Published:Updated:

`பழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்த வேலூர் மூதாட்டி!’ - கரம்கொடுத்த எம்.எல்.ஏ நந்தகுமார்

பண உதவிசெய்த எம்.எல்.ஏ நந்தகுமார்
பண உதவிசெய்த எம்.எல்.ஏ நந்தகுமார்

பழைய ரூபாய் நோட்டுகளுடன் மூதாட்டி தவிப்பதாக விகடனில் வெளியான செய்தியை அறிந்து, அணைக்கட்டு எல்.எல்.ஏ நந்தகுமார் அந்த மூதாட்டிக்கு ரூ.12,000 பண உதவிசெய்தார். அத்துடன், காசநோய்க்குச் சிறப்பு மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

வேலூர் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி புவனேஸ்வரி. இவர், ரூ.12,000 மதிப்பில் செல்லாத பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்குத் தள்ளாடியபடி வந்தார். கலெக்டர் சண்முகசுந்தரம் அலுவல் ரீதியாக வெளியில் சென்றிருந்ததால், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபனை சந்தித்துக் கண்ணீர்விட்டு அழுதார்.

பழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்த மூதாட்டி
பழைய ரூபாய் நோட்டுகளுடன் தவித்த மூதாட்டி

``நான், கணவரால் கைவிடப்பட்டவள். எனக்கென்று யாருமில்லை. வாடகை வீட்டில் தங்கி கூலி வேலைக்குச் சென்று சிறுகச் சிறுக ரூ.12,000 பணம் சேர்த்து வைத்திருக்கிறேன். பணம் செல்லாது என மோடி அறிவித்தது பற்றி எனக்குத் தெரியாது. அதுமட்டுமன்றி, காசநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தேன்.

இப்போதெல்லாம் வேலைக்குச் செல்ல முடியவில்லை. சேர்த்து வைத்த பணத்தை வீட்டு வாடகை, சாப்பாட்டுச் செலவுக்கு பயன்படுத்த முயன்றேன். யாருமே வாங்கவில்லை. நான், கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம். அதை மாற்றி புதிய ரூபாய் நோட்டுகளாகத் தர வேண்டும்’’ என்று பரிதாபமாகக் கூறினார்.

பழைய ரூபாய் நோட்டுகள்
பழைய ரூபாய் நோட்டுகள்

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை அழைத்து விசாரித்தபோது, ``ரிசர்வ் வங்கி உத்தரவின்படி, பழைய ரூபாய் நோட்டுகளை இனி எக்காரணம் கொண்டும் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தர இயலாது’’ என்றுகூறினார். அதிகாரிகள் கைவிரித்ததால், கண்ணீருடன் வீடு திரும்பினார் மூதாட்டி புவனேஸ்வரி.

இதுபற்றி, `விகடன்’ இணையத்தில் விரிவான செய்தியை வெளியிட்டிருந்தோம். விகடன் வாசகர்கள் பலர் உதவிசெய்வதாக முன்வந்தனர். அதற்குள், `விகடன்’ செய்தியை அறிந்து அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ-வும் தி.மு.க மாவட்டச் செயலாளருமான ஏ.பி.நந்தகுமார், மூதாட்டி புவனேஸ்வரியை இன்று நேரில் வரவழைத்து உதவிசெய்துள்ளார்.

பண உதவிசெய்த எம்.எல்.ஏ நந்தகுமார்
பண உதவிசெய்த எம்.எல்.ஏ நந்தகுமார்

பழைய 500 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்ட அவர், ரூ.12,000-க்கு புதிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மூதாட்டியின் கண்ணீரைத் துடைத்துவிட்டார். மேலும், காசநோயால் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்குத் தேவையான சிகிச்சையை உடனடியாக அளிக்குமாறு வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் சிபாரிசு செய்துள்ளார். எம்.எல்.ஏ நந்தகுமாரை பல தரப்பினர் பாராட்டி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு