Published:Updated:

“எடப்பாடி அறிவித்த ரூ.50 லட்சம் இழப்பீடு எங்கே?” - கேள்வியெழுப்பும் அரசு ஊழியர்கள்...

தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
News
தேர்தல்

கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பணிகளுக்கு புதிய நியமனங்கள் அதிகமாக இல்லை. பெரும்பாலும் அவுட்சோர்ஸிங் முறையில்தான் பணியாளர்களை நியமித்தார்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் அரசு ஊழியர்களின் ஓட்டுகள் மிக முக்கியமானவை. தமிழகத்தில் சுமார் 16 லட்சம் பேர் அரசு ஊழியர்களாக இருக்கிறார்கள். ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சுமார் ஐந்து லட்சம் பேர் இருக்கிறார்கள். மொத்தம் 21 லட்சம் குடும்பங்கள். குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை பலமடங்கு உயரும். வரும் தேர்தலையொட்டி இவர்களின் மனநிலை எப்படியிருக்கிறது?

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் சண்முகராஜனிடம் பேசினோம். ‘‘தமிழகத்தில் நான்கு லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஜெயலலிதா ஆட்சியின்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார். இதனால், சுமார் நான்கரை லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம், பணிக்கொடை, பொது வருங்கால வைப்புநிதி ஆகியவை இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு தேர்தலின்போது ‘மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவோம்’ என்று வாக்குறுதி அளித்தார் ஜெயலலிதா. அதையும் நிறைவேற்றவில்லை. நாங்கள் வெகுண்டெழுந்து போராடியதைத் தொடர்ந்து, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்வது பற்றி ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த அதிகாரியும் ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டார். பின்னர் ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ் தலைமையில் மீண்டும் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் அரசிடம் இடைக்கால அறிக்கை அளித்துவிட்டது. அந்த அறிக்கையையும் எடப்பாடி அரசு கிடப்பில் போட்டுவிட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை யையாவது தருமாறு கேட்டோம். அதையும் தரவில்லை. 1.10.2017-ல் ஊதியக்குழு சிபாரிசுகளை அமல்படுத் தியதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள்.

“எடப்பாடி அறிவித்த ரூ.50 லட்சம் இழப்பீடு எங்கே?” - கேள்வியெழுப்பும் அரசு ஊழியர்கள்...

இன்னொரு பக்கம் சிறப்புக் காலமுறை ஊதிய அடிப்படையில் சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், ஊராட்சிச் செயலர், ஊர்ப்புற நூலகர் உட்பட இரண்டரை லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களை காலமுறை ஊதிய முறைக்கு மாற்றி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. அதையும் எடப்பாடி அரசு செய்யவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தார். அதிலும் அறுவை சிகிச்சை அல்லாத இதர சிகிச்சைகளுக்குக் காப்பீட்டுத் தொகை கிடைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் உச்சமாக, ‘கொரோனா காலத்தில் அரசுப் பணியின்போது இறந்தால் 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்’ என்று அறிவித்தார் முதல்வர் பழனிசாமி. கொரானாவால் 439 பேர் இறந்திருக்கி றார்கள். முதல்வர் அறிவித்தபடி அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை. இந்த அதிருப்திகளெல்லாம் தேர்தல் முடிவுகளில் தெரியும்” என்றார் உறுதியுடன்!

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமியோ, ‘‘கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பணிகளுக்கு புதிய நியமனங்கள் அதிகமாக இல்லை. பெரும்பாலும் அவுட்சோர்ஸிங் முறையில்தான் பணியாளர்களை நியமித்தார்கள். அரசு ஊழியர்களுக்கு 21 மாத நிலுவைகளைத் தருவது தொடர்பாகவும் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. போதாததற்கு, அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 60-ஆக உயர்த்திவிட்டார்கள். சுமார் 50,000 பேருக்கு ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட பணத்தை செட்டில்மென்ட் செய்ய முடியாமல்தான் இதைச் செய்திருக்கிறார்கள் காலிப் பணியிடங்கள் உருவானால்தானே புதிய நியமனங்கள் நடக்கும். அதற்கும் வாய்ப்பில்லை. இளைஞர்களுக்கும் அரசு வேலை கனவாகிவிட்டது. இவை யெல்லாம் அரசுப் பணியாளர் களைக் கடும் மன உளைச்சலில் தள்ளியிருக்கிறது. தேர்தல் முடிவுகளில் இவை எதிரொலிக்கும்” என்றார் ஆவேசமாக!

சண்முகராஜன் - பீட்டர் அந்தோணிசாமி - சூரியமூர்த்தி
சண்முகராஜன் - பீட்டர் அந்தோணிசாமி - சூரியமூர்த்தி

அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில இணைச் செயலாளர் சூரியமூர்த்தியோ தமிழக அரசுக்கு ஆதரவாகச் சில கருத்துகளை முன்வைக்கிறார். ‘‘கொரோனா தொற்றுக்காலத்தில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்துவிட்டார்கள். ஆனால், தமிழகத்தில் முழு ஊதியம் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கான சலுகைகளும் அப்படியே வழங்கப்பட்டன. பழைய ஓய்வூதிய முறை தொடர்பான இறுதி அறிக்கையை ஸ்ரீதர் தலைமையிலான கமிட்டி இன்னும் சமர்ப்பிக்கவில்லை. அடுத்து அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், அது வாக்குப்பதிவிலும் எதிரொலிக்கும்!