Published:Updated:

குடிக்கட்டும் தமிழ்நாடு... பரவட்டும் கொரோனா...

டாஸ்மாக்
பிரீமியம் ஸ்டோரி
டாஸ்மாக்

‘இதுதானா சார் உங்க திட்டம்?’

குடிக்கட்டும் தமிழ்நாடு... பரவட்டும் கொரோனா...

‘இதுதானா சார் உங்க திட்டம்?’

Published:Updated:
டாஸ்மாக்
பிரீமியம் ஸ்டோரி
டாஸ்மாக்
கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் நிலையில், டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு தமிழகம் எங்கும் கொரோனா ஹாட்ஸ்பாட்களை உருவாக்கத் தொடங்கியுள்ளது தமிழக அரசு.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த 43 நாள்களாக டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. மது வாங்க மக்கள் வெளிமாநிலத்துக்குச் செல்கின்றனர் எனக் காரணம்காட்டி, குடியை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய குடிமகன்களை, மீண்டும் டாஸ்மாக் வாசலில் நிறுத்தியுள்ளது தமிழக அரசு. இதனால் ஏற்படப்போகும் சட்டம் ஒழுங்குப் பிரச்னை, குடும்ப வன்முறைகள் என எதைப் பற்றியுமே அரசு சிந்திக்கவில்லை.

அரசு சொல்லும் எல்லை தாண்டும் குடிமகன்கள் கதையையெல்லாம் ஏற்க முடியாது. சரக்கடிப்பதற்காக மொத்த தமிழகமும் ஆந்திரா, கர்நாடகா கிளம்பிவிட்டதா என்ன? கடந்த பத்து ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில், தமிழக அரசின் பொருளாதாரக் கட்டமைப்பை டாஸ்மாக்கை நம்பியே வைத்திருந்ததும், புதிய வருவாய் வரும் வழிகளை உருவாக்காததுமே இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம். இவர்களின் தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கையால் தமிழகத்தின் நிதி நெருக்கடி முற்றியதே, டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பதற்கு அடிப்படை காரணம்.

ஊரடங்கு உத்தரவு அமலான மார்ச் இறுதியிலிருந்து ஏப்ரல் 7-ம் தேதி வரை, கடன் பத்திரங்கள் விநியோகித்ததன் மூலமாக தமிழக அரசு 10,560 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளின்படி, இந்த நிதியாண்டில் 28,500 கோடி ரூபாய் வரை நாம் கடன் பெற்றுக்கொள்ளலாம். இப்போதே 37 சதவிகிதம் கடனைப் பெற்றுவிட்டோம். இப்படி இருந்தும் நிலைமை சரியாகவில்லை. கஜானா காலி என்பதுதான் நிதர்சனம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்த இரண்டு மாதங்களில் அரசு ஆசிரியர்கள் உட்பட 30,000 அரசு ஊழியர்கள் பணி ஓய்வுபெறவுள்ளனர். இவர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை வழங்குவதற்குகூட அரசிடம் நிதி இல்லை. இதனால்தான், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 59 ஆக உயர்த்தி அவசர ஆணை பிறப்பிக்கப்பட்டதாம்.

குடிக்கட்டும் தமிழ்நாடு... பரவட்டும் கொரோனா...

தமிழக நிதித் துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ‘‘தமிழக அரசுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி வருவாய், பத்திரப்பதிவு வருவாய், டாஸ்மாக் வருவாய் என மூன்று வழிகளில் ஆண்டுதோறும் 91,000 கோடிக்கு குறையாமல் நிதி வருகிறது. கொரோனாவின் தாக்கத்தால் இதில் ஓட்டை விழுந்து, கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவே பணம் இல்லாமல் தவித்துவிட்டோம்.

ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை என்பதால், பெட்ரோல், டீசல் நுகர்வு பெருமளவு குறைந்துள்ளது. ஊரடங்கு நேரத்திலும் பத்திரப்பதிவு அலுவலகங்களைத் திறந்துவைத்திருந்தும், பெரியளவு சொத்துகள் கைமாறவில்லை. அதனால், இவை இரண்டின் மூலம் கிடைக்கும் வரி வருவாய் அரசுக்குக் கிடைக்கவில்லை.

மிச்சம் இருப்பது டாஸ்மாக்தான். ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கொடுக்கும் தொழில் என்பதால், நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அரசு வேறு வழியின்றி டாஸ்மாக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளது. மதுபானங்களின் விலையும் 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியும் எனக் கருதுகிறோம்’’ என்றார்.

ஏப்ரல் 14-ம் தேதி, உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘மது அருந்துவதால் கொரோனா வைரஸின் தாக்கம் குறையும் என்பது தவறான கருத்து. மது அருந்துவதால், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து, கொரோனா வைரஸ் தாக்குவதற்கு சுலபமாக வழி அமைத்துக் கொள்கிறோம். இந்தச் சூழலில், மது அருந்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். பொதுமக்களுக்கு மதுபானம் கிடைப்பதை அரசுகள் கடினமாக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தது.

