Published:Updated:

பள்ளி மைதானத்தில் அரசியல் விளையாட்டு!

பெருந்துறை
பிரீமியம் ஸ்டோரி
பெருந்துறை

தோப்பு வெங்கடாசலம் அழுத்தம் கொடுத்தாரா?

பள்ளி மைதானத்தில் அரசியல் விளையாட்டு!

தோப்பு வெங்கடாசலம் அழுத்தம் கொடுத்தாரா?

Published:Updated:
பெருந்துறை
பிரீமியம் ஸ்டோரி
பெருந்துறை

``ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடந்திருப்பதைப் பார்த்தால், ‘பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்...’ என்ற பாரதியாரின் பாடலை அரசியல்வாதிகள் தவறாகப் புரிந்துகொண்டிருப்பார்களோ என எண்ணத் தோன்றுகிறது’’ - அங்கு உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தை கோயில் பயன்பாட்டுக்கு மாற்ற நடக்கும் தொடர் முயற்சியைப் பார்த்துதான் இப்படி வேதனைப்படுகிறார்கள் மக்கள்.

பள்ளி மைதானத்தில் அரசியல் விளையாட்டு!

பெருந்துறை நகரத்தின் மையப்பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. அதன் அருகிலேயே கொங்கு வேளாளர் சமுதாயத்தின் இரு பிரிவைச் சேர்ந்த மக்களின் குலதெய்வமான செல்லாண்டியம்மன் கோயில் இருக்கிறது. சமீபத்தில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், பள்ளிக்குச் சொந்தமான 15 சென்ட் பரப்பளவுள்ள விளையாட்டு மைதானத்தை செல்லாண்டியம்மன் கோயில் பயன்பாட்டுக்கு நில மாற்றம் செய்து ஆணை பிறப்பித்தார். இதற்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அந்த உத்தரவை ரத்துசெய்திருக்கிறார் கலெக்டர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இது ஒன்றும் புதிதல்ல... 2012-ம் ஆண்டும் இப்படி ஒரு முயற்சி நடந்தது. அப்போது மாணவர்கள் சாலை மறியல் செய்ததால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. அடுத்து, 2016-ம் ஆண்டு பள்ளி நிலத்தை கோயில் பயன்பாட்டுக்குக் கேட்டு கோயில் நிர்வாகத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். ‘பள்ளிக்குச் சொந்தமான இடத்தை கோயில் பயன்பாட்டுக்குக் கொடுத்தால், சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும்’ என்று மாவட்ட நிர்வாகம் நீதிமன்றத்தில் வாதிட்டதால், நிலம் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் கலெக்டர் இப்படியோர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். இதன் பின்னணியில் பெருந்துறை எம்.எல்.ஏ-வான தோப்பு வெங்கடாசலம் இருக்கிறார்” என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

தோப்பு வெங்கடாசலம், பொன்னையன், கதிரவன்
தோப்பு வெங்கடாசலம், பொன்னையன், கதிரவன்

பள்ளி நிலத்தை கோயிலுக்கு மாற்றக் கூடாது என்று போராடியவர்களிடம் பேசினோம். “கொங்கு வேளாள சமுதாயத்தின் இரு பிரிவுகளைச் சேர்ந்த 500 குடும்பத்தினர், செல்லாண்டியம்மனை குலதெய்வமாக வணங்குகிறார்கள். கோயிலுக்கு போதிய இடவசதி இல்லாததால், அருகில் இருக்கும் பள்ளிக்கூட மைதானம்மீது அவர்களின் கவனம் திரும்பியது. இதுதொடர்பாக 2012-ம் ஆண்டு வருவாய்த் துறை அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலத்தை அவர்கள் தரப்பு அணுகியது. அமைச்சர் தரப்பிலும் வாங்கு வங்கி சிதறக் கூடாது என்பதற்காக நிலத்தை கோயிலுக்கு மாற்றி விடுவதற்கான காய் நகர்த்தல்கள் நடந்தன. தகவல் அறிந்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இப்போதும் தோப்பு வெங்கடாசலம் தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் தான் பள்ளி நிலத்தை கோயிலுக்கு மாற்றியிருக்கிறார் கலெக்டர். பிரச்னை பெரியதாகவே, உத்தரவை ரத்துசெய்து பின்வாங்கி விட்டார் கலெக்டர். இதை எதிர்பார்க்காத தோப்பு வெங்கடாசலம் தரப்பினரும், ‘அண்ணன்தான் கலெக்டரிடம் பேசி உத்தரவை ரத்துசெய்யச் சொன்னார்’ என்று சமாளிக்கின்றனர்” என்றனர்.

