Published:Updated:

கொடூரக் குற்றவாளிகளுக்கு மலர்மாலை வரவேற்பு... எங்கே செல்கிறது குஜராத் அரசியல்?

குஜராத் அரசியல்
பிரீமியம் ஸ்டோரி
குஜராத் அரசியல்

காவல் நிலையத்துக்குச் சென்று பில்கிஸ் பானோ அளித்த புகார், முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை. அவருக்கு உதவ சில தன்னார்வ அமைப்புகள் முன்வந்தன

கொடூரக் குற்றவாளிகளுக்கு மலர்மாலை வரவேற்பு... எங்கே செல்கிறது குஜராத் அரசியல்?

காவல் நிலையத்துக்குச் சென்று பில்கிஸ் பானோ அளித்த புகார், முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை. அவருக்கு உதவ சில தன்னார்வ அமைப்புகள் முன்வந்தன

Published:Updated:
குஜராத் அரசியல்
பிரீமியம் ஸ்டோரி
குஜராத் அரசியல்

இந்தியாவின் 75-வது சுதந்திர தின நிறைவுக் கொண்டாட்டத்தில் நாடு மூழ்கியிருந்த போது, பாலியல் குற்றவாளிகளையும், கொலை யாளிகளையும் விடுதலை செய்திருக்கிறது குஜராத் அரசு. கர்ப்பிணி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்ற வாளிகளை, ஏதோ சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போல மலர்மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு, லட்டு கொடுத்து வரவேற்றது தேசத்தையே வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது!

கைக்குழந்தையும் கொடூரக் கொலை!

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறைகளின் ரணம் இன்னும் ஆறவில்லை. அப்போது, குஜராத் முதல்வராக மோடி இருந்தார். கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்து எரிந்து, 59 கரசேவகர்கள் உயிரிந்தனர். அந்த ரயிலுக்குத் தீவைத்ததாகச் சொல்லி, குஜராத் முழுவதும் இஸ்லாமியர்கள் வேட்டையாடப்பட்டனர். ஏராளமான படுகொலைகள், எண்ணிலடங்கா தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமைச் சம்பவங் கள் நடைபெற்றன. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பில்கிஸ் பானோ. தஹோத் மாவட்டம், ரந்திக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான பில்கிஸ் பானோ, அப்போது ஐந்து மாத கர்ப்பிணி. கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சுமார் 30 பேர்கொண்ட கும்பல், பில்கிஸ் பானோ குடும்பத்தினர்மீது காட்டுமிராண்டித் தாக்குதலை நடத்தியது. தாய், சகோதரிகள் உட்பட ஏழு உறவினர்கள் பில்கிஸ் பானோவின் கண்ணெதிரிலேயே கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.

கொடூரக் குற்றவாளிகளுக்கு மலர்மாலை வரவேற்பு... எங்கே செல்கிறது குஜராத் அரசியல்?

பின்னர், பில்கிஸ் பானோவின் கையில் இருந்த மூன்று வயதுப் பெண் குழந்தையைப் பறித்து, தரையில் ஓங்கி அடித்தது அந்தக் கும்பல். தலை சிதறி இறந்தது அந்தக் குழந்தை. பில்கிஸ் பானோவை நிர்வாணப்படுத்தி, கூட்டாக அவர்கள் வேட்டையாடினர். “கர்ப்பமாக இருக்கிறேன்... என்னை விட்டுவிடுங்கள்” என்ற பில்கிஸ் பானோவின் கதறல், மதவெறி போதையில் இருந்த அந்தக் கும்பலின் காதில் விழவில்லை. குற்றுயிரும் குலையுயிருமாக வீசப்பட்ட பில்கிஸ் பானோ, ஓர் ஆதிவாசிப் பெண்ணின் உதவியால் உயிர்பிழைத் தார். அந்தக் கொடூரக் கும்பல் மொத்தம் 14 பேரை படுகொலை செய்தது.

காவல் நிலையத்துக்குச் சென்று பில்கிஸ் பானோ அளித்த புகார், முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை. அவருக்கு உதவ சில தன்னார்வ அமைப்புகள் முன்வந்தன. அவர்களின் உதவியுடன் சட்டப் போராட்டத்தை நடத்தினார். அதன் விளைவாக, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து 2008-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் 2017-ம் ஆண்டு உறுதிசெய்தது. அதை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில், பில்கிஸ் பானோவுக்கு ரூ.5 லட்சம் வழங்க குஜராத் அரசு முன்வந்தது. அதை நிராகரித்த அவர், உச்ச நீதிமன்றத்தை நாடினார். ரூ.50 லட்சம் இழப்பீடு, அரசுப் பணி, வீடு ஆகியவற்றை வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

விடுவித்த குஜராத் அரசு!

சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென்று குற்றவாளிகளில் ஒருவர் மனுத் தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளியின் வேண்டுகோளைப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு, கடந்த மே மாதம் உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழுவை (Remission Commission) அமைத்த அரசு, அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, குற்றவாளிகள் 11 பேரையும் ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்தது. எல்லாம் மூன்று மாதங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டன. மாநில அரசுக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியே இந்த விடுதலை நடந்திருப்பதாக குஜராத் அரசும், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும் சொல்கின்றன.

`இதே சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யலாம்’ என்று சட்ட வல்லுநர்கள் தொடர்ந்து சொல்லிவந்தனர் என்றாலும், தமிழ்நாடு அரசு அத்தகைய முடிவை எடுக்கத் தயங்கியது; மத்திய அரசின் ஒத்துழைப்பும் அதற்கு இல்லை. ஆனால், குஜராத் மாநில அரசு உறுதியான முடிவை எடுத்திருக்கிறது. அதேநேரத்தில், `கூட்டுப் பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களை இழைத்தவர்களுக்கு இத்தகைய சலுகை பொருந்தாது’ என்று சிலர் வாதிடுகிறார்கள்.

கொடூரக் குற்றவாளிகளுக்கு மலர்மாலை வரவேற்பு... எங்கே செல்கிறது குஜராத் அரசியல்?

கேள்விக்குள்ளாகும் நடுநிலை!

அடுத்த சில மாதங்களில் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் வருவதால், இந்த விடுதலையின் பின்னணியில் அரசியல் கணக்கு இருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. அதற்கு வலு சேர்ப்பதுபோல சில காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன. பா.ஜ.க-வின் கோத்ரா தொகுதி எம்.எல்.ஏ-வான ரௌல்ஜி, “இந்த 11 பேரில் சிலர் சுத்த சன்மார்க்க பிராமணர்கள்” என்று நற்சான்று வழங்கியிருக்கிறார். விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் 11 பேரும் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

‘குஜராத், இந்துத்துவத்தின் ஒரு சோதனைக் களம்’ என்று முன்பு முன்வைக்கப்பட்ட விமர்சனத்தை இப்போது சிலர் நினைவூட்டுகிறார்கள். மாநில அரசு அமைத்த குழுவின் நடுநிலைத்தன்மை குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார். “அந்தக் குழுவின் உறுப்பினர்களாக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களான சி.கே.ரௌல்ஜி, சுமன் சௌகான் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், குற்றவியல், தண்டனைவியல் உட்பட துறை சார்ந்த வல்லுநர்கள் யாரும் அதில் இடம்பெறவில்லை” என்று விமர்சித்திருக்கிறார் அவர்.

2012-ம் ஆண்டு, டெல்லில் நிர்பயா கொடூரமான கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது, ஒட்டுமொத்த தேசமும் கொந்தளித்தது. 2022-ல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மலர்மாலையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

எங்கே செல்கிறது இந்தியாவின் மதவாத அரசியல்?!