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு சற்றும் பொருந்தாத ஒரு நடவடிக்கையைத்தான் தமிழக அரசு தற்போது எடுத்துள்ளது. ‘‘பொருளாதார நெருக்கடிதான் காரணம் என்றால், டாஸ்மாக்கைவிட அதிக லாபம் தரக்கூடிய மணல், கிரானைட் தொழில்களை அரசே ஏற்று நடத்தலாம்’’ என சி.பி.ஐ-யின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இதையெல்லாம் பரிசீலிக்கக்கூட விரும்பாத தமிழக அரசு, டாஸ்மாக்கைத் திறந்துவிட்டு தமிழ்நாட்டையே சுடுகாடாக்கும் ஓர் அபாயத்தை உருவாக்கிவைத்துள்ளது. டாஸ்மாக்கில் மது வாங்க ஆதார் எண், குடை, வயது அடிப்படையில் நேரக் கட்டுப்பாடு என அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் எல்லாம் எவ்வளவு நாள்களுக்கு கடைப்பிடிக்க முடியும் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

கோயம்பேடு மார்க்கெட் போன்று, தமிழக டாஸ்மாக் கடைகள் மூலமாக கொரோனா தொற்று பரவினால், அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறதா? ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் காய்ச்சலோடு மருத்துவமனைக்கு வந்தால் தேவையான படுக்கைகள், மருந்துகள் எங்கே இருக்கின்றன?

‘இதன் ஆபத்தை உணர்ந்திருந்தும், எடப்பாடி பழனிசாமி எப்படி ஒப்புக்கொண்டார்?’ என்ற கேள்வியுடன், மூத்த அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். ‘‘கொரோனாவால் உடல்நலன் பாதிப்பு இருக்குமேயொழிய, உயிரிழப்புகளின் விகிதாசாரம் மிகக் குறைவு. அதுவும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை முறையாக உட்கொண்டால் உயிரிழப்பு இருக்காது என முதல்வருக்கு சில அதிகாரிகள் ஆலோசனை அளித்துள்ளனர். மருந்து கண்டுபிடிக்க முடியாத வரை இந்த வைரஸை முழுமையாக ஒழிக்க முடியாது. ஆகவே, பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க, டாஸ்மாக் உட்பட மற்ற கடைகளையும் திறப்பதைத் தவிர வேறு வழியில்லை. முதற்கட்டமாக ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. சமூகப் பரவல் ஏற்படாதவாறு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

‘நாங்கள் கடைகளைத் திறப்போம், மதுவையும் விற்போம், கொரோனாவையும் பரப்புவோம். சமூக விலகலைக் கடைப்பிடித்து மக்கள்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒருவேளை தொற்று ஏற்பட்டாலும்கூட, மக்கள் சரியில்லை என்று பழியை அவர்கள்மீது போட்டுக்கொள்ளலாம்’ என அரசாங்கம் முடிவெடுத்துவிட்டதோ என்கிற அச்சத்தை, அரசின் நடவடிக்கைகள் எழுப்புகின்றன.

எடப்பாடியின் நடவடிக்கைக்குப் பின்னணியில் அரசியலும் இருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘‘கொரோனா நிவாரண நடவடிக்கைக்கு 18,000 கோடி ரூபாய் ஒதுக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ளது. ஆனால், இதுவரை 510 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ‘தேனி, திருச்சி, நெல்லை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு அனுப்பிய `என்.95’ மாஸ்குகள் சென்றாலும் கோவை, மதுரை மருத்துவமனைகளுக்கு உரிய உபகரணங்கள் செல்லவில்லை’ என மத்திய அரசுக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது. இத்துடன் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் முறைகேடு, தவறான திட்டமிடல்கள் என தமிழக அரசு மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியால், ‘எங்கே நிதியை இவர்கள் தவறாகக் கையாண்டுவிடுவார்களோ..!’ என மத்திய அரசு கொரோனா நிவாரண நிதியை ஒதுக்கவில்லையாம்.

குடிக்கட்டும் தமிழ்நாடு... பரவட்டும் கொரோனா...

“மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கான நிதியைக் கேட்டுப் பெற தமிழக அரசுக்கு வக்கில்லை. அதனால்தான் திட்டமிட்டே மதுக்கடைகளைத் திறந்துவிட்டுள்ளனர்” என்று குற்றம்சாட்டும் அனைத்துக் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், “இதன்மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி.

எப்படியும் டாஸ்மாக் மூலமாக எதிர்பார்த்த வரும்படி கிடைத்துவிடும். அதேசமயம், கொரோனா உச்சத்தில் இருக்கும் சென்னையிலேயே முழு சுதந்திரம் அளித்து உலவவிட்டிருக்கிறார்கள். சென்னையிலிருந்து தமிழகம் முழுக்க மக்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். இதனால் தமிழகம் முழுக்க கொரோனா வேகமாகப் பரவிவருகிறது. பச்சை மண்டலத்தில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், கொரோனாவே இல்லை என்று குஷியோடு சொல்லிக் கொண்டிருந்த கொடைக்கானலிலும் தற்போது கால் பதித்துள்ளது கொரோனா. இத்துடன், சென்னை நீங்கலாக தமிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டிருக் கிறார்கள். இதுவும் கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கவே செய்யும். இதன்மூலமாக தானாகவே நெருக்கடி முற்றி, தமிழகம் கேட்ட நிதியை ஒதுக்கும் சூழ்நிலைக்கு மத்திய அரசு தள்ளப்படும்.

ஆக, அரசின் கஜானாவை நிரப்புவதற்காக, ‘குடிக்கட்டும் தமிழ்நாடு’ என்கிற கொடூர முடிவை எடுத்துள்ளது அரசு. இதுவே, ‘பரவட்டும் கொரோனா’ என்கிற வேதனைப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது’’ என்று குமுறுகிறார்கள்.

எடப்பாடி சார், இதுதானா உங்க திட்டம்?

‘‘இவர்களுக்கு வருமானம்தான் முக்கியம்!’’

- பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சி.பி.எம்.

‘‘40 நாள்களாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் 20 நாள்கள் கடைகளை மூடியிருந்தால் குடிப்பவர்களிடையே குடிப்பழக்கம் குறைந்திருக்கும். அப்படி நடந்துவிடக் கூடாது, வருமானம் போய்விடக் கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்துள்ளனர். மதுபான ஆலை முதலாளிகளின் அழுத்தத்துக்கு அரசு பணிந்துவிட்டது.’’

‘‘ஊரடங்கின் நோக்கம் சிதைந்துவிட்டது!’’

- முத்தரசன், மாநிலச் செயலாளர், சி.பி.ஐ.

‘‘ஊரடங்கின் நோக்கம், டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டதன் மூலமாகச் சிதைந்துவிட்டது. ஆதார் இருந்தால்தான் மதுபானம் என்கிறார்கள். இதனால், உள்ளூர்வாசிகள் மதுபானங்களை வாங்கி வைத்து வெளியூர்வாசிகளுக்கு விற்பார்கள். கள்ளச்சந்தைதான் பெருகும்.’’

பாலகிருஷ்ணன், முத்தரசன், மா.சுப்பிரமணியன், வழக்கறிஞர் பாலு, தாம்பரம் நாராயணன்
பாலகிருஷ்ணன், முத்தரசன், மா.சுப்பிரமணியன், வழக்கறிஞர் பாலு, தாம்பரம் நாராயணன்

‘‘காவலர்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள்!’’

- மா.சுப்பிரமணியன், தி.மு.கழக எம்.எல்.ஏ.

‘‘கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துணை ஆணையர் உட்பட 54 காவலர்களை, கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இந்தச் சூழலில் சிறிய டாஸ்மாக் கடைக்கு இரண்டு காவலர்கள், பெரிய கடைக்கு நான்கு காவலர்கள் என அவர்களை பலிகாடா ஆக்கியிருப்பது காவலர்களின் கொரோனா தடுப்புச் சேவையைக் கொச்சைப்படுத்துவதாகும்.’’

‘‘கொரோனாவைப் பரப்புவது அரசாங்கம்தான்!’’

- தாம்பரம் நாராயணன், செய்தித் தொடர்பாளர், அ.ம.மு.க.

‘‘அரசு சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. டாஸ்மாக்கைத் திறந்துவிட்டு அந்த எண்ணத்தை அரசே கேலிப்பொருளாக்கிவிட்டது. இப்போது கொரோனாவை அரசாங்கம்தான் பரப்புகிறது. ஊரடங்கு காலத்திலும் மதுபானம் வாங்க மாநில எல்லையைத் தாண்டுகிறார்கள் என்று காரணம் கூறும் அரசு, அவர்களை போலீஸ் எப்படி அனுமதித்தது, இதில் எந்தெந்த அதிகாரிகள், அமைச்சர்கள் உடந்தை என்பதையும் அறிவிக்குமா?’’

‘‘இது பெரிய அவமானம்!’’

- வழக்கறிஞர் பாலு, செய்தித் தொடர்பாளர், பா.ம.க.

‘‘கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள இந்தச் சூழலில், டாஸ்மாக் கடைகள் ஹாட்ஸ்பாட் ஏரியாக்களாக மாறப்போகின்றன. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள்கூட, ஊரடங்கு ஏற்படுத்திய குடும்ப நெருக்கத்தால் குடியை மறந்து இருந்தார்கள். இப்போது அரசே அதை அவர்களுக்கு ஞாபகப்படுத்திவிட்டது. இதனால் குடும்ப வன்முறை தலைவிரித்தாடப்போகிறது. மதுவால் கிடைக்கும் வருவாயை வைத்துதான் அரசை நடத்த வேண்டுமென்றால், அது பெரிய அவமானம்.’’