தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகள் திருமண விழா ஊட்டி ராஜ்பவனில் உறவினர்கள் வாழ்த்து மழையில் உற்சாகமாக நடந்து முடிந்திருக்கிறது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக ஆளுநருக்கான அதிகாரபூர்வ மாளிகையான ராஜ்பவன் ஒன்று ஊட்டியில் இருப்பதே பலருக்கும் தெரியாத செய்தி. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 அடி உயரத்தில் தொட்டபெட்டா சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது இந்த மாளிகை. தோடர் பழங்குடிகளின் மந்து (கிராமம்)க்கும் இயற்கை எழில் கொஞ்சும் அரசு தாவரவியல் பூங்காவுக்கும் நடுவில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த மாளிகை 1888-ல் கட்டப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது சென்னை மாகாணத்தின் வைஸ்ராய்கள் கோடைக் காலங்களில் ஓய்வெடுக்கவும், இங்கிருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொள்ளவும் சென்னை ராஜ்பவனில் உள்ள அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குடியரசுத்தலைவர்கள் மற்றும் ஆளுநர்களின் மனம் கவர்ந்த மாளிகையாகவே ஊட்டி ராஜ்பவன் எப்போதும் இருந்துவந்திருக்கிறது. ஓய்வெடுக்க அவர்கள் இங்கு வருவதுண்டு. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் இங்கு வந்து தங்கினார்.அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த மாளிகை பிடித்துப்போனது ஒன்றும் பெரிய ஆச்சர்யமில்லை. ஆனால், மகளின் திருமணத்தையே இங்கு நடத்தியதுதான் ஆச்சர்யம்.



திருமண விழா ஏற்பாடு ஒவ்வொன்றையும் நேரடியாக முன்னின்று கவனித்த ஆளுநர், ஜனவரி மாதமே ஊட்டிக்கு வருகை தந்தார்.ராஜ்பவனைப் பொலிவுபடுத்த உத்தரவிட்டு, இளம்பச்சை நிறத்தில் இயற்கையுடன் ஒன்றியிருந்த ராஜ்பவனை வெள்ளை நிறத்துக்கு மாற்றச் சொன்னார். திருமணத்துக்காக விருந்தினர்கள் வந்து தங்குவதற்காக 3 தனியார் தங்கும் விடுதிகளையும் பார்வையிட்டு புக் செய்துவிட்டுச் சென்றார். அரசு நிகழ்ச்சிகளை மட்டுமே கண்டிருந்த இந்த மாளிகை வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் திருமணத்துக்காக ஒரு மாதமாக ராஜ்பவன் அமர்க்களப்பட்டு வந்தது.
பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரண்டு நாள்கள் நடைபெற்ற மகளின் திருமண விழாவுக்காக 8 நாள் பயணமாக கடந்த 17-ம் தேதியே ஆளுநர் ஊட்டிக்கு வந்தடைந்தார்.வண்ண அலங்கார விளக்குகளாலும் தோரணங்களாலும் ஜொலித்த மாளிகையின் நுழைவு வாயிலில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. மாளிகை வளாகமே விருந்தினர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அரசு தாவரவியல் பூங்கா முதல் ஆளுநர் மாளிகை வரை காவல்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதுமட்டும் அல்லாது ஆளுநரின் உறவினர்கள் தங்கியிருந்த தனியார் விடுதிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.



ஊட்டியில் திருமணம் நடந்தாலும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் முதல் வனத்துறை அமைச்சர் வரை யாருக்குமே திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. குடும்ப உறவினர்கள் மட்டும் பங்கேற்ற திருமண விழா என்பதால், தனக்குத் தெரிந்த அதிகார வட்டாரத்தில்கூட யாரையும் கவர்னர் அழைக்கவில்லை. முக்கிய நிகழ்வான மெஹந்தி வைக்கும் சடங்கு 21-ம் தேதி இரவு 8 மணிக்குத் தொடங்கி இரவு 12 மணி வரை நீடித்தது.
மறுநாள் நடைபெற்ற விருந்து உபசரிப்பில் 3 வகை இனிப்புகள், சாப்பாடு, சாம்பார், ரசம் என தென்னிந்திய உணவுகள் பரிமாறப்பட்ட அதே பந்தியில் வட இந்திய உணவுகளும் இடம்பெற்றன. முழுக்க முழுக்க சைவத்தில் அசத்த சென்னை ராஜ்பவனிலிருந்து சமையல் கலைஞர்களை ஊட்டிக்கு அழைத்து வந்திருந்தனர். ஆளுநர் மாளிகையில் குடும்ப விழாவை நடத்தியது, இளம் பச்சை நிறத்தில் இருந்த ராஜ்பவனை வெள்ளை நிறத்துக்கு மாற்றியது, மாவட்ட நிர்வாகத்துக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காதது, செய்தியாளர்களுக்குத் தடை விதித்தது போன்ற பல சர்ச்சைகளுக்கும் இந்தத் திருமணத்தில் பஞ்சம் இல்லை.