அம்மையார் இருந்தபோதே, இதையெல்லாம் அவருடைய கவனத்துக்கு எடுத்துச்சென்றவர் அவர். அதனால்தான் அவரிடம் இதைச் சொன்னேன்.

23-வது நாள், அந்த உண்ணாவிரதம் முடிந்தது. மூன்று நாள் கழித்து மருத்துவர் சிவராமனிடம் செந்தூரனை அழைத்துச் சென்றபோது, செந்தூரனின் சர்க்கரை அளவைப்பார்த்து அவர் அதிர்ந்துபோனார். சர்க்கரை அளவு 480 ஆக இருந்தது. இப்போது, செந்தூரனும் மங்கையும் குழந்தைகளும் நலத்துடன் இருக்கிறார்கள் என்பது ஆறுதலளிக்கிற நல்ல செய்திதான் என்றாலும், அவர்கள் கடந்துவந்த அந்த மோசமான நாள்களை அருகிலேயே இருந்து பார்த்ததால்தான், உன் குறித்த அச்சம் அதிகரிக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு படகில் போன அகதிகள் உயிரிழந்த சம்பவங்களும், சோமாலிய`` கடற்கொள்ளையர்களிடம் பிடிபட்டதாகச் சொல்லப்பட்ட ஈழ அகதிகள் குறித்த அவலக் கதைகளும், என் அச்சத்தைப் பல மடங்காக்குகின்றன.

புகழேந்தி தங்கராஜ்
புகழேந்தி தங்கராஜ்

ஓரளவே நீச்சல் தெரிந்த நிலையிலும் நடுக்கடலில் குதிக்கச் சொன்னவுடன் குதித்த என் பிரஷாந்தி, எங்கேயிருந்தாலும் பத்திரமாகத் திரும்பி வரவேண்டும் என்று சென்னையிலிருந்தபடியே இடிந்தகரை லூர்து அன்னையிடம் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறேன், மகளே!

``தாயே, அந்த ஈழத்துக் குழந்தையை மீண்டும் என்னிடம் ஒப்படை. அவளோடு சேர்ந்து இடிந்தகரைக்கு வந்து உன்னை வணங்குகிறேன்." என்று லூர்து அன்னையின் முன் மனப்பூர்வமாக மண்டியிட்டு நிற்கிறேன். என்னுடைய இந்தப் பிரார்த்தனை நிறைவேற வேண்டும் பிரஷாந்தி.

நீ எங்கேயிருந்தாலும் சரி.

எப்படியாவது என்னை அலைபேசி வாயிலாக அழை.

`நீங்கதான் பயந்துட்டீங்க அங்கிள். எனக்கு ஒண்ணும் ஆகலை’ என்று ஒரு வார்த்தை பேசு.

அந்த அழைப்புக்காகக் காத்திருக்கிறேன் மகளே!

அடுத்த கட்டுரைக்கு