Published:Updated:

நீலகண்டன்: "ஒரு துளி நீரும் சமுத்திரம் ஆகும்" | இவர்கள் | பகுதி - 4

நீலகண்டன்

சிறு துளி மனிதத்தால் சமூக மேம்பாட்டின் பெருவெள்ளத்துக்கு வித்திட்டவர்- திரு.நீலகண்டன் (நிலம் அறக்கட்டளை மற்றும் நீர்த்துளிகள் அமைப்பு).

நீலகண்டன்: "ஒரு துளி நீரும் சமுத்திரம் ஆகும்" | இவர்கள் | பகுதி - 4

சிறு துளி மனிதத்தால் சமூக மேம்பாட்டின் பெருவெள்ளத்துக்கு வித்திட்டவர்- திரு.நீலகண்டன் (நிலம் அறக்கட்டளை மற்றும் நீர்த்துளிகள் அமைப்பு).

Published:Updated:
நீலகண்டன்
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்
``நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்."
ஆதியாகமம் 3:19.

உலக வரலாற்றின் அழியாப் பக்கங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டவர்களின் வெற்றிப் பயணங்களை அணுகிப் பார்த்தால் அவை பெரும்பாலும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி அனிச்சைச் செயலாக தொடங்கியவையாகவே இருந்திருக்கின்றன. வனங்களில் வாழும் யானைகள் புரட்டிப்போடும் பாறைகளால் நதிகளின் திசை மாறி, அவை மனித நாகரிகங்கள் உருவாகக் காரணமாகிவிடுவதைப்போல சில மனிதர்களின் வாழ்வும், அவர்கள் மானுடத்தின் பால்கொண்ட பேரன்பினால் புரிந்த செயற்கரிய செயல்களும் காலப்போக்கில் வருங்காலத் தலைமுறைகளின் வழிகாட்டிகளாகவும் தலைவர்களாகவும் அவர்களை மாற்றிவிடுகின்றன.

`நிலம்' அறக்கட்டளை மற்றும் 'நீர்த்துளிகள்' இயக்கத்தின் வாயிலாக இடையறாத சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளால் இன்றைய இளைய தலைமுறையின் முன்னோடியாகத் திகழ்பவர் நீலகண்டன் அவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவர்கள்
இவர்கள்

சராசரி நடுத்தர வர்க்கத்தில் பிறந்த நீலகண்டன் ஒரு கணினி அறிவியல் பட்டதாரி. தனியார்துறையில் தனக்கு அமைந்த வேலையைத் துறந்து, குடும்பச் சூழல் காரணமாக தந்தையின் வியாபரத்தை கவனிக்கவேண்டிய கட்டாயத்தில் தன் சொந்த ஊரான திருவண்ணாமலைக்குத் திரும்புகிறார். தனது இளம்பிராயத்தில் ஒருமுறை திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு சிலர் கேட்பாரற்றுக் கிடந்த மனித சடலங்களை மீட்டு, அவர்களுக்கு இறுதி மரியாதை செய்து நல்லடக்கம் செய்வதைப் பாரக்கிறார். அவரது மனதில் அக்காட்சி பெரும் பாதி்ப்பை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார். சைக்கிளில் அவர்களைக் கடந்து சென்றவர் திரும்பவும் அவ்வழியே வந்து அவர்களிடம் விசாரிக்கிறார். சக மனிதர்களையும் உறவுகளையும் அவர்கள் உயிருடன் இருக்கும்போதே மதிப்புடன் பார்க்கத் தவறும் மனிதர்கள் வாழும் உலகில், உற்றார், உறவினர், நண்பர்களென எவ்வித உறவு வட்டத்துக்குள்ளும் வராத முகம் தெரியாத யாரோ சிலர் மனிதம் என்ற உணர்வினால் மட்டுமே உந்தப்பட்டு, அவர்களின் ஆன்மா சாந்தியடையும் ஈமக்கிரியைகளைச் செய்வதென்பது அவ்வளவு எளிதில் கடந்துவிடக்கூடிய விஷயம் அல்ல.

தனது வாழ்வின் பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொண்டு நாற்பது வயதுக்கு மேல் தானும் அத்தகைய சேவையில் ஈடுபட வேண்டும் என்று மனதோடு உறுதியெடுக்கிறார் நீலகண்டன். ஆனால் காலம் அவரை நெடுநாள் காத்திருக்கவைக்கவில்லை. வல்லவர்களின் தேவை எப்போதும் இருப்பதில்லை; ஆனால் நல்லவர்களின் தேவை காலமுள்ள வரை இச்சமூகத்துக்கு இருக்கும். அப்படித் தொடங்கியதுதான் திரு.நீலகண்டனது சேவையும் பயணமும்.

இதுவரை குறைந்தது சுமார் ஐநூற்று ஐம்பது பேரின் இறுதி நல்லடக்கத்தை நிறைவேற்றியிருப்பதாகக் கூறும்போதும் அவர் குரலில் ஏதும் பெரிதும் சாதித்த தொனி இல்லை.

தனது கடமையெனக் கருதி அவர் ஆற்றும் அரும்பணிகள் காலத்தின் சுவடுகளாக மாறுமென்பதில் சந்தேகமில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'நீர்த்துளிகள்' எனும் எண்ணத்தைத் தன்னார்வத் தொண்டு நிறுவனமாக மாற்றிய தனது நண்பரான திரு.ராகவனுடன் சேர்ந்து திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளின் நன்னீர் குளங்களைத் தூர்வாரிப் பராமரிக்கும் பணிகளிலும் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார் நீலகண்டன். `நீரின்றி அமையாது உலகு’ என்னும் முதுமொழிக்கேற்ப மண்ணின் செழுமை பாதுகாக்கப்படவும், சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலை குலையாமலிருக்கவும் நீர்நிலைகள் செப்பனிடப்பட்டு மழைநீரும் நிலத்தடிநீரும் முறையே பாதுகாக்கப்படுவதன் அவசியத்தை உணர்ந்து தொடங்கப்பட்ட 'நீர்த்துளிகள்' அமைப்பின் முன்னெடுப்புப் பணிகளை திரு.நீலகண்டன் பட்டியலிட்டபோது நம்மால் அந்த அமைப்பிலுள்ள அனைவரின் ஈடுபாட்டையும், தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் வியக்காமலிருக்க முடியவில்லை.

தூர்வாருதல்
தூர்வாருதல்

முதற்கட்டமாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையிலுள்ள தீர்த்த குளங்களை தூர்வாரிப் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்து, குளங்களைத் தூர்வாரும் பணியில் நீலகண்டன், ராகவன் மற்றும் அவ்வமைப்பின் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையைச் சுற்றிலும் 365 குளங்கள் இருந்துள்ளன. ஒவ்வொரு நாளும் ஒரு குளத்திலிருந்து நீர் எடுத்துச் சென்று அருணாசலேஸ்வரர் கோயிலில் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்து, பூஜைகள் ஒரு காலத்தில் நடந்திருக்கிறது. காலப்போக்கில் இது கைவிடப்பட்டிருக்கிறது. திருவண்ணாமலையைச் சுற்றியிருந்த பல குளங்கள் காணாமல் போய்விட்டன. அவற்றில் சுமார் 120 குளங்கள் மட்டுமே இப்போதும் நீர்ப்பிடிப்போடு இருக்கின்றன. அவற்றுள் பூமந்தாள் தீர்த்த குளம், சரஸ்வதி தீர்த்தம், பச்சையம்மன் தீர்த்தம், பிள்ளையார் தீர்த்தம், சோமவார தீர்த்த குளம், நந்தி தீர்த்தம், தர்மராஜா தீர்த்தகுளம், வேடியப்பன் குளம் ஆகியவற்றை தூர்வாரி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் அண்ணாமலையார் ஆலய வழிப்பாட்டுக்கும் உகந்ததாக மாற்றியுள்ளனர் 'நீர்த்துளிகள்' அமைப்பினர்.

தூர்வாருதல்
தூர்வாருதல்

`பூமந்தாள் தீர்த்தக் குளத்தின் நீர், நாவிற்கினிய சுவையோடு பசிப்பிணிப் போக்கும் வல்லமைகொண்டதாகக் கருதப்படுகிறது.’ இதைக் கூறும்போதே நீலகண்டனின் குரலில் ஆர்வம் பற்றிக்கொள்கிறது. திருவண்ணாமலையாரின் அனுதின திருமஞ்சன நீராட்டுக்கு பூமந்தாள் குளத்து நீர் பயன்படுத்தப்பட்ட மரபு இருந்திருக்கிறது. 2003-ம் ஆண்டு வரை அந்தக் குளத்தின் தூய்மையைப் பராமரிக்கும் பொருட்டு நகராட்சி சார்பில் இரண்டு காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது ஆச்சர்யமூட்டும் தகவலாக இருந்தது. காலப்போக்கில் பராமரிப்புப் பணிகள் குறைந்ததால், குளத்தின் நீர்ப்பிடிப்பு வற்றிப்போய் பயன்பாட்டுக்கும் ஆகாமல் போய்விட்டது. ராகவன், நீலகண்டன் இருவரும் குளத்தைத் தூர்வாரும் முயற்சிகளுக்காக உதவிகள் நாடி, அவை கிடைக்காமற்போகவும், தாங்களே அந்த அரும்பணியைக் கையிலெடுத்து, செவ்வனே செய்து முடித்தனர்.

சுமார் அறுபது நிரந்தரத் தன்னார்வ உறுப்பினர்கள்கொண்ட 'நீர்த்துளிகள்' அமைப்பின் மூலமாக இதுவரை திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிளின் பதினாறு குளங்களும், ஒரு முழு ஏரியும் தூர்வாரப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. குளங்களைப் பராமரிப்பதோடு மட்டுமல்லாமல், வன அமைப்பு முயற்சியாக கடந்த 2018-ம் ஆண்டு அண்ணாமலை கிரிவலப் பாதையில் மட்டும் சுமார் 2,000 மரக்கன்றுகள் நட்டு அவற்றை முறையாகப் பராமரிக்கும் பணிகளையும் நீலகண்டனும் அவருடைய நண்பர்கள் அமைப்பும் தொடர்ந்து செய்துவருகின்றனர்.

`ஒரு பொதுக் காரியத்தில் இறங்கிச் செயல்படுவதென்பது ஒரு நாளில் முடிந்துவிடும் வேலையல்ல.

அதற்குத் தொடர்ந்த ஈடுபாடும் கண்காணிப்பும் அவசியம்’ என்கிறார் நீலகண்டன். அதனாலேயே அவர்கள் அடுத்தடுத்து புதிய முன்னெடுப்புகளில் கால் வைக்கும் முன் இதுவரை தொடங்கிய பணிகளைத் தொடர்ந்து செவ்வனே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். எந்தச் சுய விருப்பு வெறுப்புமின்றிச் செயல்படும் இவர்கள், தனியார் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வற்புறுத்தி நுழைந்து ஏதும் செய்வதில்லை. அவ்வாறு செய்வதால் உண்டாகும் விளைவுகளைச் சந்தித்துப் போராடுவதைக் காட்டிலும் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுதல் நலம் என்பது நீலகண்டன் போன்றோரின் கண்ணோட்டமாக இருக்கிறது. அது நியாயமானதும்கூட.

நீர்த்துளிகள் மற்றும் நிலம் அறக்கட்டளையின் ஆணிவேராகத் திகழ்பவர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்கள்.
நல்லடக்கம்
நல்லடக்கம்

சமூக வள மேம்பாடென்னும் ஒரு விசையால் இயக்கப்படுபவர்கள். பல்வேறு தொழில்துறையைச் சார்ந்தவர்களும் இந்த அமைப்புகளில் தொண்டாற்றிவருகின்றனர். இளைஞர்களுக்கு சமூக அக்கறை இல்லை என்ற பொதுப்புத்திக் கருத்துகளைப் பொய்யாக்கும் இவர்களைப் போன்ற இளைஞர்களின் பார்வை வருங்காலத்துக்கான நம்பிக்கைக் கீற்றுகள் என்றே கூற வேண்டும்.

`உலகத்தின் சிறந்த சொல், செயல்’ என்ற விதியின்படி செயல்படும் திரு.நீலகண்டன்,

தமது சமூகப் பணிகளுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் அவை சார்ந்த உதவிகளை உள்ளூர் ரோட்டரி சங்கங்கள் மற்றும் லயன்ஸ் கிளப் போன்ற அமைப்புகளிடமிருந்தும், வேறு பல தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுக்கொள்வதாகக் கூறினார். சமூகநலனுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பெரும்பாலும் யாரும் தடை சொல்வதில்லை என்று தனது அனுபவத்தின் வாயிலாக உணர்ந்ததாக அவர் கூறினார். ஒருவேளை யாரேனும் தடை விதித்தாலும், அவை தாமாகவே மறைந்துவிட்டதாகவும், தங்களது பயணத்தை அவை ஒரு நாளும் நிறுத்தும் வல்லமையைப் பெற்றுவிடவில்லை என்றபோது அவரது மென்மையான குரலிலும் வன்மை தொனித்தது.

நீலகண்டன்
நீலகண்டன்

பொருளீட்டுதல், புகழீட்டுதல் போன்ற பயன்களின் மேல் நாட்டம் கொள்ளாமல் சமூகத்தின் நன்மைக்காக மட்டுமே செயல்படும் திரு.நீலகண்டன் போன்றோரின் பயணங்களிலிருந்து நாம் பெறும் பாடங்கள் அநேகமுண்டு.

`நல்ல குடிமக்கள் சிற்றெறும்புகள் போன்றவர்கள். அவர்கள் தங்கள் சமூகநலனை முதன்மையாகக் கொள்பவர்களாவர்."
- கிளாரன்ஸ் டே.

திரு.நீலகண்டன் போன்றோர் சிற்றெறும்புகள் போன்றவர்கள். அவர்கள் மலைகளையும் தங்களுடைய தோள்களில் சுமந்து செல்லத் துணிபவர்கள். சமூகநலனும் மனிதமும் மட்டுமே தழைக்கவேண்டி தம்மை வருத்திக்கொண்டு பயணிக்கும் இவர் போன்றோரால் `பெய்யெனப் பெய்யும் மழை.’

- தொடரும்.