Published:Updated:

அரசு ஊழியர்கள் அரசியலில் ஈடுபடலாமா, கூடாதா?

அரசு ஊழியர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அரசு ஊழியர்கள்

சுதந்திர இந்தியாவில் மாநில அரசுகளும் மத்திய அரசும் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை உருவாக்கியுள்ளன.

திரிபுரா உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு ஒன்றில், ‘அரசு ஊழியர்கள், அரசியல்ரீதியாக கருத்துகள் கொண்டிருப்பதோ அல்லது அரசியல் கூட்டங்களில் பார்வையாளர்களாகக் கலந்துகொள்வதோ நடத்தை விதிகளுக்கு விரோதமானதல்ல’ என்று கூறப்பட்டிருந்தது. மீன்வளத் துறையில் வேலை செய்த லிபிகா புவால் என்கிற பெண் ஊழியர் ஓய்வுபெறுவதற்கு ஒரு வாரம் முன்பு திரிபுரா அரசாங்கம் அவரை தற்காலிக வேலைநீக்கம் செய்தது. 2017-ம் வருடம், குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார் என்பதே அவர்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. பணிநீக்கத்தை எதிர்த்து அந்தப் பெண்மணி தொடர்ந்த வழக்கில்தான், உயர் நீதிமன்றம் இந்தக் கருத்துகளை தெரிவித்ததுள்ளது. சரி, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவன ஊழியர்கள் அரசியலில் பங்கு பெறலாமா, கூடாதா? பார்ப்போம்.

அரசு ஊழியர்கள் அரசியலில் ஈடுபடலாமா, கூடாதா?

இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் ஆரம்பித்தபோதே அதனுடன் அரசியல் பிரசாரமும் சேர்ந்தே பயணப்பட்டது. தொழிற்சங்கங்கள் தேர்தலில் பிரசாரம் செய்வதும், அதற்காக நிதி வசூல் செய்வதும் தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல. பிரிட்டிஷார் ஆட்சியில் 1926-ம் வருடம் கொண்டுவரப்பட்ட தொழிற்சங்கச் சட்டத்தின் 16-வது பிரிவில் `தொழிற்சங்கங்கள் அரசியல் நிதியை ஏற்பாடு செய்து அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்ற உரிமை அளிக்கப் பட்டிருந்தது. அதேசமயம், `அரசியல் நிதிக்கு பணம் கொடுக்கும்படி உறுப்பினர்களை நிர்பந்திக்க முடியாது’ என்றும் கூறப்பட்டது.

1935-ம் வருட இந்திய அரசு சட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டன. கூடவே அரசு ஊழியர்களை, மாகாணங்களின் கவர்னர்களோ மத்திய கவர்னர் ஜெனரலோ விரும்பினால் காரணம் கூறாமல் வேலையைவிட்டு நீக்கலாம் என்று அதிகாரம் கொடுக்கப்பட்டது. 1936-ம் வருடம் கொண்டுவரப்பட்ட ஊதிய பட்டுவாடா சட்டத்தின்படி, தொழிற்சங்கக் கோரிக்கைகளுக்கு அல்லாமல் வேறு கோரிக்கை களுக்காக வேலைநிறுத்தம் செய்தால் எட்டு நாள்களுக்குரிய சம்பளத்தைப் பிடித்துக்கொள்ள நிர்வாகங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதன்மூலம் அரசியல்ரீதியாகச் செயல் படக்கூடிய ஊழியர்களைக் கண்டறிந்து அரசாங்கத்தால் அவர்களைக் களையெடுக்க முடிந்தது. ஓய்வுபெற்ற பிறகும் அரசு ஊழியர்கள் குற்றவியல் வழக்குகளில் (அரசியல் காரணங்களுக்காகக்கூட) தண்டிக்கப்பட்டால், அவர்களது ஓய்வூதியத்தை அரசு பறித்துக்கொள்ளலாம் என்ற விதியும் உருவாக்கப்பட்டது.

அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள்

சுதந்திரமும் அதன்மீதான கட்டுப்பாடும்!

இந்திய அரசமைப்புச் சட்டம் 1950-ல் நடைமுறைக்கு வந்த பிறகு 19(1)-வது பிரிவில் அனைவருக்கும் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகியவை அடிப்படை உரிமைகளாக அளிக்கப்பட்டன. அதேசமயம், பிரிவு 19(2)-ன்கீழ் நியாயமான கட்டுப்பாடுகளை அந்த உரிமைகள்மீது அரசு விதிக்கலாம் என்ற அதிகாரமும் வழங்கப்பட்டது. ரயில்வே தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்த பாலகோட்டையா என்கிற ஊழியர், பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப் பட்டதால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் 1958-ல் தள்ளுபடி செய்தது. `ஒரே நேரத்தில் அவர் ரயில்வே ஊழியராகவும் தொழிற்சங்கத் தலைவராகவும் இருக்க முடியாது’ என்று அதிர்ச்சி தரும் தீர்ப்பை அளித்தது.

பிறகு 1962-ல் பீகார் மாநில அரசு ஊழியர் காமேஷ்வர் பிரசாத் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘அரசு ஊழியர் களுக்கு எல்லா அடிப்படை உரிமைகளும் உண்டு. அதன்படி, அவர்கள் கருத்து உரிமைக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமைக்கும் நடத்தை விதிகளில் தடைவிதிக்க முடியாது’ என்று கூறியது. அதே சமயத்தில் `அடிப்படை உரிமை என்ற அடிப்படையில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடு வதற்கு தடைவிதிக்கலாம்’ என்றும் கூறியது.

என்ன சொல்கின்றன நடத்தை விதிகள்?

சுதந்திர இந்தியாவில் மாநில அரசுகளும் மத்திய அரசும் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை உருவாக்கியுள்ளன. அதன்படி ஊடகங்களில் அரசின் கொள்கைக்கு விரோதமாகக் கருத்து கூறுவதும், இதழ்களில் கட்டுரைகள் எழுதுவதும் தடைசெய்யப்பட்டன. மேலும், அரசு ஊழியர்கள் தேர்தலில் வாக்களிக்கலாமேயொழிய தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாது; தேர்தலில் போட்டியிடுவதற்கும் உரிமை வழங்கப்படவில்லை.

அரசு ஊழியர்கள், எந்தக் காலத்திலும் சட்டமன்ற/நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி யிட முடியாது. ‘அரசின் ஊதியம் பெறுபவர்கள் தேர்தல்களில் நிற்க முடியாது’ என்று அரசமைப்புச் சட்டம் 191(1)(a) மற்றும் 102(1)(a) பிரிவுகளின்கீழ் தெளிவாக வரையறுக்கப் பட்டுள்ளது. அதுபோலவே சீருடை அணிந்த படைவீரர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கட்டுப் படுத்தும்விதமாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்று தடை அரசமைப்புச் சட்டம் 33-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது.

நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டபோதும் அதையொட்டி சில வழக்குகள் நீதிமன்றத்துக்கு வந்தன. ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் ஒருவர் மகாராஷ்டிரம் மாநில ஊராட்சித் தேர்தலில் நின்று வெற்றிபெற்றார். அதை எதிர்த்து எல்.ஐ.சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ‘எல்.ஐ.சி ஊழியர்களின் கட்டுப்பாட்டு விதிகளில் அந்த நிறுவனத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் தேர்தலில் நிற்க முடியாது’ என்று கூறப்பட்டது. அந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், ‘நடத்தை விதிகள், ஒழுக்கக் கட்டுப்பாடு சம்பந்தப்பட்டவை; ஊராட்சித் தேர்தலில் தகுதியிழப்புக் கானதல்ல’ என்று கூறினார்.

தமிழ்நாட்டில் 1980-களில் ஊராட்சி சட்டம் திருத்தம் செய்யப்பட்டு, ‘அரசு ஊழியர்கள் ஊராட்சித் தேர்தலில் நிற்க முடியாது’ என்று தகுதியிழப்பு செய்யப்பட்டனர். இதன்மூலம் ஊராட்சிகளில் நேரடியாகப் பங்குவகிப்பது தடுக்கப்பட்டது. இதுபோன்ற விதிகள் ஜனநாயகத் துக்கு விரோதமானவை என்று அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு) போட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், ஆயிரக்கணக்கான அரசு நிறுவன ஊழியர்கள் உள்ளாட்சி நிர்வாகங் களில் பங்கு பெற முடியாத சூழ்நிலை உள்ளது.