செல்லாண்டியம்மன் கோயில் முக்கியஸ்தரான குப்புசாமியோ, “பலகோடி ரூபாய் செலவழித்து கோயில் திருப்பணி செய்ய இருக்கிறோம். ஆனால், அதற்கு போதுமான இடம் எங்களிடம் இல்லை. அருகில் உள்ள பள்ளிக்கூட மைதானம் பயனில்லாமல் கிடக்கிறது. அதைக் கொடுத்தால் என்ன குறைந்துவிடப் போகிறது? கோயில் சொத்துகளை குறைந்த வாடகையிலேயே ஒரு சிலர் அனுபவித்துவந்தனர். நான் போராடி வாடகையை உயர்த்தினேன். அதனால் கோபம்கொண்ட சிலர் இப்படி பிரச்னையைத் தூண்டிவிடுகின்றனர்” என்றார்.

பள்ளி மைதானத்தில் அரசியல் விளையாட்டு!

தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவரான பொன்னையன், “பள்ளி நிலத்தை கோயிலுக்கு மாற்றியது தொடர்பான கலெக்டர் உத்தரவில், ‘மேற்படி நில மாற்றம் தொடர்பாக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு 31.7.2019-ம் தேதியில் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு ஆட்சேபனை ஏதும் வரப்பெறவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதாவது அதை எம்.எல்.ஏ மறுத்திருக்கலாம். தோப்பு வெங்கடாசலம், இனிமேலாவது மக்கள்நலப் பிரச்னைகளில் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

எம்.எல்.ஏ-வான தோப்பு வெங்கடாசலம், “பள்ளி நிலத்தை, கோயிலுக்குக் கொடுக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடும். இந்தப் பிரச்னை சுமுகமாக முடிய நான்தான் காரணம் என்று சொல்லி, எனக்கு பாராட்டுவிழா நடத்துவதாகச் சொல்லியிருக்கின்றனர். அப்படியிருக்க, இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்கிறேன் என்று சர்ச்சையைக் கிளப்புவது தேவையில்லாத ஒன்று. எல்லாவற்றுக்கும்மேலாக நான் படித்த பள்ளிக்கூடம் அது. அதில் நான் அரசியல் செய்வேனா? எனக்கு ஆகாதவர்கள்தான் இப்படி பொய்த்தகவல் பரப்புகின்றனர்” என்றார்.

ஈரோடு கலெக்டர் கதிரவனிடம் பேசினோம். “பொதுமக்கள் தரப்பிலிருந்து எங்களுக்குக் கோரிக்கைகள் வந்ததால், பள்ளி மைதானத்தை கோயிலுக்கு நில மாற்றம் செய்த உத்தரவை ரத்துசெய்துவிட்டேன். மற்றபடி எனக்கு எந்தவிதமான அரசியல் அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை” என்றார்.

பெருந்துறையைச் சேர்ந்த வாசகர் ஒருவர், `ஜூ.வி ஆக்‌ஷன் செல்’லுக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

இதேபோன்று உங்கள் பகுதியை பாதிக்கும் பிரச்னைகள், நீங்கள் அறிந்த ஊழல்கள், முறைகேடுகள் பற்றிய தகவல்களை ஜூ.வி ஆக்‌ஷன் செல்லுக்கு உடனே அனுப்புங்கள். ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்குப் பிறகு உங்களது புகார் செய்தியாக்கப்படும். உங்களது அடையாளம் ரகசியம் காக்கப்படும்.

whatsapp: +91 95001 17741

Email: jvactioncell@vikatan.com