Published:Updated:

மதுரை: தமிழகத்தில்`பழங்குடியினர் பல்கலைக்கழகம்' - நிறைவேறுமா தொல்குடிகளின் கனவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

வன உரிமை சட்டம் கூறியுள்ளதுபோல் பழங்குடி மக்களுக்கு நிலவுரிமையை வழங்க அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"நாட்டிலோ, காட்டிலோ வாழும் மக்கள் அனைவருக்கும் ஒரே சட்டம்தான். அனைத்து மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. ஆனால், அரசு அறிவிக்கும் சலுகைகள் ஒரு சாரருக்கு மறுக்கப்பட்டால் என்ன நியாயம்?

இருளர் பழங்குடியினர்
இருளர் பழங்குடியினர்

பழங்குடி மக்களுக்காக தமிழ்நாட்டில் தனி பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்' என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் செல்வகோமதி தாக்கல் செய்துள்ள வழக்கு பலராலும் கவனிக்கப்படுள்ளது. 'தமிழகத்தில் பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இயங்கி வரும் நிலையில், பழங்குடியின மக்களுக்கு தனியாக எதற்கு பல்கலைக்கழகம்?'என்ற கேள்வியை சமூக செயற்பாட்டாளரும் மதுரை சோக்கோ அறக்கட்டளை இயக்குனருமான செல்வகோமதியிடம் முன்வைத்தேன்.

"அரசின் திட்டங்கள் அனைத்தும் பழங்குடிகளாக வாழும் வனத்தின் புதல்வர்களுக்கு போய் சேரவேண்டும். ஆனால், ஏட்டில் இருக்கும் திட்டங்கள் காட்டில் இருக்கும் மக்களை சேரவில்லை என்பதுதான் கொடுமை. பூர்வீக நிலத்தில் வாழும் உரிமை, அடிப்படை வசதிகள், கல்வி உரிமை, பாரம்பரிய கலை, பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் அவைகளை ஆவணப்படுத்தும் கடமை என அனைத்தும் அவர்களுக்கு உண்டு. அதை உறுதிப்படுத்தத்தான் இந்த வழக்கு" என பேசத் தொடங்கினார் சமூக செயற்பாட்டாளர் செல்வகோமதி,

செயற்பாட்டாளர் செல்வகோமதி
செயற்பாட்டாளர் செல்வகோமதி

"ஆரம்ப காலங்களில் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் பளியர் பழங்குடியின மக்களுக்காக பணியாற்றியபோது அம்மக்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டோம். அப்போது பாடம் நடத்தும்போது அக்குழந்தைகளிடம் அதிகப்படியான திறமைகள் இருக்கும். பிறகு அவர்களுக்கு மதுரையில் சம்மர் கேம்ப் நடத்துவோம். அதில் வைக்கப்படும் போட்டிகளில் சிறப்பாக பங்கேற்பார்கள். பழங்குடி குழந்தைகளிடம் மரம், பூக்கள் பெயர்களை அடையாளம் காட்டச் சொன்னால் உடனுக்குடன் சொல்வார்கள். காரணம், அவர்களுக்கு அது இயல்பானது. தங்கள் இசை, நடனத்தில் சிறப்பு சேர்ப்பார்கள். இவ்வளவு திறமை உள்ளவர்களுக்கு வசிப்பதற்கு சரியான வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அவர்களின் கிராமங்களில் சின்னக்குடிசையில் 4 குடும்பங்கள் வசிப்பார்கள். 20 பேர் ஒரு குடிசைக்குள் வாழ்வதென்பது எவ்வளவு கொடுமை. குழந்தைகளுக்கு நல்ல உடைகள் இல்லாமல், மருத்துவ வசதி, போக்குவரத்து வசதியில்லாமல் மிக மோசமான நிலையில்தான் வாழ்கிறார்கள்.
இந்த மண்ணின் பூர்வகுடிகளான இயற்கையை பாதுகாக்கிற பழங்குடி மக்களின் நிலைமை இன்றுவரை மாறவில்லை. அவர்கள் முன்னேற வேண்டுமென்றால் அவர்களுக்கு கல்வி அவசியம், கலை பண்பாடு காக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் இந்த வழக்கை தாக்கல் செய்தேன். அவர்களில் பிரச்சனைகள் அனைத்தையும் ஆய்வு செய்திருக்கிறேன்.

