பாகிஸ்தான் கொடியுடன் பாப் பாடகி ரிஹானா...`பாக் ஏஜென்ட்' எனக் கொதிக்கும் பா.ஜ.க-வினர் - உண்மை என்ன?

`ரிஹானா பாகிஸ்தான் ஏஜென்ட்', `இந்தியாவின் ஒற்றுமையைக் குலைக்கப் பார்க்கும் பாகிஸ்தான் ஆதரவாளர் இவர்' என்பது போன்ற கமென்ட்டுகளோடு ஏராளமானோர் இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கின்றனர்.
டெல்லியின் எல்லைகளில் 70 நாள்களுக்கு மேலாகப் போராடிவரும் விவசாயிகளுக்கு, ஆதரவு தெரிவிக்கும்விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார் பாப் பாடகி ரிஹானா. ரிஹானாவின் பதிவுக்குப் பிறகு உலக அளவில் பரவலாக கவனம் பெற்றது விவசாயிகள் போராட்டம். இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ``இது போன்ற பிரச்னைகளில் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு, இந்தப் பிரச்னைகள் குறித்துப் புரிந்துகொண்டு சரியான தகவல்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். பிரபலங்களால் போராட்டம் குறித்துத் தெரிவிக்கப்படும் கருத்துகள் எதுவும் சரியானவை அல்ல'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து `ரிஹானா எந்த மதத்தைச் சேர்ந்தவர்?', `ரிஹானா முஸ்லிமா?' என்றெல்லாம் கூகுளிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. தொடர்ந்து ரிஹானா பாகிஸ்தான் கொடியுடன் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

உத்தரப்பிரதேச பா.ஜ.க-வின் மாநில இளைஞரணித் தலைவர் அபிஷேக் மிஷ்ரா இந்தப் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இவரைத் தொடர்நது பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் இந்தப் புகைப்படத்தை ஷேர் செய்யத் தொடங்கினர். `ரிஹானா பாகிஸ்தான் ஏஜென்ட்', `இந்தியாவின் ஒற்றுமையைக் குலைக்கப் பார்க்கும் பாகிஸ்தான் ஆதரவாளர் இவர்' என்பது போன்ற கமென்ட்டுகளோடு ஏராளமானோர் இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கின்றனர்.
உண்மை என்ன?
ரிஹானா பாகிஸ்தான் கொடியை ஏந்தி நிற்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் முறைகொண்டு கூகுளில் தேடிப் பார்த்தபோது, அது போலியானது என்பது நமக்குத் தெரியவந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஜூலை 1, 2019 அன்று இந்தப் புகைப்படம் பதியப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் புகைப்படத்தில் ரிஹானா ஏந்தி நிற்பது பாகிஸ்தான் கொடியை அல்ல... மேற்கிந்தியத் தீவுகளின் கொடியை!
2019 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை அணிகளுக்கிடையேயான போட்டியை நேரில் கண்டு ரசித்திருக்கிறார் ரிஹானா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மேற்கிந்தியத் தீவுகளின் கொடிக்கு பதிலாக, பாகிஸ்தான் கொடியை போட்டோஷாப் மூலம் மாற்றி, அதைச் சமூக வலைதளங்களில் பரப்பியிருக்கின்றனர்.