அரசு ஊழியர்கள் அரசியலில் ஈடுபடலாமா, கூடாதா?

இதற்கு ஒரு படி மேலே சென்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தனது நடத்தை விதிகளில், ‘அரசியல் நிதி வைத்திருக்கும் தொழிற் சங்கங்களில் வாரிய ஊழியர்கள் உறுப்பினர் ஆகக் கூடாது’ என்று தடைவிதித்தது. இதை எதிர்த்து சி.ஐ.டி.யு சங்க ஊழியர் கெம்ப்ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் அந்த நடத்தை விதியை ரத்துசெய்தது. தொடர்ந்து வாரியம் தொடுத்த மேல்முறையீட்டையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வரலாற்றுப் பின்னணியில் பார்த்தால் அரசு ஊழியர்களுக்கு அரசியல் உரிமை இருக்கிறதா என்ற சந்தேகம் எழும். அரசு ஊழியர்கள், அரசியல் தேர்தல்களில் ஓட்டு போடலாம். ஆனால், அவர்களின் உறவினர்களே நின்றாலும் பிரசாரம் செய்ய முடியாது. தேர்தலில் நிச்சயம் போட்டியிட முடியாது. அரசுப் பணியில் சேர்ந்த பிறகுதான் இந்தக் கட்டுப்பாடுகள் என்றில்லை. அரசுப் பணியில் சேருவதற்கு முன்பே சம்பந்தப் பட்டவர்களின் பின்னணி குறித்து காவல்துறை நுண்ணறிவுப் பிரிவினர் தகவல் சேகரித்து அரசுத் துறைகளுக்கு ரகசியமாக அனுப்பிவைப்பார்கள். இதன்மூலம் குறிப்பிட்ட நபருடைய அரசியல் பின்னணி தெரிந்துகொண்ட அரசு நிர்வாகம், அவருக்கு வேலைவாய்ப்பை மறுத்துவிடும்.

அரசு ஊழியர்கள் தேர்தலில் வாக்களிக்கலாமேயொழிய தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாது; தேர்தலில் போட்டியிடுவதற்கும் உரிமை வழங்கப்படவில்லை.
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமாக வேரூன்றிய கேரளா மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலிருந்து மத்தியப் பணிகளுக்குச் செல்பவர்களுக்கு, இரட்டை வடிகட்டும் முறை அனுசரிக்கப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் பள்ளி ஆசிரியராக இருந்த ரகுராம் ரகுவம்சி என்பவர், மாணவர் பருவத்தில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்புகளில் பங்குபெற்றதற்காக பணியிலிருந்து நீக்கப் பட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சின்னப்ப ரெட்டி, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற தீர்ப்பை அளித்தார். ‘அரசுப் பணிகளில் சேர்ந்த பிறகு விதிக்கப்படும் நடத்தை விதிகள் வேறு. எனவே, அரசுப் பணியில் சேர்வதற்கு முன்பாக மாணவராக அரசியல் நடவடிக்கை களில் ஈடுபட்டதற்காக தகுதிநீக்கம் செய்ய முடியாது’ என்று கூறினார்.

மெக்கார்த்தியிசம்!

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் வேட்டையாடப்பட்டனர். அவர்களது பின்னணியை அறிந்துகொண்டு தொழிலகங் களிலிருந்தும் கல்வி நிலையங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர். அன்றைய அமெரிக்க உள்துறைச் செயலாளரின் பெயர் மெக்கார்த்தி. அதனால், வேட்டையை ‘மெக்கார்த்தியிசம்’ என்றார்கள். உச்ச நீதிமன்றம், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கும் மெக்கார்த்தியிசத்துக்கும் காததூரம் எனக் கூறியுள்ளது.

இந்தியாவில் அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். இந்தியா உண்மையான ஜனநாயகக் குடியரசு எனில், இத்தனை லட்சம் அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதைத் தடுக்கக் கூடாது, அனுமதிக்க வேண்டும். நேர்மையான தேர்தல், நடுநிலையான அரசு எனில் இப்படிப்பட்ட தடைகளை எல்லாம் உடைத்து, அரசு ஊழியர்களின் அனுபவங் களையும் தலைமைப் பண்பையும் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, வீணடிக்கக் கூடாது!