தமிழகத்தில் தனித்த அடையாளத்துடன் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை கொண்ட இருளர், ஊராளி, கம்மாரா, காட்டு நாயக்கன், காடர், கொச்சு வேலன், பளியர், உள்ளிட்ட 36 பழங்குடியினர் உள்ளனர். இதில் காணி, குரும்பான், கோத்தார், தோடர் உள்ளிட்ட பழங்குடி மக்களுக்கள் தங்களுக்கு என தனி மொழியைக் கொண்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொன்மையான இசை, பாடல், நடனத்தைக் கொண்டுள்ளனர். இருளர் உள்ளிட்ட பிரிவினர் பாம்பு பிடித்தலில் தனித்தன்மையுடன் உள்ளனர். இவைகளை மற்றவர் கற்றுக்கொள்ள, அடுத்த தலைமுறைக்கு கடத்த, ஆவணப்படுத்த வேண்டியது பழங்குடி மக்களின் கடமையாகும். அதறகான உதவிகளைச் செய்யவேண்டியது அரசின் கடமை. மத்தியபிரதேசதில் உள்ள இந்திரா காந்தி தேசிய பல்கலைகழகம், பழங்குடியினரின் கலை, கலசாரம், மொழி, மருத்துவம், வனம், சுற்றுசூழலை ஆய்வு செய்திடும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதேபோல் ஆந்திராவிலும் உள்ளது.

கோவை: `ஓடி ஓளிவது யார்?' - பழங்குடி மக்கள் தடுப்பூசி விவகாரமும், ஒரு செயற்பாட்டாளரின் பார்வையும்!
மலைவாழ் மக்கள்
மலைவாழ் மக்கள்

அதுபோல் தனித்த பண்பாட்டு அடையாளத்துடன், தனி மொழிகளுடன், பல கலைகளுடன் வாழும் பழங்குடி இனங்கள் வாழும் தமிழகத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும். திண்டுக்கல் அல்லது நீலகிரி மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரியிருக்கிறேன். நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டுள்ளது. நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

பழங்குடி மக்கள் உரிமைக்காக போராடி வரும் ஏக்தா பரிஷத் மாநில ஒருங்கிணைப்பாளர் தனராஜ்,

" பழங்குடி மக்களுக்கான பல்கலைக்கழகம் அமைக்க தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு முக்கியமானதுதான். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பழங்குடி மக்களுக்காக நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இதை குறிப்பிட்டிருந்தோம். மத்திய மாநில அரசுகள் இதற்கு என்ன பதில் அளிக்கிறது என்பதைப் பார்ப்போம். இன்றுவரை பழங்குடி மக்களுக்கு கல்வி, சுகாதர வசதி, வேலைவாய்புகள், ஏற்படுத்தபடவில்லை.

பூர்வகுடிகளுக்கு இன்னும் நில உரிமை கிடைக்கவில்லை. குறிப்பாக பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, வால்பாறை, ஆனமலை பகுதிகளில் புலிகள் காப்பகம் என்று அறிவித்ததால் அங்கு காலம் காலமாக வசித்து வரும் பழங்குடி மக்களுக்கு பட்டா கிடையாது. அரசாங்கத்தை பொறுதவரையில் அவர்கள் ஆக்கிராமிப்பாளர்கள். மின்சாரம், குடிநீர் வசதி, சாலை வசதி கிடையாது, அதனால் அவசரத்துக்கு எந்த கிராமத்துக்கும் ஆம்புலன்ஸ் போகாது. முழுக்க வனகிராமமாக இருப்பதால், அங்கும் படிக்க முடியாது, வெளியில் சென்று படிக்கவும் முடியாது.

பாரதியார் பல்கலைக்கழகம்: `தேர்வுகள் எப்போது?' - வேதனையில் ஆராய்ச்சி மாணவர்கள்!
 ஏக்தா பரிஷத் தனராஜ்
ஏக்தா பரிஷத் தனராஜ்

சமீபத்துல கேரள மலை கிராமத்துலருந்து தினமும் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து போய் படித்த பெண்ணை எல்லோரும் பாராட்டினார்கள். அதேநேரம் அந்த கிராமத்தில பல மாணவர்கள் டிராப் அவுட் ஆகியுள்ளார்கள். எல்லோரும் அந்த பெண் போல கஷ்டபட்டு கல்வி கற்க முடியாத சூழ்நிலை.புலிகள் காப்பகம்னு அறிவிச்சிடுறாங்க. அங்கு வசிக்கும் மக்கள் வளர்ச்சி அடைந்திருக்கிறார்களா என்று பார்ப்பதில்லை. இப்ப மேற்குத் தொடர்ச்சி மலையில உள்ள எந்த பழங்குடியின கிராமத்துலயும் நூறு நாள் வேலை கிடையாது. ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில்தான் அவங்களுக்கு வேலை இருக்கும். நெல்லிக்காய், கடுக்காய், ஏலக்காய், தேன், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, மூலிகை எடுப்பாங்க. அந்த மூனு மாசம் மட்டும்தான் விக்க முடியும்.

லாக் டவுன் போட்டதால போன வருடமும், இந்த வருடமும் அந்த மூனு மாதத்துல ஒன்னும் பண்ண முடியல. அவங்களுக்கு வேற எந்த வருமானமும் இல்லை. வேற எங்கேயும் வேலைக்கு போக முடியாது. இன்னைக்கு யானை உட்பட வன விலங்குகள் கீழே வருதுன்னா மேல சாப்பிட எதுவும் இல்லேன்னு அர்த்தம். வனவிலங்குகளை காக்கனும்னு நெனைக்கிற அரசாங்கம் என்ன பண்ணனும்..? பழங்குடி மக்கள் மூலமா காட்டுல வளர்ந்து கெடக்குற உன்னி செடிகளை அகற்றி வனவிலங்குகள் சாப்பிடக் கூடிய செடிகளை வளர்க்க சொல்லலாம். காடுகளை காடுகளாக மாற்ற பழங்குடிகளால்தான் முடியும். வனவிலங்குகளை பாதுகாக்குற பொறுப்பை பழங்குடி மக்களிடமே வழங்கலாம்.

இன்னைக்கு நீலகிரியிலிருந்து இங்க வரைக்கும் எங்கேயுமே நூறு நாள் வேலை கிடையாது. மூனு மாத வருமானமும் போச்சு. அவங்களால எப்படி வாழ முடியும்? பிள்ளைகளை எப்படி படிக்க வைக்க முடியும்?

என் மனைவி பழங்குடியினத்தை சேர்ந்தவங்க. அவங்க ரெண்டாம் வகுப்பிலிருந்து காலேஜ் வரைக்கும் ஹாஸ்டலிலிருந்துதான் படித்தார். அவங்க அப்பா, 12 கிலோமீட்டர் தூரம் தலையில் சுமந்துகொண்டு திங்கள் கிழமை ஹாஸ்டலில் கொண்டுபோய் விட்டு, வெள்ளிக்கிழமை மாலை அதுபோல் தூக்கிக்கொண்டு ஊருக்கு வந்திருக்கிறார். நினைத்து பாருங்க, இதுமாதிரி புள்ளைங்க படிப்புக்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்கன்னு.

ஆனா, இதை எல்லோரும் செய்ய மாட்டார்கள். அதனால், பழங்குடி குழந்தைகள் கல்வி உரிமையை பெற முடியாமல் போய்விடுகிறார்கள்.

மலைப்பகுதிக்குள் ஹாஸ்டல் வசதி இல்லை. பள்ளி இருந்தாலும் டீச்சர் மேலே வருவது கஷ்டம். இப்படித்தான் பழங்குடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பழங்குடி மக்களுக்கு நிலம் மறுக்கப்படுது, கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பும் மறுக்கப்படுது. பழங்குடியினர் வாழ்வதே கேள்விக்குறியாகி உள்ளது.

சமீபத்தில் கொடைக்கானல் வனப்பகுதியையும் புலிகள் காப்பகமாக அறிவித்துள்ளார்கள். அறிவிக்கட்டும் அதற்கு முன்னால் பழங்குடி மக்களுக்கான உரிமைகளை கொடுத்துவிட்டு அறிவிக்கட்டும்.

ஏக்தா பரிஷத் தனராஜ்
ஏக்தா பரிஷத் தனராஜ்

வன உரிமை சட்டம் -2006 மிக முக்கியமானது. காடுகளைப் பற்றி சொல்லும்போது அது பழங்குடிகளுக்கு சொந்தமானது, அவங்கதான் காட்டின் புதல்வர்கள், இந்த மக்களுக்கு அரசுகள் காலம் காலமாக அநீதி பண்ணிவிட்டார்கள். அவங்களை பாதுகாக்கனும்னு சொல்லி, பல தலைமுறையா காட்டில் வசிப்பவர்களுக்கு குடியிருக்க 10 சென்ட் நிலம், விவசாயம் பண்ண 10 ஏக்கர் நிலமும் கொடுக்க அந்த சட்டத்துல சொல்லிருக்காங்க. இன்னைவரைக்கும் தமிழ்நாட்டுல அதை நடைமுறைபடுத்தல.

வனத்துறை நிலம் கொடுக்க முன்வரல. இதற்காக பல கட்டமா போராடி சில இடங்களில் மட்டும் ஒன்னரை செண்ட் நிலம் பெற்றுள்ளார்கள். ஆனால், விவசாயத்துக்கான நிலம் கொடுக்கல. கொரோனா கால உதவிகள் கூட அவங்களுக்கு கிடைக்கல. இதுபோன்ற பல நெருக்கடிகளுக்குள் வாழ்ந்துட்டுருக்காங்க.

பழங்குடி மக்களுக்கான பல்கலைக்கழகம் அமைக்க அரசு முன்வந்தால், அதிகமான பழங்குடி மக்கள் வசிக்கும் கோவை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் அமைக்கலாம். பழங்குடி மக்களுக்காக மத்திய பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

வட மாநிலங்களில் பழங்குடி மக்கள் நலன் நன்கு கவனிக்கப்படுகிறது. அங்கு அரசியலிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பழங்குடி மக்களில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் அதிகம் உள்ளனர். அதைப்போல் கேரளாவிலும் பழங்குடியினர் அரசியல்மய படுத்தப்பட்டுள்ளதால் அவர்களின் உரிமைகள் மதிக்கப்படுகிறது. தமிழக பழங்குடியினர் அரசியல்படுத்தப்படவில்லை.

முதலில் எஸ்.சி/ எஸ்.டி என ஒன்றாக உள்ள துறையை தனித்தனியாக பிரிக்க வேண்டும். இரண்டு வகையான மக்களுக்கும் பிரச்சனைகள் வேறு வேறு.

மலைவாழ் மக்கள்
மலைவாழ் மக்கள்

உதாரணத்துக்கு இலவச மாடு கொடுத்தால், கீழே உள்ளவர்களுக்கு கொடுப்பார்கள். அது மேலே உள்ளவர்களுக்கு ( மலையில் வசிப்பவர்களுக்கு) வராது. அதுபோல் இலவச வீடு கீழே 3 லட்சத்துக்கு கட்டினால் மேல 4 லட்சம் செலவாகும். இப்படி எஸ்.சி/ எஸ்.டி. மக்களுக்கு சேர்த்து திட்டங்களை அறிவிப்பதால் பழங்குடி மக்களுக்கு திட்டங்கள் வந்து சேர்வதில்லை. இதில் இன்னொரு வேடிக்கை என்னதுன்னா, மத்திய அரசு, எஸ்.சி, எஸ்.டி நலத் துறையை வனத்துறையுடன் இணைக்க நினைக்கிறாங்க. ஏற்கனவே பழங்குடி மக்களை காட்டை விட்டு துரத்தும் வேலையை வனத்துறை செய்து கொண்டிருக்கும்போது,
ஐ.எப்.எஸ் ஆபிசர்களே எஸ்.சி.எஸ்.டி நலத்துறையின் அதிகாரிகளாக இருந்தால் என்ன நடக்கும்? வன உரிமை சட்டம் கூறியுள்ளதுபோல் பழங்குடி மக்களுக்கு நிலவுரிமையை வழங்க அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் காட்டின் புதல்வர்களை காட்டிலிருந்து அந்நியப்படுத்தி விடுவார்கள்." என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு