Published:Updated:

`மோடியைச் சந்தித்ததால் விமர்சிக்கப்பட்டேன்!'-அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துளசி கப்பார்ட்

இந்திய - அமெரிக்கர்கள் உங்கள் வருகையை எதிர்பார்க்கிறார்கள். எங்கள் ஜனநாயக கட்சியின் சார்பாகவும் மக்கள் கலந்து கொள்வார்கள்

மோடி
மோடி

பிரதமர் மோடி மேற்கொள்ள இருக்கும் அமெரிக்கச் சுற்றுப்பயணம் தொடர்பான தகவல்களை, வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலே நேற்று வெளியிட்டு இருந்தார். இதில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், செப்டம்பர் 22-ம் தேதி இந்திய வம்சாவளியினர் இடையே  'ஹவ்டி மோடி' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார் என்ற தகவலும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

சிறு வயதில் காங்கிரஸ் கட்சிக்கொடி விற்ற மோடி! - ஆச்சர்யத் தகவல்
பிரதமர் மோடியின் அமெரிக்க வருகை இரு நாடுகளுக்கிடையேயான உறவை இன்னும் பலப்படுத்தும். பல பிரச்னைகளுக்குத் தீர்வாகவும் அமையலாம்.
துளசி கப்பார்ட்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட அந்நாட்டின் உயர் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பிரதமர் மோடி நிகழ்த்தவிருக்கும் உரை அமெரிக்கர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களில் ஒருவரான துளசி கப்பார்ட் மோடியின் வருகையை, 'மாற்றத்திற்கான ஆரம்பம்' என்று வரவேற்றிருக்கிறார்.

Tulsi Gabbard
Tulsi Gabbard

துளசி கப்பார்ட் அளித்துள்ள பேட்டியில், ``அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களில் நான் இந்து என்பதால் மத வெறுப்புணர்வுக்கு நிறையவே உட்படுத்தப்பட்டேன். என் மதமே என் தோல்விக்கு காரணமாக அமையலாம் என்று கூட சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. மேலும், இந்திய மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியை சந்தித்த நிகழ்வு, நான் இந்து என்ற ஒரே காரணத்திற்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இப்போது மோடி, அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர், இந்து அமெரிக்கர்கள் என மொத்தம் 50,000 பேர் மத்தியில் உரையாற்ற இருப்பதை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இன்னும் நிறைய இந்திய - அமெரிக்கர்கள் உங்கள் வருகையை எதிர்பார்க்கிறார்கள். எங்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாகவும் மக்கள் கலந்து கொள்வார்கள். என்னை விமர்சித்ததைப் போன்று இத்தனை மக்களையும்  விமர்சனம் செய்ய வாய்ப்பே இல்லை. இது  மாற்றத்திற்கான ஆரம்பமாகவும் இருக்கலாம்.

ஆசியாவிலேயே இந்தியா மட்டும்தான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் அமெரிக்க வருகை இரு நாடுகளுக்கிடையேயான உறவை இன்னும் பலப்படுத்தும். பல பிரச்னைகளுக்கு தீர்வாகவும் அமையலாம். மேலும், மக்களின் பொருளாதார நிலையும் மேம்பட வாய்ப்பு இருக்கிறது. நாடு, மதம், பொருளாதார சூழல், மொழி இவற்றையெல்லாம் தாண்டி இரு நாடுகளுக்கான வளர்ச்சியாகக் கொள்வோம்" என்று கூறியிருக்கிறார் துளசி கப்பார்ட். இவர், அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலிருந்து நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.