Published:Updated:

இந்துக்களுக்கு மட்டுமே இந்தியாவா? - இந்து பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியரை நீக்க முடியாது!

இந்துக்களுக்கு மட்டுமே இந்தியாவா?
பிரீமியம் ஸ்டோரி
இந்துக்களுக்கு மட்டுமே இந்தியாவா?

பல்கலைக்கழகங்கள் பொதுவானவை!

இந்துக்களுக்கு மட்டுமே இந்தியாவா? - இந்து பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியரை நீக்க முடியாது!

பல்கலைக்கழகங்கள் பொதுவானவை!

Published:Updated:
இந்துக்களுக்கு மட்டுமே இந்தியாவா?
பிரீமியம் ஸ்டோரி
இந்துக்களுக்கு மட்டுமே இந்தியாவா?

காசி இந்து பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருத மொழித்துறையில் முனைவர் பிரோஸ் கான் என்ற இஸ்லாமியரை உதவிப் பேராசிரியராக நியமித்ததை எதிர்த்து சில மாணவர்களும் உள்ளூர் இயக்கங்களும் போராட்டத்தில் ஈடுபடுவது தலைப்புச் செய்தி யாகியுள்ளது. இந்து பல்கலைக்கழகத்தில், அதிலும் அதன் சம்ஸ்கிருத மொழித்துறையில் இஸ்லாமியரை நியமித்தது தவறு என்று கூறுவது சரியா என்று பார்ப்போம்.

எப்படி உருவானது இந்து பல்கலை?

இந்துக்களுக்கு மட்டுமே இந்தியாவா? - இந்து பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியரை நீக்க முடியாது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1887-ம் ஆண்டு சிப்பாய் கலகம் முறியடிக்கப்பட்ட பிறகு பிரிட்டிஷ் இந்தியா விக்டோரியா மகாராணியின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப் பட்டது. இந்தியாவில் நிர்வாகத்தைக் கவனிப்பதற்காக டெல்லியில் வைஸ்ராய் நியமிக்கப்பட்டார். புதிதாக ஆட்சியை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து, இந்திய மக்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக மதராஸ், பம்பாய் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்களை சட்டத்தின் மூலம் ஏற்படுத்தினர். பிறகு 19-ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் சுதந்திர தாகத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியாத நிலையில், தேசபக்தியுடன் சமயம் சார்ந்த கல்வியையும் அறிவியல் ஞானத்தையும் உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டன அந்த பல்கலைக்கழகங்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காசியைத் தலைமையிடமாகக் கொண்டு அன்னிபெசன்ட் தலைமையில் மத்திய இந்து பள்ளி ஒன்று 1898-ம் ஆண்டு ஏற்படுத்தப் பட்டது. தொடர்ந்து 1904-ம் ஆண்டு பண்டிதர் மதன்மோகன் மாளவியா மத்திய இந்து பல்கலைக்கழகம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக இந்து பல்கலைக்கழக சங்கம் 1911-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில் தர்பங்கா அரசரும் ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான முயற்சியைத் தொடங்கினார். இப்படி மூன்று தரப்புகளில் முயற்சிகள் தொடங்கப்பட்ட நிலையில் மாளவியா அவர்கள் அன்னிபெசன்ட் அம்மையாரையும், தர்பங்கா அரசரையும் சந்தித்தார். அவர் இந்த முயற்சிகளை ஒருமுகப்படுத்தினார். பிறகு பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயை டெல்லியில் சந்தித்து பல்கலைக்கழகம் குறித்து வேண்டுகோள் விடுத்தார். அதன் பிறகே வைஸ்ராயின் ஏகாதிபத்திய சட்டசபையில் வைக்கப்பட்டு 1915-ல் நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் ‘இந்து பல்கலைக்கழக சட்டம்’ (பனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டி). அதற்கு அரசு தரப்பில் நிபந்தனையாக ‘அன்னிபெசன்ட் நடத்தி வந்த மத்திய இந்து கல்லூரியை இந்த புதிய பல்கலைக்கழகத்துடன் இணைத்துவிட வேண்டும்’ என்று கூறியதால் அந்தக் கல்லூரியை அவர் மாளவியாவிடம் தானமாகத் தந்துவிட்டார்.

இந்துக்களுக்கு மட்டுமே இந்தியாவா?
இந்துக்களுக்கு மட்டுமே இந்தியாவா?

இந்து பல்கலைக்கழகச் சட்டத்தின் 4-வது பிரிவில் ‘இந்து பல்கலைக்கழகத்தில் சமய வேறுபாடின்றி அனைவரும் கல்வி கற்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் கொண்டுவந்த திருத்தமான பிரிவு 4A-ன்படி ‘இந்து சமயம் மட்டுமன்றி கிறித்துவம், இஸ்லாம், ஜொராஸ்ட்ரியம், சமணம், சீக்கியம் மற்றும் புத்த சமயங்கள் பற்றி ஆராய்வதற்கு முயற்சி செய்யப் படும்’ என்றும் கூறப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்தை நிர்வகிக்கும் செயற்குழு மற்றும் இதர அமைப்புகள் எதிலும், ‘இந்துக்களுக்கு முன்னுரிமை உண்டு’ என்று கூறப்படவில்லை. அதேபோல, ‘சம்ஸ்கிருதத் துறை உட்பட எந்தத் துறையிலும் வேலைவாய்ப்பில் இந்துக்கள் மட்டுமே நியமிக்கப்படுவர்’ என்று விதிக்கப் படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்படி உருவானது இஸ்லாமிய பல்கலை?

வடஇந்தியாவில் இந்துக்கள் தங்களது கலாசாரம் கெடாமல் கல்வியை வளர்த்துக் கொள்வதற்காக காசி இந்து பல்கலைக்கழகத்தை உருவாக்கியதுபோல, இஸ்லாமியர்களும் 1877-ம் ஆண்டு இஸ்லாமிய ஆங்கில கீழ்த்திசைக் கல்லூரியை உருவாக்கினார்கள். அதுவும் வைஸ்ராயின் ஏகாதிபத்திய சட்டசபையில் வைக்கப்பட்டு, ‘அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகச் சட்டம்’ இயற்றப்பட்டது. உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை அரசு சார்பான கல்வி நிறுவனங்கள் அதிகமாக உருவாகாத கால கட்டத்தில் காசி இந்து பல்கலைக்கழகமும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமும் சிறந்த கலாசாலைகளாக விளங்கின. அலிகர் பல்கலைக்கழக நிர்வாகத்தில் பணியாளர்களும் மாணவர்கள் மத்தியிலும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக பங்கு வகித்ததால் அது இஸ்லாமியருக்கு மட்டும் சொந்தம் என்று பலரும் நினைத்திருந்தனர். உண்மையில், அலிகர் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்கள் மட்டுமின்றி, இந்துக்களும் பணியாற்றினார்கள்.

பல்கலைக்கழகங்கள் பொதுவானவை!

இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு இந்திய அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்டு 1950-ல் அது செயல்பாட்டுக்கு வந்தது. அந்தச் சட்டத்தின் 30-வது பிரிவில், ‘சிறுபான்மையினர் (மொழி மற்றும் சமயம் சார்ந்தவை) தங்களுக்கு விருப்பப்பட்ட கல்வி நிறுவனங்களை நிறுவி நடத்திக்கொள்ளலாம்; அந்த நிறுவனங்களின் நிர்வாக விஷயங்களில் அரசு தலையிட முடியாது’ என்ற அடிப்படை உரிமை வழங்கப்பட்டது. இதனால் சிலர், ‘அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை சிறுபான்மையினர் நிறுவனமாக அறிவிக்க வேண்டும்’ என்று வழக்கு தொடுத்தனர்.

இப்படி அசீஸ் பாட்ஷா என்பவர் தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ‘அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் வைஸ்ராயின் சட்டத்தின்கீழ் இயற்றப்பட்டதால், அதை சிறுபான்மையினர் நிறுவனம் என்று சொல்ல முடியாது’ என்று தீர்ப்பளித்தது (1967). மறுபடியும், ‘அந்தப் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் நிறுவனமல்ல’ என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் 2006-ல் கூறியதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டினர். 2019 பிப்ரவரி மாதம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வில் அந்த வழக்கைப் பரிசீலிப்பதற்காக ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போதுவரை வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்துக்களுக்கு மட்டுமே இந்தியாவா? - இந்து பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியரை நீக்க முடியாது!

நூற்றாண்டை நெருங்கிய காசி இந்து பல்கலைக்கழகத்தில் இதுவரை அந்தப் பல்கலைக் கழகம் இந்து சமயத்தவருக்கு மட்டுமே சொந்தம் என்கிற கோரிக்கை எப்போதுமே எழுப்பப் பட்டதில்லை. மேலும், மத்திய சட்டத்தின்கீழ் இயற்றப்பட்ட அந்தப் பல்கலைக்கழகத்துக்கு அரசமைப்பு சட்டத்தின் அனைத்து பிரிவுகளும் பொருந்தும். பிரிவு 14-ல் வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை, சம வாய்ப்புகள் என்று கூறப்பட்டிருப்பதுடன், பிரிவு 16(2)-ல் பொதுப் பணிகளில் சமயம், இனம், சாதி, பாலினம், வம்சாவளி, பிறந்த இடம் (அ) வசிக்கும் இடம் ஆகிய காரணங்களுக்காக எவ்வித வேறுபாட்டையும் காட்ட முடியாது என்பது அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரோஸ் கானை நீக்க முடியாது!

இதன்படி பிரோஸ் கான் காசி இந்து பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருத உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டதற்கு சட்டப்படி தடை ஏதுமில்லை. அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறிய தகவலின்படி சம்ஸ்கிருத உதவிப் பேராசியர் பதவிக்கு மனு செய்தவர்களின் மனுக்களைப் பரிசீலித்ததில் பத்து பேரின் மனுக்கள் மட்டுமே தகுதி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் பட்டனர். அதில் ஒன்பது பேர் இரண்டு மதிப்பெண்கள் மட்டுமே பெற்றனர். பிரோஸ் கான் மட்டுமே பத்துக்கு பத்து மதிப்பெண் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரோஸ் கானின் தந்தை ரம்ஜான் கான் ராஜஸ்தானில் கோசாலை ஒன்றில் பணியாற்றுகிறார். அவரும் சம்ஸ்கிருதப் பண்டிதரே. அதேபோல் அவரின் பாட்டனார் இந்துக்கள் கூட்டத்தில் பஜனைப் பாடல்கள் பாடுபவர்.

எனவே, பல்கலைக்கழகம் ஒன்றில் அரசமைப்பு சட்டத்தின் விதிகளின்கீழ் செயல்பட்டு வரும் அதனது நிர்வாகக்குழு, இஸ்லாமியர் ஒருவரை சம்ஸ்கிருதத் துறையில் நியமனம் செய்ததை எதிர்த்து போராட்டம் நடத்துவது சட்டவிரோத மானது மட்டுமின்றி, பொதுப்பணிகளுக்கான தேர்வில் அப்பட்டமான சமய குரோதங்களைக் கொண்டுவருவது விஷமத்தனமானது; கண்டிக்கப்பட வேண்டியது.

தமிழ்நாட்டில் நடந்தது என்ன?

இதேபோன்ற ஒரு கூத்தை தமிழ்நாடு அரசும் நடத்தியது. தொல்லியல் துறையில் ஆராய்ச்சி நடத்துவதற்காக கல்வெட்டு ஆய்வாளர், தொல்பொருள் ஆய்வாளர், தொல்பொருள் பொறுப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. 1969-ல் உருவாக்கப்பட்ட அந்தப் பதவிகளுக்காக பணிவிதிகள் 1970-ல் இயற்றப்பட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்கீழ் நியமனம் கொண்டுவரப்பட்டது. அந்த விதிகளின்படி கல்வெட்டு ஆய்வாளருக்கான தகுதியாக, ‘பட்டமேற்படிப்பில் தமிழ் (அ) சம்ஸ்கிருதம் பயின்றிருக்க வேண்டும்; கல்வெட்டுகளைப் படிப்பதில் அறிவு வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. பிறகு இந்தப் பதவிகள் தமிழ்வளர்ச்சி மற்றும் கலாசாரத் துறையின்கீழ் கொண்டுவரப்பட்டது. இதுவரை பிரச்னை இல்லை.

பல்கலைக்கழகம் ஒன்றில் அரசமைப்பு சட்டத்தின் விதிகளின் கீழ் செயல்பட்டு வரும் அதனது நிர்வாகக்குழு இஸ்லாமியர் ஒருவரை சம்ஸ்கிருதத் துறையில் நியமனம் செய்ததை எதிர்த்து போராட்டம் நடத்துவது சட்டவிரோதமானது!
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

ஆனால், 1988-ல் முதல்முறையாக இந்தப் பதவிகளுக்கான தகுதியாக ‘இதர சமயம் சாராதவராகவும் இந்துவாகவும் இருக்க வேண்டும்’ என்று விதி வகுக்கப்பட்டது. இந்த நிலையில்தான், 2009-ம் ஆண்டு கல்வெட்டு ஆய்வாளர், தொல்பொருள் ஆய்வாளர், தொல்பொருள் பொறுப்பாளர் பதவிகளுக்கான தேர்வு பற்றி தமிழ்நாடு தேர்வாணையம் அறிக்கை வெளி யிட்டது. அந்தப் பதவியின் சிறப்பு விதிகளின்படி, ‘தொல்லியல், தமிழ், சம்ஸ்கிருதம் (அ) தொன்மையான இந்திய வரலாறு இவற்றில் ஏதாவது ஒன்றில் பட்ட மேற்படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும். சம்ஸ்கிருத ஞானம் கட்டாயம் தேவை. விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்’என்று விளம்பரப்படுத்தப் பட்டிருந்தது.

பிரோஸ் கான் நியமனத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
பிரோஸ் கான் நியமனத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

அப்போது, இதில் முக்கியப் பதவிக்கு முற்றிலும் தகுதிபெற்றவராக இருந்த நல்லா முகம்மது என்பவர் விண்ணப்பித்திருந்தார். அவரது மனுவைத் தமிழ்நாடு தேர்வாணையம் 2009, நவம்பர் மாதம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு என் முன்னால் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நான், ‘அரசமைப்பு சட்டம் 16(2) பிரிவின்படி பொதுப்பணிகளுக்கு வாய்ப்பளிப் பதற்கு மதத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் காட்ட முடியாது. சமயம் சார்ந்த நிறுவனங்களை மேற்பார்வையிடும் பதவிகளுக்கு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே பதவி வகிக்கலாம் என்ற நிபந்தனை உருவாக்கு வதற்கு அரசமைப்பு சட்டப்பிரிவு 16(5) வழி வகுக்கிறது. எனவே, நல்லா முகம்மது மனு செய்த பதவிகள் இந்துக்களுக்கு மட்டுமே என்று பாகுபாடு செய்வது அரசமைப்பு சட்டத்துக்கு விரோதம்’ என்று தீர்ப்பளித்தேன். இஸ்லாமியர்களுக்கு அரசுப் பணிகளில் பாகுபாடு காட்டப் படுவதைப் பற்றியும், அதனால் அரசுப் பணிகளில் அவர்களது மக்கள் தொகைக்கேற்ப அவர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படாதது பற்றியும், நீதிபதி ராஜேந்தர் சச்சார் குழு அறிக்கை பற்றியும் தீர்ப்பில் குறிப்பிட்டேன். மேலும், தொல்லியல் துறை சார்ந்த பதவிகளில் சமய வேறுபாடு காட்டுவது எப்படிப்பட்ட ஆபத்தை விளைவிக்கும் என்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.

1992-ல் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு ராமர் கோயில் கட்டும் விவகாரம் பெரிதாக்கப்பட்டது. அதையொட்டி வந்த வழக்குகளை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் குழு விசாரித்தது. இடிக்கப்பட்ட மசூதியின் கீழ் எந்த மாதிரியான கட்டுமானம் இருந்தது என்று அறிக்கை சமர்ப்பிக்கும்படி இந்திய தொல்லியல் துறைக்கு கட்டளை விதிக்கப்பட்டது. இந்திய தொல்லியல் துறை அங்குள்ள கட்டுமானத்தில் அகழ்வாராய்ச்சி செய்வதற்காக ஒரு ஜப்பானிய நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்தது. அந்தப் பணியைச் செய்வதற்காக அமைக்கப்பட்ட 20 பேர் குழுவில் இரண்டு பேர் மட்டுமே இஸ்லாமியர் என்றும், குழி தோண்டுவதற்காக அமர்த்தப்பட்ட 89 தொழிலாளிகளில் ஒன்பது பேர் மட்டுமே இஸ்லாமியர்கள் என்ற தகவலும் நீதிமன்றத்திடம் கூறப்பட்டது. இதைக் குறை கூறிய நீதிமன்றம் அவர்களது அகழ்வாராய்ச்சியைக் கண்காணிப்பதற்கு குழு ஒன்றை நியமித்தது.

தொல்லியல் ஆராய்ச்சித் துறையின் அறிக்கைகள் மிகமிக முக்கியம் (சமீபத்தில், அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பிலிருந்தே இதன் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ளலாம். தொல்பொருள் ஆராய்ச்சிக்குழுவில் சமயம் சார்ந்த நியமனங்கள் எத்தகைய விளைவுகளை உருவாக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்). அந்த முக்கியத்துவத்தையெல்லாம் சுட்டிக்காட்டி நல்லா முகம்மது வழக்கில் அவர்களுக்குச் சார்பாகத் தீர்ப்பளித்ததுடன், அரசமைப்பு சட்டத்துக்கு முரணாகச் செயல்பட்ட தொல்லியல் துறைக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தேன் (2011).

உதயச்சந்திரனுக்கு பாராட்டுகள்!

ஆனால், எனது உத்தரவை நிறைவேற்றுவதற்கும் அதற்கான பணிவிதிகளைத் திருத்துவதற்கும் அரசாங்கம் எட்டு வருடங்களை எடுத்துக் கொண்டது. 10.7.2019 தேதியிட்ட அரசாணை எண்.97 (சுற்றுலா கலாசாரம் சமய நிறுவனங்கள் துறை, தமிழ்நாடு அரசு) உத்தரவின்படி இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட சமய வேறுபாடு காட்டப் பட்ட நிபந்தனைகள் ரத்துசெய்யப்பட்டு அந்தத் துறையின்கீழ் உள்ள பதவிகளில் எந்தச் சமயத்தினரும் விண்ணப்பிக்கலாம் என்ற விதி வெளியிடப்பட்டது. உணர்வுபூர்வமாக இத்தகைய அநீதிகளைக் களைந்த துறைச்செயலர் உதயசந்திரனுக்கு நமது பாராட்டுகள்.

காசி இந்துப் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத் துறைக்கு உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட முனைவர் பிரோஸ் கானுக்கு எதிராக நடத்தப் படும் எதிர்ப்புக் குரல்கள் ஒடுக்கப்பட வேண்டும். பொதுப்பணிகளில் சமயம் சார்ந்த வேறுபாடுகள் அரசமைப்பு சட்டத்தால் தடைசெய்யப் பட்டுள்ளதை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்வது டன், இந்தியா ஒரு மதசார்பற்றக் குடியரசு என்ற குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும். அதுவே இந்திய அரசியலமைப்பு நாளான நவம்பர் 26-ம் தேதிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism