Published:Updated:

“தமிழ் ஈழம் என்பது நிறைவேறாத கனவாகிவிட்டது!”

 நிலாந்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
நிலாந்தன்

நிலைமையை விளக்குகிறார் ஈழ எழுத்தாளர் நிலாந்தன்

இலங்கையில் இப்போது அமைதி நிலவுவதைப்போல் தெரிந்தாலும், உள்ளுக்குள் இனப்பகைமை நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது. ஆட்சிக் குழப்பம், ஈஸ்டர் குண்டுவெடிப்பு, ஜனாதிபதி தேர்தல், ராஜபக்சேக்களின் அரியணை ஏற்றம் உள்ளிட்டவற்றைக் கடந்து, தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவருகிறது இலங்கை. இருப்பினும், தமிழர்கள் வாழ்வில் எந்த மாற்றத்துக்குமான அறிகுறியும் தெரியவில்லை. தற்போது அங்குள்ள நிலைமை குறித்து, சென்னை வந்திருந்த ஈழ எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகர் நிலாந்தனிடம் பேசினோம்...

‘‘ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு இலங்கையில் என்ன சூழல் நிலவுகிறது?’’

‘‘ராஜபக்சே குடும்பத்தைப் பற்றித் தெரிந்ததால்தான், அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் வாக்களித்தனர். போர்க்காலங்களுக்குப் பிறகு குறைந்திருந்த ராணுவ சோதனைகள் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. போர்ப்பதற்றம் இல்லையென் றாலும், போர்க்கால சூழ்நிலைகள் தமிழர் பகுதிகளில் மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ‘தனித்தமிழ் ஈழம்’ என்ற கனவு கலைந்துவிட்டதா?’’

‘‘அது ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான கனவு. அந்தக் கனவு இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு பிராந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் எந்த ஒரு சாத்தியமும் இல்லை. ஆயுதப்போராட்டத்திலேயே சாத்தியப்படாத தனி ஈழக் கோரிக்கையை இன்றைய உலக யதார்த்தத்தில் கனவாகக்கூட கற்பனை செய்துபார்க்க முடியாது. `பிரிவினை என்பதை ஏற்றுக்கொள்ளவேயில்லை’ என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து பிரகடனம் செய்துவருகின்றனர். இந்த நிலையில் இனி ஈழம் என்பது நிறைவேறாத ஒரு கனவு மட்டுமே.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 நிலாந்தன்
நிலாந்தன்

“ ‘பெரும்பான்மை மக்கள் விரும்பாத எதையும் செய்ய மாட்டோம்’ என்று கோத்தபய ராஜபக்‌சே தெரிவித்துள்ள கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளால் மட்டுமே கோத்தபய வெற்றி பெற்றிருக்கிறார் என்பது தவறான கணக்கு. சிறுபான்மையினர் வாக்குகளும் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். ஜனாதிபதி தேர்தலில் உருவாக்கப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத அலையைத் தக்கவைத்துக்கொள்ளவும் அவ்வாறு பேசியிருக்கலாம். பெரும்பான்மைவாதம் மேலோங்கி, இனரீதியாக இலங்கை மேலும் பிளவுபடுவதைத்தான் இது காட்டுகிறது.”

“ ‘காணாமல்போனவர்களை விடுதலைப்புலிகள்தான் பிடித்துச் சென்றனர். அவர்கள் அனைவரும் இறந்து விட்டனர்’ என்றும் கோத்தபய சொல்லியிருக்கிறாரே?’’

‘‘இந்தக் கருத்தை கோத்தபய மட்டுமே தெரிவிக்கவில்லை. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேகூட ‘காணாமல்போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்’ என்று மங்கலகரமான ஒரு பொங்கல் நாளில் அமங்கலமான செய்தியைச் சொன்னார். தமிழ்த் தலைவர்கள்கூட, காணாமல்போனவர்கள் உயிருடன் இருப்பதாக நம்பவில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தக் கருத்தும் வந்திருக்கிறது. காணாமல்போனவர்கள் உயிருடன் இல்லை என்பது கொடுமையான உண்மைதான். காணாமல்போனவர்களை ராணுவத்திடம் ஒப்படைத்த நேரடி சாட்சியங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு என்ன ஆனது என்பதற்குத்தான் அரசு பதிலளிக்க வேண்டும்.”

“நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் எவ்வாறு இருக்கும்?’’

‘‘ஜனாதிபதி தேர்தலின் தொடர்ச்சியாகவே இருக்கும். யுத்த வெற்றி அலையை அறுவடை செய்யவே ராஜபக்சேக்கள் முயல்வார்கள். ஜனாதிபதி தேர்தலில், ஈஸ்டர் குண்டுவெடிப்பு பேசுபொருளாக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் மீண்டும் யுத்தக்கால நினைவுகளைத் தூண்டி பெரும்பான்மை வாக்குகளைக் குறிவைத்தே ராஜபக்சேக்கள் செயல்படுவார்கள். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று 19-வது சட்டத்திருத்தத்தை நீக்கி ஜனாதிபதிக்கு சர்வ அதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதே ராஜபக்சேக்களின் இலக்கு.”

“ராஜபக்சேக்களை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கின்றனவா?”

‘‘சஜித் - ரணில் மோதல் இன்றுவரை முடியவில்லை. ராஜபக்சேக்களை எதிர்கொள்ள எதிர்த்தரப்பு வலுவாக இல்லை. ஒருபுறம் பெரும்பான்மை வாக்குகளை ஒருங்கிணைப்பது மட்டுமல்லாமல், சிறுபான்மை வாக்குகளைச் சிதறடிக்கும் வேலைகளிலும் ராஜபக்சே தரப்பு நீண்டகாலமாகவே ஈடுபட்டுவருகிறது. அதுதான் தற்போதும் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள், உட்கட்சி மோதல்களால் சிதறுண்டு கிடக்கின்றன.”

‘‘இலங்கையில் தமிழர்கள் தலைமையின்றி தவிக்கின்றனர் என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. அங்கு உள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் நிலை என்ன?’’

‘‘விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணிக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே அது சாத்தியம். தமிழர்கள் புலம்பெயர்வது தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழர்களின் மக்கள் தொகை குறைந்துவருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.’’

‘‘இந்தியாவில் உள்ள அகதிகள் இலங்கை திரும்பினால் அவர்களுக்கு வரவேற்பு இருக்குமா? இங்கிருந்து இலங்கைக்குத் திரும்பியவர்களின் நிலை என்னவாக இருக்கிறது?’’

‘‘இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியவர்கள் எண்ணிக்கை மிகவும் சொற்பம். இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு ஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை என்பதே உண்மை நிலை. இலங்கைத் தமிழ் மக்களே உள்நாட்டுக்குள் சிதறிப்போனவர்கள்தான். அவர்கள் இழந்த நிலங்களைத் திரும்பப் பெற்று மீண்டும் குடியமர்வதே முழுமை பெறாத சூழலில், அவர்களுக்கு இது பெரிய பொருட்டல்ல.’’