Published:Updated:

அம்பேத்கர், வெறுமனே தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரா?

அம்பேத்கர்
அம்பேத்கர்

அம்பேத்கரை சாதித் தலைவராக, குறிப்பாகப் பட்டியலின மக்களின் தலைவராகப் பார்க்கும் பார்வையே பலரிடமும் இருக்கிறது. அதனால்தான் இன்னமும் சாதிய வன்மத்துடன் அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்படுகின்றன அல்லது அவமானப்படுத்தப்படுகின்றன.

அண்ணல் அம்பேத்கர் யார் என்று கேட்டால், 'சட்டமேதை' என்று பாடப்புத்தகத்தில் படித்ததை அனைவரும் ஒப்பித்துவிடுவார்கள். ஆனால், அவரை சாதித்தலைவராக, குறிப்பாகப் பட்டியலின மக்களின் தலைவராகப் பார்க்கும் பார்வையே பலரிடமும் இருக்கிறது. அதனால்தான், இன்னமும் சாதிய வன்மத்துடன் அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்படுகின்றன அல்லது அவமானப்படுத்தப்படுகின்றன. அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்தவரின் சிலைகளை அடைக்க கூண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. நீங்கள், உங்கள் வீட்டில் அம்பேத்கர் படத்தை மாட்டிவையுங்கள் அல்லது உங்கள் வாகனத்தில் அம்பேத்கர் உருவத்தை வரைந்துவையுங்கள். நீங்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் உங்களைப் பட்டியலினச் சாதியைச் சேர்ந்தவர் என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஒருவரின் பெயர் காந்தி, ஜவஹர், சுபாஷ் என்றெல்லாம் இருக்கும்போது, அவரின் சாதி என்ன என்று கேள்வி எழுப்பப்படுவதில்லை. ஆனால், ஒருவருக்கு அம்பேத்கர் என்று பெயர் இருந்தால், கண்டிப்பாக அவர் என்ன சாதி என்ற கேள்வி முகத்தில் வீசப்படும்.

அம்பேத்கர், சாதியத்தால் ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களைப் பற்றிப் பேசியவர்தான். அவரே பட்டியலினச் சாதியில் பிறந்து பல அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் வாழ்நாள் முழுக்க சந்தித்தவர்தான். ஆனால், அவர் வெறுமனே தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் மட்டுமல்ல. அவர், இந்தியாவில் நிலவும் ஒடுக்குமுறைகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதற்கு எதிரான சிந்தனை கொண்டவர். அதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டவர்.

அம்பேத்கர்
அம்பேத்கர்

தமிழகம் என்பது சமூக நீதியின் நிலம். 1921, நீதிக்கட்சி ஆட்சியிலேயே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. ஆனால், சுதந்திர இந்தியாவில் அந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தது.

'ஆர்ட்டிக்கிள் 15' படம் பார்த்திருப்பீர்கள். 'ஒரு நபருக்கு பிறப்பின் அடிப்படையில் பாரபட்சம் காட்டக்கூடாது' என்பது அரசியல் சட்டப்பிரிவு 15. சமத்துவத்துக்காக அண்ணல் அம்பேத்கரால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டப்பிரிவைக் காரணம் காட்டி, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 1950-ல் வழக்குத் தொடுக்கப்பட்டது. 'அரசியல் சட்டத்துக்கு எதிரானது' என்று தீர்ப்பளிக்கப்பட்டு, இட ஒதுக்கீடும் ரத்துசெய்யப்பட்டது. இதற்கு எதிராக, தந்தை பெரியார் தலைமையில் மாபெரும் போராட்டம் வெடித்தது. அதன் விளைவாக, இந்தியாவின் முதல் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

தேவை கருணை அல்ல; நீதி! - ARTICLE 15
'சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும் அவர்களின் முன்னேற்றம் கருதி, மாகாண (மாநில) அரசாங்கம் தனிச்சலுகை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் எந்த தனி ஏற்பாட்டையும் இந்த 15-வது விதியின் ஒரு பிரிவோ அல்லது விதி 29-ன் 2-வது உட்பிரிவோ தடை செய்யாது' என்ற சட்டத் திருத்தமே அது.
அம்பேத்கர்
அம்பேத்கர்

அதுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கே 'பட்டியலினத்தவர்' என்ற சட்ட அங்கீகாரம் இருந்தது. பாபாசாகேப் அம்பேத்கர்தான், 'இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்' என்ற வகைப்பாட்டையும் உருவாக்கினார். அதுமட்டுமல்ல, 1951-ல் அவர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விடுத்த அறிக்கையில், ' 'இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்' என்ற பிரிவை அரசியல் சட்டம் ஏற்று ஓராண்டு ஆகிவிட்டதே, இன்னும் ஏன் அவர்கள் நலன்களை ஆராயும் ஆணையம் உருவாக்கப்படவில்லை?' என்று நேரு அரசாங்கத்தைக் கண்டித்தார். இப்போது சொல்லுங்கள், அம்பேத்கர் வெறுமனே தாழ்த்தப்பட்ட தலைவரா?

பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்கான அடித்தளத்தை உருவாக்கிக்கொடுத்தவர் அம்பேத்கர். ஆனால், இன்று அம்பேத்கர் சிலைகளைச் சேதப்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், அம்பேத்கரால் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது வரலாற்று அவலம்.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், ஏன் தன் பதவியைத் தூக்கியெறிந்தார்? 'பாரம்பரியம்' என்ற பெயரில் இந்துக்களால் ஆங்காங்கே கடைப்பிடிக்கப்பட்டுவந்த நடைமுறைகளுக்கு மாறாக, அவர்களுக்கென்று ஒரு பொதுவான சட்டத்தை உருவாக்குவதற்காகவே, 'இந்து சட்டத்தொகுப்பு மசோதா'வைக் கொண்டுவந்தார். இப்போது, யாரெல்லாம் 'இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் வேண்டும்' என்று குரல் கொடுக்கிறார்களோ அவர்கள்தான் 'இந்துக்களுக்கே பொதுச்சட்டம் கூடாது' என்று அம்பேத்கருக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள்.

குறிப்பாக, அம்பேத்கர் கொண்டுவந்த 'இந்து சட்டத்தொகுப்பு மசோதா'வில், 'பெண்களுக்கு சொத்துரிமை அளிக்க வேண்டும்', 'பெண்களுக்கு மணவிலக்கு செய்யும் உரிமை வேண்டும்' என்ற அம்சங்களை அவர்கள் ஏற்கவில்லை. இந்து சட்டத்தொகுப்பு மசோதாவை சாதியச் சனாதனிகள் ஏற்காததால், அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பெண்களின் உரிமைகளுக்காகத் தன் பதவியைத் தூக்கியெறிந்தவர், அம்பேத்கர். இப்போது சொல்லுங்கள், அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும்தான் தலைவரா?

அம்பேத்கர்
அம்பேத்கர்

அவர் வெறுமனே சாதியம் குறித்து சிந்தித்தவரல்ல. இலக்கியம், தத்துவம், சமயம், பொருளாதாரம் என அவர் படிக்காத, எழுதாத துறைகள் கிடையாது. 'ரிசர்வ் வங்கி'யை உருவாக்கியவர் அவர்தான். அவரது ஆய்வுப்படிப்பே இந்திய ரூபாயைப் பற்றித்தான். 'தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேரம்தான் வேலைநேரம்' என சட்டம் கொண்டுவந்தவர் அவர்தான். இப்போது சொல்லுங்கள், அம்பேத்கர் வெறுமனே தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரா?

அம்பேத்கர் பற்றி அறியாதவர்கள், அவரை சாதித்தலைவராகச் சுருக்குகின்றனர். சாதியத்தின் அதிகாரத்தை ருசித்துக்கொண்டே அதைத் தக்கவைக்கத் துடிக்கும் சாதியத்தலைவர்களுடன், வாழ்நாள் முழுவதும் சாதியத்தின் இயங்கியல் குறித்து சிந்தித்து, அதை ஒழிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க முயன்ற அம்பேத்கரையும் சாதியத் தலைவர் என்கின்றனர். யாருக்கு சாதியால் நன்மை விளையுமோ அவர்கள்தான் சாதியைக் காப்பாற்ற விரும்புவார்கள். ஆனால் அம்பேத்கரோ, தன் வாழ்நாள் முழுவதும் சாதியின் காரணமாக அவமானங்களைச் சந்தித்தவர். அவர் எப்படி சாதித்தலைவராக இருக்க முடியும்?

அம்பேத்கர்
அம்பேத்கர்

அவர் முதன்முதலில் எழுதிய நூல், 'இந்தியாவில் சாதிகள்' 1916ல் வெளியானது. நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தில் சாதி எப்படி உருவானது என்பது குறித்து விரிவாக ஆராய்ந்திருப்பார். இன்று நடக்கும் ஆணவக்கொலைகளுக்கான வேர்களை அவர் அதில் அடையாளம் காட்டியிருப்பார். அவர், சாதிகளின் தோற்றத்தையும் இயங்கியலையும் ஆராய்ந்தது, அதைக் காப்பாற்றுவதற்காக அல்ல, சாதியை ஒழிப்பதற்காக. அதனால்தான், 'சாதி ஒழிப்பு' என்னும் நூலை எழுதினார். அவர் வெறுமனே தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி மட்டும் கவலைகொண்டால், ஏன் 'சூத்திரர்கள் யார்?' என்ற நூலை எழுத வேண்டும்? சாதியை ஒழிப்பதற்காக சாதிமறுப்புத் திருமணம், இட ஒதுக்கீடு, மதமாற்றம் எனப் பல வழிமுறைகளையும் தன் வாழ்நாள் முழுக்க முயன்று பார்த்தவர் அவர். ஒருபுறம், அவருக்கு மதச்சாயம் பூசி தங்கள் அதிகாரத்துக்குள் விழுங்கப்பார்க்கிறவர்கள், இன்னொருபுறம் அம்பேத்கர் சிந்தனைகளின் செயற்பாடுகளின் அடித்தளங்களையே தகர்க்கப்பார்க்கிறார்கள்.

ஒருபுறம் அம்பேத்கரை 'சாதித்தலைவர்' என்று முத்திரை குத்தும் கயமை என்றால், இன்னொருபுறம் அவருக்கு காவிச்சாயம் பூசி, 'இந்துத்துவ அம்பேத்கர்' ஆக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. காஷ்மீர் பிரச்னை, பொது சிவில் சட்டம், பாகிஸ்தான் பிரிவினை போன்றவற்றில் அம்பேத்கர் பேசியவற்றில், எழுதியவற்றில் சில வரிகளைப் பிய்த்துப்போட்டு அவரை மதவாதியாக நிறுவப்பார்க்கிறார்கள். இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில், அம்பேத்கருக்காக வாக்களித்தது முஸ்லிம் லீக் என்னும் உண்மையை மறைத்துவிட்டுதான் அவரை இந்துத்துவ அம்பேத்கராக நிறுவப்பார்க்கிறார்கள். அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிராவிலேயே மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அவர் பெயரை வைக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தியவர்கள்தான், இன்று அவருக்கு காவிச்சாயம் பூசப்பார்க்கிறார்கள்.

ஒருபுறம் அவருக்கு மதச்சாயம் பூசி தங்கள் அதிகாரத்துக்குள் விழுங்கப்பார்க்கிறவர்கள், இன்னொருபுறம் அம்பேத்கர் சிந்தனைகளின் செயற்பாடுகளின் அடித்தளங்களையே தகர்க்கப்பார்க்கிறார்கள்.
அம்பேத்கர்
அம்பேத்கர்

'மதச்சார்பற்ற' நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கரின் விருப்பம். ஆனால், மதவாதத்தின் அடிப்படையிலான கும்பல் கொலைகள், அம்பேத்கர் விரும்பிய மதச்சார்பின்மைக்கு எதிரானது. ரிசர்வ் வங்கியை உருவாக்கியவர் அம்பேத்கர். ஆனால் ரிசர்வ் வங்கி, நீதித்துறை, சிபிஐ போன்ற சுயேச்சையான அமைப்புகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

'இட ஒதுக்கீடு என்பது கல்விரீதியாகவும் சமூகரீதியாகவும் பின் தங்கியவர்களுக்குத்தான்' என்பதை அழுத்தமாக வலியுறுத்தியவர், அண்ணல் அம்பேத்கர். 'பொருளாதார அளவுகோலை' அவர் ஏற்கவில்லை. ஆனால், 'முன்னேறிய சாதியினருக்குப் பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு' கொண்டுவந்தவர்கள் அம்பேத்கரைத் தங்கள் மதவாத ஆக்டோபஸ் கரங்களுக்குள் அடக்கப்பார்க்கிறார்கள்.

அம்பேத்கர்
அம்பேத்கர்

உரக்கச் சொல்வோம். அம்பேத்கர் சாதித்தலைவரும் அல்ல; மதவாதத் தலைவரும் அல்ல. எங்கெல்லாம் அடக்குமுறைகள் இழைக்கப்படுகிறதோ அதற்கு எதிரான குரல்களுக்குப் பெயர், அம்பேத்கர். எங்கெல்லாம் அநீதி திணிக்கப்படுகிறதோ, அதற்கு எதிரான நீதியின் வேட்கைக்குப் பெயர், அம்பேத்கர். எங்கெல்லாம் பாரபட்சம் நிலவுகிறதோ அதை எதிர்த்து சமத்துவத்துக்காகப் போராடுபவர்களின் தோள்களில் விழும் கைகளின் பெயர், அம்பேத்கர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு