Published:Updated:

விழுப்புரம்: `உள் ஏலம்... சாதியப் பாகுபாடு?!’ - தொடரும் மணக்குப்பம் ஊராட்சி ஏரி மீன் ஏல சர்ச்சை

சாலைமறியலில் ஈடுபட்ட துலுக்கப்பாளையத்தைச் சேர்ந்த மக்கள்
சாலைமறியலில் ஈடுபட்ட துலுக்கப்பாளையத்தைச் சேர்ந்த மக்கள்

`உள் ஏலம் எடுக்கும்போது ஒருவர் எடுத்துள்ளார். அரசு ஏலத்தின்போது, இரண்டு நபர்கள் கேட்டதில் குப்புசாமி என்பவர் ஏலத்தை இறுதியாக எடுத்துள்ளார். 'ஊர் வழக்கம் என்று ஒன்று உள்ளபோது அதை மீறி ஏலம் எடுத்துள்ளனர்' என்பதே இப்போதுவரை பிரச்னையாக உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது மணக்குப்பம் ஊராட்சி. இந்த ஊராட்சியில், மணக்குப்பம், துலுக்கப்பாளையம், முத்தால்பேட்டை ஆகிய மூன்று கிராமங்கள் உள்ளன. மூன்று வருடத்துக்கு ஒரு முறை அரசு மீன்வளத்துறை சார்பில் விடப்படும் ஏரி மீன் ஏலம் இந்த ஆண்டும் விடப்பட்டுள்ளது. அதில், இந்த ஊராட்சி சார்பில் விடப்பட்ட ஏலத்தில் மணக்குப்பத்தைச் சேர்ந்த குப்புசாமி என்ற நபர் அதிக விலைக்கு ஏலத்தை எடுத்துள்ளார். அதே ஏலத்தில் துலுக்கப்பாளையத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் குறைவான விலைக்கு ஏலம் கேட்டதால், அவருக்கு ஏலம் கிடைக்கவில்லை. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குப்புசாமி ஏலத்தில் வெற்றிபெற்றதால் மீனை பிடிக்கவிடாமல் இன்றுவரை சமூகரீதியான பிரச்னை நடந்துவருவதாகக் கூறப்டுகிறது.

மணக்குப்பத்தைச் சேர்ந்த முத்து என்பவரிடம் இது குறித்துப் பேசினோம். ``நாங்க மணக்குப்பம் கிராமத்தச் சேர்ந்தவங்க. என்னுடைய மாமாதான் குப்புசாமி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நாங்க சுமார் 700 குடும்பங்கள் இங்கே இருக்கோம். மாற்று சமூகத்தினர் சுமார் 350 குடும்பங்க இங்கே இருப்பாங்க. நாங்க அனைவருமே ஒற்றுமையாத்தான் இருக்கோம். எங்க ஊராட்சிக்கு உட்பட்ட பக்கத்து ஊருதான் துலுக்கப்பாளையம். அங்கே மாற்று சமூகத்துக்காரங்க சுமார் 300 குடும்பங்கள் இருக்காங்க. மூணு வருஷத்துக்கு ஒரு முறை அரசு சார்பா மீன்வளத்துறை, ஏரி மீன் ஏலம் அறிவிக்கும். அந்த வகையில இந்த வருஷமும் (2021) ஜனவரியில ஏலம் அறிவிச்சாங்க.

ஏலத்தைப் பெற்றதற்கான பத்திர நகல்
ஏலத்தைப் பெற்றதற்கான பத்திர நகல்

எங்க ஊர் சார்பா குப்புசாமி 51,000 ரூபாய்க்கு விண்ணப்பிச்சிருந்தாரு. துலுக்கப்பாளையம் கிராமத்தின் சார்பாக பழனிவேல் 28,000 ரூபாய்க்கு விண்ணப்பிச்சிருந்தாரு. அதிக விலைக்கு ஏலம் கேட்ட குப்புசாமிக்கு ஏலம் கிடைச்சுது. நலவாரிய வரியோட சேர்த்து 55,000 ரூபாய் அரசுக்கு செலுத்திட்டோம்.

அரசு மீன்வளத்துறை சார்பா ஏரி ஏலம் அறிவிக்கிறதுக்கு முன்னாடியே, 'பரம்பரை பரம்பரையாக நாங்கதான் ஏலம் எடுப்போம்'னு சொல்லி கடந்த வருடம் (2020), டிசம்பர் மாதம் துலுக்கப்பாளையம் கிராமத்து சார்பாக ஊருக்குள்ளயே ஏலத்தை விட்டாங்க. இந்த ஏலத்தில 'கல்பட்டு' கிராமத்துக்காரர் ஒருத்தரு 4.10 லட்சம் ரூபாய்க்கு ஏரியை ஏலம் எடுத்துள்ளார். மாற்று ஊரை சேர்ந்த நபருக்கு ஏலம் கொடுத்தா எங்கே பிரச்னை வருமோ என்று முத்தால்பேட்டையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் ஏலம் எடுத்ததாக பொய்யா சொல்லிக்கிட்டாங்க. எங்க ஊர்க்காரங்களுக்கு மொத்தமா 7,000 ரூபாயை அதிலிருந்து பிரிச்சுக் கொடுத்திருக்காங்க. மீதி பணத்தை அவங்களேவெச்சுக்கிட்டாங்க.

'இது தவறு'னு எங்க ஊர்க்காரங்க கொஞ்சம் பேரு அங்க போய் கேட்டோம். ஊராட்சியில 3 'பூத்' இருக்கு. அனைத்துக்கும் சரிசமமா பிரிச்சுத் தாங்க அப்படினு கேட்டோம். அதனால எந்தப் பயனும் இல்லை. அப்புறம், ஜனவரி மாசம் அரசு சார்பில் மீன்வளத்துறை அறிவித்த ஏலத்தில அதிக விலைக்கு குப்புசாமி கேட்டதால ஏலத்தை எடுத்துட்டோம். ஏலத்தை நாங்க அதிக விலைக்கு எடுத்ததைத் தெரிஞ்சுக்கிட்டு குப்புசாமியின் தந்தையையும், என்னையும் மணக்குப்பம் ரோட்டுக்கு பக்கத்துல கூப்பிட்டுவெச்சு. "ஒழுங்கா எங்களுக்கு ஏலத்தை எடுத்து கொடுத்துடுங்க. நீங்க கட்டிய பணத்தைத் திருப்பித் தந்துடுறோம். அப்படியும் மீறி நீங்க ஏரி ஏலத்தை எடுத்தா, இந்த ஊரிலேயே இருக்கக் கூடாது. ஏரியில கால்வெச்சா வெட்டிடுவோம்" அப்படினு கொலை மிரட்டல் கொடுத்தாங்க. அன்றைய தினமே திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் இது போன்ற பிரச்னை அப்படின்னு புகார் கொடுத்தோம். முதல்ல சமாதான பேச்சுவார்த்தையை தேர்தலுக்கு பின்னர் வைத்துக்கொள்ளலாம்னு பேசி அனுப்பினாங்க.

விழுப்புரம்: பட்டியலின முதியவர்களைக் காலில் விழவைத்த சம்பவம்! - நடந்தது என்ன?- இருதரப்பு விளக்கம்!
மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்ற குப்புசாமி தரப்பினர்.
மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்ற குப்புசாமி தரப்பினர்.

ஏலத்தை நாங்க எடுத்துட்டதால, பிப்ரவரி மாதம் அரசு அதிகாரிங்க வந்து 70,000 மீன் குஞ்சுகளை ஏரியில விட்டாங்க. அதுல நான்கு வகை மீன் இருந்துச்சு. ஒருநாள் அதிகாரிங்க பார்வையிட வரும்போது துலுக்கப்பாளையத்தைச் சேர்ந்த சிலரு இரண்டு டாட்டா ஏசி வண்டி மூலமா சுமார் 4 டன் அளவுக்கு மீனைப் பிடிச்சு வண்டியில ஏத்திக்கிட்டுப் போயிட்டாங்க. அப்போ, அதிகாரிங்க அவங்ளைக் கூப்பிட்டுவெச்சு பேசினாங்க. ஆனா, எந்த முடிவும் எட்டப்படலை. தாசில்தார் தலைமையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தையில, ``குத்தகை எடுத்தவங்களுக்குத்தான் இது செல்லும்"னு அறிவிச்சாங்க. அப்போதுதான் புதிதாக அமைந்த அரசு, முழு ஊரடங்கு அறிவிச்சுது. அதனால, 'ஊரடங்கு முடிந்ததும் அடுத்த மாதம் 7-ம் தேதி மீன் பிடித்துக்கொள்ளுங்கள்' என்று கூறினார் தாசில்தார். இந்த இடைப்பட்ட காலத்துல இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., எஸ்.பி., கலெக்டர், தொகுதி எம்.பி (ரவிக்குமார்) மற்றும் எம்.எல்.ஏ (பொன்முடி) உள்ளிட்டவங்களை முறைப்படி சந்திச்சு அனுமதி கேட்டோம். எல்லோரும் ஊரடங்கு முடியட்டும்னு சொன்னாங்க. அதன் பிறகு ஒருநாள் அரசு நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொன்முடி அவர்கள், 'முறைப்படி குத்தகை எடுத்தவர்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்' என்று அதிகாரிங்ககிட்ட சொன்னாரு. அதன்படி நாங்க மீன்பிடிக்கப் போனோம்.

அன்றும் எதிர்த்தரப்புக்காரங்க பிரச்னை பண்ணினாங்க. அதனால ஆர்.டி.ஓ (RDO) தலைமையில 2-வது சமாதானப் பேச்சுவார்த்தை நடந்துச்சு. அப்போது, 'பட்டியல் சமூகத்துக்காரன் குத்தகை எடுத்து, பங்கு பிரிச்சுக் கொடுத்தா நாங்க வாங்கிக்கணுமா? அதுக்கு நாங்க விட மாட்டோம்'னு எங்க சமூகப் பேரை பகிரங்கமா சொல்லி அங்கிருந்த ஒரு சிலர் பேசினாங்க. 'இதில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தும்படி உள் ஏலம் நடந்துள்ளது. இதை ரத்து செய்ய பரிந்துரைக்கிறேன்' என்று ஆர்.டி.ஓ சொன்னாரு. அப்போது அவர்கள் (எதிர்த் தரப்பினர்) அதில் கையெழுத்து போட்டார்கள். 3-வது சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தப்ப அவங்க வரவேயில்லை. குத்தகை எடுத்த எங்களை போலீஸ் பாதுகாப்போடு மீன் பிடிச்சிக்கும்படி அரசு அதிகாரிங்க சொன்னாங்க. எஸ்.பி உட்பட 120 போலீஸ்காரங்க முன்னிலையில ஜூன் 26-ம் தேதி ஏரியில நாங்க மீன்பிடிக்க ஆரம்பிச்சோம்.

காலையில 9 மணி இருக்கும்போது எதிர்த்தரப்புக்காரங்க பகிரங்கமா வந்து பேசினாங்க. அதனால ரெண்டு தரப்பையும் விழுப்புரத்துக்கு அழைத்துச் சென்று, மதியம் 2 மணியில இருந்து ராத்திரி 8:30 மணி வரைக்கும் 4-வது சமாதானப் பேச்சுவார்த்தை நடந்துச்சு. ``இறுதியாக, அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறீர்களா..?’’ என்று கேட்டு இரு தரப்பையும் அரசு அதிகாரிங்க கையெழுத்து போடச் சொன்னாங்க. நாங்க அதற்கு உடன்பட்டு கையெழுத்து போட்டோம். ஆனா அவங்க ``கையெழுத்து போட மாட்டோம்" அப்படின்னு வெளிநடப்பு செஞ்சாங்க. ``ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்குள் கையெழுத்து போட வேண்டும்’’னு அவங்ககிட்ட ஆர்.டி.ஓ கூறிட்டார். ஆனா அவங்க கையெழுத்து போடவேயில்லை.

சாலைமறியலில் ஈடுபட்ட துலுக்கப்பாளையத்தைச் சேர்ந்த மக்கள்
சாலைமறியலில் ஈடுபட்ட துலுக்கப்பாளையத்தைச் சேர்ந்த மக்கள்

இதற்கிடையில உள் ஏலம் எடுத்த கல்பட்டையைச் சேர்ந்த அந்த நபரும், துலுக்கப்பாளையத்து பஞ்சாயத்துகாரங்ககிட்ட கொடுத்த தொகையில 3.5 லட்சத்துக்கிட்ட வாங்கிக்கிட்டுப் போயிட்டாரு. இப்போ ஏரியில தண்ணியும் கம்மியாகி, மீன்களும் செத்துக்கிட்டு வருது. என்ன செய்றதுன்னே தெரியலை. இது போன்ற ஒரு சம்பவம் 2015-லயும் நடந்துச்சு. சமாதானம் பேசி அனுப்பிட்டாங்க" என்றார் வருத்தத்துடன்.

எதிர்த் தரப்பான துலுக்கப்பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் பேசினோம். ``மணக்குப்பம் பஞ்சாயத்தாக இருந்தாலும், துலுக்கப்பாளையத்தைச் சேர்ந்தவங்கதான் வழிவழியா ஏரி ஏலம் விடுவோம். இந்த முறையும் அப்படித்தான் மேளம் அடிச்சு, தகவல் சொல்லிட்டுத்தான் ஏலம் விட்டோம். 10,000 ரூபாய் காசும் அவங்களுக்குக் கொடுத்துட்டோம். அதையும் வாங்கிக்கிட்டு, அதிக விலைக்கு அரசு ஏலம் எடுத்துட்டு வந்துட்டாங்க. அரசு ஏலத்துக்கு முன்னாடி, உள் ஏலம் விட்டோம். அப்போ 4.10 லட்சம் வரை ஏலம் போச்சு. முத்தால்பேட்டைக்கும் சேர்த்து 3 லட்சம் வரை கேட்டாங்க. நாங்க 2 லட்சம் வரை தர்றோம்னு சொன்னோம். அதுக்கு சம்மதிக்காத அவங்க, அரசுவிட்ட ஏரி ஏலத்தை எடுத்துட்டாங்க. அவங்களைச் சாதிரீதியா நாங்க பேசலை. அவங்கதான் இதைச் சாதிரீதியா கொண்டுபோறதுக்கு முயற்சி பண்ணுறாங்க. இந்த முறை உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப்போறோம். எங்க ஊரைத் தனிப் பஞ்சாயத்தா கேட்க இருக்கோம்" என்றார்.

இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரைத் தொடர்பு கொண்டு பேசினோம். ``உள் ஏலம் எடுக்கும்போது ஒருவர் எடுத்திருக்கிறார். அரசு ஏலத்தின்போது இரண்டு நபர்கள் கேட்டதில் குப்புசாமி என்பவர் ஏலத்தை இறுதியாக எடுத்திருக்கிறார். 'ஊர் வழக்கம் என்று ஒன்று இருக்கும்போது அதை மீறி ஏலம் எடுத்திருக்கின்றனர்' என்பதே இப்போதுவரை பிரச்னையாக இருக்கிறது. பேச்சுவார்த்தை முடியும் நிலையில் இருக்கிறது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்" என்றார்.

மேலும் ஆர்.டி.ஓ (RDO)- விடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டோம். ``விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இரு தரப்பினரிடையே பிரச்னை இருக்கிறது. இன்னும் முடிவு எட்டப்படவில்லை. விசாரணை முடிந்ததும் தகவல் தெரிவிக்கிறேன்" என்றார்.

``இன்னிக்கு நிலவரப்படி உலகில் இரண்டே சாதி தான்..!?’’ - வாக்கிங் டாக்கிங் 7 #MyVikatan

இந்தநிலையில், இருதரப்பினர் இடையே சுமுகமான முடிவு எட்டப்படாததாலும், சாதிரீதியான பிரச்னை இரு தரப்புக்கும் இடையே ஏற்படக்கூடும் என்பதாலும், மீன்வளத்துறை அரசு அதிகாரிகளே நேற்று (01.07.2021) காலையில் மீனைப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துலுக்கப்பாளையத்தைச் சேர்ந்த நபர்கள், மணகுப்பம் கூட்டுச்சாலை அருகே சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இது ஒருபுறமிருக்க, 'முறைப்படி ஏலம் எடுத்த எங்களை ஏன் மீன்பிடிக்கவிடவில்லை?' என்று கேட்டு மணக்குப்பத்தைச் சேர்ந்த குப்புசாமி தரப்பினர் ஏரியை முற்றுகையிட்டதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு