அலசல்
Published:Updated:

குரல்வளையை நெரிக்கும் கொரோனா... கோட்டைவிடுகிறதா அரசு?

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள்

‘தி.மு.க கோரிக்கை விடுத்ததை உடனே ஏற்கக் கூடாது’ என்ற அரசியல் காரணத்துக்காகவே மார்ச் 23 வரை கூட்டத்தை நடத்தியது.

சுற்றிலும் எப்போதும் பத்துப் பதினைந்து பேரை வைத்துக்கொண்டு அடிக்கடி ஊடகங்களைச் சந்திக்கிறார், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். கொரோனா பாதிப்புகள் குறித்து அவ்வப்போது ட்விட்டரிலும் பதிவுகளை இட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் போடும் பதிவுகளுக்கும், சொல்லும் பதில்களுக்கும், தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரணச் சூழலுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாகக் கொந்தளிக் கிறார்கள் விவரமறிந்த மருத்துவத் துறையினர்.

தமிழகத்தில் எங்கெங்கே, எந்த அளவில் பாதிப்பு என்பது குறித்து எந்தவிதமான திட்டவட்டமான தகவல்களையும் தமிழக அரசு இதுவரை வெளியிடவே இல்லை. சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை முடக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்திய பிறகே, இந்த மூன்று மாவட்டங்களும் கொரோனா பாதிப்பில் முன்னிலையில் இருக்கின்றன என்ற உண்மையே தமிழக மக்களுக்குத் தெரியவந்தது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதற்குப் பிறகே, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 24 மாலை 6 மணி முதல் முதல் மார்ச் 31 வரை தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு. இதன்படி அத்தியாவசியப் பணிகள் தவிர மற்ற பணிகள் அனைத்தும் முடக்கப்படும். கடைகள், பொதுப்போக்குவரத்து எதுவும் இருக்காது. மாநில அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகள் மிகவும் தாமதமானவை என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்திருக்கிறது. ஏனெனில், ஏற்கெனவே கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் அரசு மெத்தனமாக இருந்தது தற்போது வெளிப்பட்டுவருகிறது.

மக்களுக்கு முன்மாதிரியாக, ஓரிடத்தில் பெருமளவில் கூடுவதைத் தவிர்க்கும்பொருட்டு சட்டமன்றக் கூட்டத்தொடரை முதலில் தள்ளிவைத்திருக்க வேண்டிய தமிழக அரசு, ‘தி.மு.க கோரிக்கை விடுத்ததை உடனே ஏற்கக் கூடாது’ என்ற அரசியல் காரணத்துக்காகவே மார்ச் 23 வரை கூட்டத்தை நடத்தியது. அது முதல் தவறு. அதைப் பார்த்த மக்கள், ‘எம்.எல்.ஏ-க்கள் இத்தனை பேருமே ஓரிடத்தில் கூடுகிறார்களே’ என்ற எண்ணத்தில் குடும்ப விழாக்கள், பொது இடங்கள், திருவிழாக்களில் ஒன்றுகூடிக்கொண்டிருந்தனர்.

அமைப்பு சாரா தொழிலாளர்கள், குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களின் நலன் பார்த்து அவசரப்பட விரும்பவில்லை என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. ஆனால், இப்போது வரை அந்தத் தொழிலாளர்களுக்கு மானியம் அல்லது நிதியுதவி வழங்குவது குறித்து எந்தவிதமான முடிவையும் மத்திய அரசு, மாநில அரசு இரண்டுமே எடுக்கவில்லை. அதேபோன்று சிறு வியாபாரிகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கான உதவிகள் குறித்தும் அரசுத் தரப்பில் எந்த உறுதியும் தரப்படவில்லை.

கொரோனா வைரஸ் சிகிச்சையில் அரசு மருத்துவர்கள்தான் கடும் சிரத்தையோடு பணியாற்றுகிறார்கள். தனியார் மருத்துவ மனைகளின் பங்களிப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அரசு இதில் நடவடிக்கை எடுத்து, அவர்களின் பங்களிப்பை உறுதிசெய்திருக்க வேண்டும். அதிலும் பெரும்தாமதம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பை வைத்து பரிசோதனை, முகமூடி விற்பனை போன்றவற்றை வைத்தும் பெரும்கொள்ளை நடக்கத் தொடங்கியிருக்கிறது. அதிலும் உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்ற வருத்தம், சமூக அக்கறையுள்ள மருத்துவர்களிடம் இருக்கிறது.

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தின்போது...
கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தின்போது...

இப்படியோர் அசாதாரண சூழலிலும் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த மாணவர்களின் மனநிலை, பெற்றோரின் அச்சம் எதைக் குறித்தும் அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இதையும்விட ஒரு கொடுமை, பள்ளிக் கல்வித் துறை செய்திருப்பது. துறையின் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுவாசலில், ‘அமைச்சரைப் பார்க்க யாரும் வர வேண்டாம்’ என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவருடைய துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை, மாணவர்களே இல்லாத நிலையிலும் பள்ளிக்கு வருமாறு உத்தரவு போடப்பட்டிருக்கிறது.

இன்னும் பல கிராமங்களில் சிறுசிறு திருவிழாக்கள் நடந்துகொண்டிருக்கின்றன. காவல் துறைக்கு தெளிவான ஓர் அறிவுறுத்தலை காவல்துறை தலைமை வழங்காததால் திருவிழாக்கள் நடப்பதைத் தடுக்காமல் காவல் துறையும் வேடிக்கை பார்த்துவருவதாகத் தெரிகிறது. இப்படியாக எல்லா துறைகளுமே கொரோனா வைரஸ் விவகாரத்தில் மெத்தனப்போக்கையே கடைப்பிடிப்பது தெளிவாகிறது.

மார்ச் 23-ம் தேதிக்குப் பிறகே இந்த விவகாரத்தில் தமிழக அரசு கொஞ்சம் சீரியஸாகி இருக்கிறது. அன்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களின் வீட்டுக்கதவில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்கிற விவரத்தை ஒட்ட வேண்டும். தனியார்வசமும் கொரோனோ பரிசோதனை வசதியை ஏற்படுத்த வேண்டும். சோதனைச் சாவடிகளில் சோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஏற்கெனவே ஒதுக்கியிருந்த 60 கோடி ரூபாய் நிதியை, இப்போது 500 கோடி ரூபாயாக உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு.

ஆனால், இதற்கு முன்பே வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்த பல்வேறு நபர்களால் கொரோனா ஊடுருவல் அதிகமாகிவிட்டதால், இந்த விவகாரத்தில் அரசு கோட்டைவிட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழக விமானநிலையங்களில் இதுவரை 2,05,391 பேருக்கு சோதனை நடைபெற்றுள்ள தாகவும், 54 பேர் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அரசு கூறியுள்ளது. ஆனால் ஈரோட்டில் நடந்த விஷயம், அரசின் மெத்தனத்தையும் மறைக்கும் முயற்சிகளையும் அம்பலப்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய மதப் பிரசாரத்துக்காக, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் மார்ச் 11-ம் தேதி ஈரோடு வந்துள்ளனர். இவர்கள் ஈரோடு சுல்தான்பேட்டை மற்றும் கொல்லம்பாளையம் மசூதிகளில் மூன்று நாள்கள் தங்கியிருந்து மதப்பிரசாரம் மேற்கொண்டிருக்கின்றனர். அவர்களில் இருவர் 16-ம் தேதி தாய்லாந்து நாட்டுக்குத் திரும்புவதற்காக கோவை விமான நிலையம் சென்றுள்ளனர். அங்கு நடந்த பரிசோதனையில், ஒருவருக்கு தீவிரமான காய்ச்சல் இருப்பது தெரியவந்திருக்கிறது. கொரோனா தொற்றாக இருக்கலாம் எனச் சந்தேகித்து, தாய்லாந்து செல்லவிருந்த இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்தான், ஈரோட்டில் இன்னும் ஐந்து தாய்லாந்து நாட்டினர் இருக்கின்றனர் எனத் தெரியவந்தது. அந்த ஐந்து நபர்களையும் பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதற்கிடையே கோவையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர், உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

மருத்துவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை - கொரோனா வார்டு - செங்கோட்டையன் வீட்டுவாசலில் போர்டு
மருத்துவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை - கொரோனா வார்டு - செங்கோட்டையன் வீட்டுவாசலில் போர்டு

‘கொரோனாவால் இந்த இறப்பு ஏற்படவில்லை’ என அதிகாரிகள் ஆறுதலளித்த வேளையில், ஈரோட்டில் அனுமதிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினர் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் கோவையில் இறந்தவரும் கொரோனா தொற்றில்தான் இறந்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்குப் பிறகே ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வேகமெடுக்க ஆரம்பித்தன. தாய்லாந்து நாட்டினர் ஏழு பேரும் டெல்லியிருந்து ரயில் மூலமாகவே ஈரோடு வந்திருக்கின்றனர். மூன்று நாட்களாக ஈரோட்டில் உள்ள மசூதிகளில் தங்கியிருந்து பல நூறு பேரைச் சந்தித்திருக்கின்றனர். ஈரோட்டின் மையப் பகுதியான சுல்தான்பேட்டை மசூதியில் தங்கியிருந்தவர்கள், அருகில் உள்ள வணிக வளாகங்கள், துணிக்கடைகள் என ஈரோட்டின் முக்கிய வீதிகளில் சுற்றியிருக்கின்றனர்.

இந்தத் தகவலெல்லாம் தெரிந்த பிறகும் அவர்கள் தங்கியிருந்த மசூதி, அவர்கள் சந்தித்த மனிதர்கள், அந்தச் சாலைகள் என எதையும் மாவட்ட நிர்வாகம் கட்டுக்குள் கொண்டுவர வில்லை. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்குப் பிறகே தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த மசூதிகளை மூடியும், அவர்கள் பயன்படுத்திய சாலைகளுக்குள் நுழையவும் தடைசெய்திருக்கின்றனர். தாய்லாந்து நாட்டினரால் தொற்று பரவியிருக்கக்கூடும் என அவர்கள் தங்கியிருந்த பகுதியில் உள்ள 695 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக் கப்பட்டுவருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், பவானி அருகே மயிலம்பாடியில் உள்ள யார்ன் மில்லில் வேலை செய்த பீகாரைச் சேர்ந்த இருவர் கடுமையான காய்ச்சலின் காரணமாக கோவைக்கு அனுப்பப் பட்டிருக்கின்றனர். அந்த மில்லில் வேலைசெய்த வடமாநிலத்தவர் மூன்று பேர், மில் உரிமை யாளரின் குடும்பத்தினர் ஒன்பது பேர் எனத் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டுவருகின்றனர். மத்திய அரசின் அறிவிப்பால் மாவட்டமே இப்போது முடக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்குள் எங்கெங்கே, எவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அரசும் மாவட்ட நிர்வாகமும் இதில் கோட்டைவிட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவமனைகள், மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம்தான். ஆனால், பெருமளவில் பாதிப்பு என வரும்போது அதெல்லாம் எம்மாத்திரம் என்ற கேள்வி எழுகிறது. இத்தாலி போன்ற மிகக் குறைவான மக்கள்தொகை கொண்ட நாட்டிலேயே கொரோனா உயிரிழப்பு கொத்துக்கொத்தாக அதிகரித்துவரும் நிலையில், அதிக மக்கள்தொகை இருக்கும் இந்தியாவில் நிலைமையைச் சமாளிப்பது மிகவும் சிரமம்தான் என்பதோடு, மொத்தமே ஒரு லட்சம் ஐ.சி.யூ பெட்கள் மட்டும் இருக்கும் இந்தியாவில், அவசர காலத்துக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களும் போதிய அளவில் இல்லை என்கிறார்கள் விவரமறிந்த மருத்துவர்கள். இதனால் பாதிப்பு அதிகளவில் வரும்போது, பணம் படைத்தவர்கள், அதிகாரம் படைத்தோர்க்கு மட்டுமே தகுந்த சிகிச்சைகள் கிடைக்கும் சூழ்நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

குரல்வளையை நெரிக்கும் கொரோனா... கோட்டைவிடுகிறதா அரசு?

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, இதுவரை செயல்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கூடுதல் இயக்குநர் அந்தஸ்தில் புதிதாக மக்கள் தொடர்பு அலுவலர் ஒருவரும், உதவி மக்கள் தொடர்பு அலுவலரும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ளனர். களத்தில் ஏழெட்டு உதவியாளர்கள் வேறு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு ட்விட்டரில் அவ்வப்போது அப்டேட் செய்வதையும், மீடியாக்கள் முன்பாக வந்து பேட்டிக்கொடுப்பதையும் தவறாமல் செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர். ஆனால், பின்வாசல் வழியாக கொரோனா மெள்ள மெள்ள ஊருடுவி, ஊரடங்கு போடும் நிலை வரை கொண்டுவந்ததுதான் மிச்சம்.

கிட்டத்தட்ட தலைக்கு மேலே வெள்ளம் போக ஆரம்பித்துவிட்டது. இந்த நொடிகளிலாவது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உண்மை பேச விஜயபாஸ்கரும் தமிழக அரசும் முன்வர வேண்டும். இல்லையேல், ஒட்டுமொத்த தமிழகத்தில் குரல்வளையை கொரோனா கபளீகரம் செய்வதைத் தவிர்க்கவே முடியாமல் போய்விடும், ஜாக்கிரதை!