Published:Updated:

சுஷாந்த் விவகாரம்: தீபிகா படுகோன் டார்கெட்... பின்னணி அரசியல் என்ன?

 தீபிகா படுகோன்
News
தீபிகா படுகோன்

சுஷாந்த் சிங் தற்கொலை, பாலிவுட் திரையுலகத்தினர் மத்தியில் இருப்பதாகச் சொல்லப்படும் போதைப்பொருள் பழக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது நடிகை தீபிகா படுகோன் மீது எழுந்திருக்கும் போதைப்பொருள் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை புறநகர்ப் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தூக்கிட்டு இறந்துகிடப்பதாக மும்பை காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மன அழுத்தத்துக்கு மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தார் என்றும், அதன் காரணமாகவோ அல்லது தொழில் போட்டியின் காரணமாகவோ சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் மும்பை காவல்துறை விசாரணை நடத்தியது. தற்கொலைக் குறிப்பு எதுவும் சம்பவ இடத்தில் கிடைக்கவில்லையென்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்

பாலிவுட் திரையுலகில் `நெப்போடிசம்’ எனப்படும் வாரிசு முன்னுரிமை அரசியல் ஆதிக்கம் இருப்பதாகவும், அதன் காரணமாகவே சுஷாந்த், இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் நெப்போடிசம் குறித்த விவாதங்கள் எழுந்தன. சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தி கைது உட்பட இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு, நடிகை தீபிகா படுகோன் இந்த விவகாரத்துக்குள் இழுத்துவரப்பட்டிருக்கிறார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருள் பழக்கம் இருப்பதாகப் பரபரப்பு செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தீபிகா மீதும் அந்தக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

தீபிகா மீதான இந்தக் குற்றச்சாட்டு பா.ஜ.க ஆதரவாளர் என்று சொல்லப்படும் நடிகை கங்கனா ரனாவத்தால் எழுப்பப்படுவதால், இது சர்ச்சையாகியிருக்கிறது. `பத்மாவத்’ திரைப்படம் உள்ளிட்ட பல சர்ச்சைகளில் அடிபட்ட தீபிகா படுகோன், இப்போது சுஷாந்த் வழக்கில் குறிவைக்கப்படுகிறாரா என்ற கேள்வியைச் சிலர் எழுப்புகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மூன்று மாதங்களுக்கு மேலாக மாணவர் போராட்டம் நடைபெற்றுவந்த நிலையில், ஜனவரி 5-ம் தேதி இரவு முகமூடி அணிந்த சுமார் 50 பேர் கொண்ட கும்பல் ஒன்று பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சபர்மதி விடுத்திக்குள் நுழைந்து மாணவிகள், பேராசிரியர்கள் ஆகியோரை பயங்கர ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியது. அதில், ஜே.என்.யூ மாணவர் பேரவைத் தலைவர் உட்பட பலர் படுகாயமடைந்தனர்.

ரியா சக்ரபோர்த்தி
ரியா சக்ரபோர்த்தி

அந்தத் தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் பெரும்பாலான கல்லூரிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. ஜே.என்.யூ மாணவர்களும் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இரவு முழுவதும் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்தச் சமயத்தில், பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோன், திடீரென ஜே.என்.யூ-வுக்கு வந்து மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டார். போராட்டம் நடத்திய மாணவர்களுடன் நின்று அவர்களுக்குத் தன் ஆதரவைத் தெரிவித்தார். பின்னர், மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசிவிட்டு, 15 நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்துக்கு தீபிகா படுகோன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்த விவகாரம், இந்திய சினிமாத்துறை மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் தயாரித்து நடித்த `சபாக்’ என்ற திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில், பின்விளைவுகளைப் பற்றித் துளியும் கவலைப்படாமல், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணிச்சலுடன் நிற்கிறார் என்று தீபிகாவைப் பலர் பாராட்டினர். இன்னொருபுறம், ரிலீஸாகவிருக்கும் தன் படத்துக்கு விளம்பரம் தேடவே ஜே.என்.யூ-வுக்கு அவர் சென்றார் என்ற விமர்சனத்தையும் சிலர் முன்வைத்தனர். `சபாக் படத்தைப் புறக்கணிக்க வேண்டும்’ என்ற ஹேஷ்டாக்கும் `நான் தீபிகாவுக்கு ஆதரவு அளிக்கிறேன்’ என்ற ஹேஷ்டாக்கும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்யப்பட்டன.

சுஷாந்த், ரியா
சுஷாந்த், ரியா

ஜே.என்.யூ மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டது தொடர்பாக ஒரு பேட்டியில் கூறிய தீபிகா, ``நான் பயப்படவில்லை என்று பெருமைப்படுகிறேன். போராட்டத்தால் நம் எண்ணங்களை வெளிப்படுத்த முடியும் என நினைக்கிறேன். போராட்டம் பற்றியும், நாட்டின் எதிர்காலம் பற்றியும் நாம் சிந்திக்கிறோம் என்பது உண்மை என்று நினைக்கிறேன். மாணவர்களுக்காகக் குரல் கொடுக்கவும், தங்களை வெளிப்படுத்தவும், மக்கள் சாலைகளில் இறங்கி நின்று போராடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில், நாம் மாற்றத்தைக் காண விரும்பினால், இது முக்கியமானதாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டார்.

ஜே.என்.யூ மாணவர் போராட்டத்துக்கு முன்னதாக, 2018-ம் ஆண்டு தீபிகா படுகோனே ஒரு சர்ச்சையில் சிக்கினார். அவர் நடித்து வெளியான `பத்மாவத்’ என்ற திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று ஒரு தரப்பினர் பெரும் கலாட்டாவில் ஈடுபட்டனர். அந்தப் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், `தீபிகாவின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படும்’ என்ற அறிவிப்புகளும் வெளியாகின. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்தப் படம் வெளியானது. தற்போது போதைப்பொருள் தொடர்பான சர்ச்சையில் தீபிகா படுகோன் பெயர் அடிபடுகிறது.

ரகோத்தமன்
ரகோத்தமன்

இது குறித்து ஓய்வுபெற்ற சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமனிடம் பேசினோம்.

``சுஷாந்த் சிங் விவகாரத்தைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகத்தில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. ஆனால், சுஷாந்த் சிங் வீட்டிலிருந்து ஒரு கிராம் போதைப்பொருள்கூட எடுக்கப்படவில்லை. பொதுவாக, திரையுலகினர் போதைப்பொருளை உட்கொள்வார்கள். ஆனால், அது கஞ்சா கிடையாது. அது ஒரு போதை மாத்திரை. அதைக் குளிர்பானத்தில் கலந்து குடித்தால் போதை ஏறும். சுஷாந்த் சிங்குக்கு மன அழுத்தம் இருந்தது அவரின் குடும்பத்தினருக்கு நன்றாகத் தெரியும். அதனால், போதை மாத்திரை உட்கொள்ளும் வழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது. அவரின் தங்கைதான் தடைசெய்யப்பட்ட அந்த மாத்திரையை, மருத்துவரின் அனுமதியுடன் வாங்கி, தன் சகோதரனுக்குக் கொடுத்திருக்கிறார். இதுபோன்ற விவகாரங்கள் செய்திகளாக வந்திருக்கின்றன.

இந்த நிலையில்தான், மேலிடத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாக, சுஷாந்த் சிங்-கின் காதலியான ரியா சக்ரபோர்த்தி திடீரெனக் கைதுசெய்யப்பட்டார். இன்னும் பலர் மீது விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். திரையுலகத்தினர் மத்தியில் போதை மாத்திரைகள் உட்கொள்ளும் வழக்கம் சகஜமானது. பாலிவுட்டில் மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகத்திலும் அந்தப் பழக்கம் உண்டு. மனக்கொதிப்பில் இருப்பவர்களுக்கு அந்தக் கொதிப்பை அடக்குவதற்காக குறிப்பிட்ட காலம்வரை பயன்படுத்தப்பட்ட அந்த மாத்திரை, மூளையைக் கடுமையாகப் பாதிக்கிறது என்று சொல்லி, 1985-க்கு பிறகு தடைசெய்யப்பட்டது. அந்த மாத்திரையை சுஷாந்த்துக்கு வாங்கிக் கொடுப்பதாக ரியா சக்ரபோர்த்தி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

கங்கனா - சுஷாந்த், ரியா
கங்கனா - சுஷாந்த், ரியா

அதை வைத்துக்கொண்டு ரியா சக்ரபோர்த்தியைச் சிறையில் போட்டுவிட்டார்கள். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது என்றாலும், இதை பீகார் தேர்தல் வரை இழுத்துக்கொண்டு செல்வார்கள். தற்கொலையா, கொலையா என்பதே இன்னும் கண்டறியப்படவில்லை. அது தடைசெய்யப்பட்ட மாத்திரை என்றாலும், பெருமளவில் அது கைப்பற்றப்பட்டிருந்தால்தான் அது குற்றம். சட்டப்படி ஐந்து கிராம் வரை அதை வைத்துக்கொள்ளலாம். அதை விற்கக் கூடாது. அளவுக்கு அதிகமாக உட்கொண்டு பொது இடத்தில் பிரச்னை செய்யக் கூடாது. இந்த விவகாரத்தின் பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. ஆட்சியாளர்களை எதிர்ப்பவர்களை ஏதோ ஒரு வகையில் சிக்கவைப்பதற்கான நடவடிக்கையாகவும் இதைப் பார்க்கலாம்” என்றார்.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் புரட்சிக்கவிதாசனிடம் பேசினோம்.

``பாலிவுட்டில் எந்த அளவுக்கு போதைப்பொருள் புழங்குகிறது என்பதை வரக்கூடிய செய்திகளைக்கொண்டே அறிந்துகொள்ள முடியும். சுஷாந்த் சிங் விவகாரத்தில் எழுந்திருக்கும் போதைப்பொருள் பின்னணி மற்றும் கைது நடடிவக்கைகள் ஒன்றும் ஆச்சர்யமளிக்கும் விஷயங்கள் கிடையாது. இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெற்றுவருகிறது. குற்றம் நிகழ்ந்ததா என்பதைப் புலன் விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில்தான் முடிவு செய்ய முடியும். எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்வரை, நடைபெறும் புலன் விசாரணை என்பது வானளாவிய அதிகாரம்கொண்டது. அதில், நீதிமன்றமே தலையிடாது. இதற்கிடையில், அதுபற்றி யாரும் கருத்து சொல்ல முடியாது. சாட்சிகளைக் கலைத்துவிடக் கூடாது, புலன் விசாரணையை பாதிக்கும் அளவில் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் குற்றம் சுமத்தப்பட்டவரைக் கைதுசெய்கிறார்கள்.

புரட்சிக்கவிதாசன்
புரட்சிக்கவிதாசன்

அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் யாரையும் ஒரு வழக்குக்குள் கொண்டுவரவே முடியாது. ஒருவரின் தனிப்பட்ட உரிமைகளை இந்திய அரசியல் சட்டம் பாதுகாக்கிறது. அரசியல்ரீதியாகப் பழிவாங்கப்படுகிறார்களென்றால், அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம். எனவே, இந்த விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாகக் கூறுவதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.