Published:Updated:

பாலியல் குற்றவாளிகளை `கும்பல் படுகொலை' செய்வதுதான் தீர்வா..?! ஜெயா பச்சனின் கருத்து சரியா?

ஜெயா பச்சன் லின்சிங் கருத்து
ஜெயா பச்சன் லின்சிங் கருத்து

ஹைதராபாத்தில் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பேசிய ஜெயா பச்சன், ‘இத்தகைய குற்றம் செய்வோரை 'லின்ச்சிங்' (அடித்துக் கொல்வது) தான் தீர்வாக அமையும்’ என்றிருக்கிறார்.

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமாகப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனத் தெலங்கானா தெருக்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரத்திலிருந்தே இந்தத் தேசம் மீண்டிருக்கவில்லை. இன்றளவும் இத்தகைய கொடூரங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இவை தவிர்த்து வெளி உலகத்தின் வெளிச்சத்துக்கு வராமலே மறைமுகமாக எக்கச்சக்கமான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஒவ்வொரு கொடூரச் சம்பவங்களின்போதும் அதற்கு எதிர்வினையாக பொதுச் சமூகத்தில் சீற்றம் உருவாகி போராட்டங்கள் வெடிக்கின்றன. மனிதத்தன்மையற்ற கொடூரமான குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் குரல்கள் எழுப்பப்படுகின்றன. அதன் உச்சமாக ஹைதராபாத் சம்பவத்தைக் குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் பேசிய சமாஜ்வாடி எம்.பி ஜெயா பச்சன், "குற்றவாளிகளை நடுத்தெருவில் அழைத்து வந்து லின்ச் (கும்பல் கொலை) செய்ய வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

ஒரு சாமானிய மனிதராக இந்தச் சீற்றம் அனைவருக்கும் வரக்கூடியதுதான். ஆனால், ஒரு கொள்கை வகுக்கக்கூடியவராக, சட்டத்தை இயற்றக்கூடியவராக உள்ள ஒருவர் பொதுச் சமூகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்திருக்கிறார். வேறு பலரும் அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

கொடூரமான குற்றங்களுக்கு என்ன தண்டனை அளிப்பது என்பது இங்கு விவாதமல்ல. கடந்த சில ஆண்டுகளாக இந்தியத் தெருக்கள் முழுவதும் அரங்கேறிவரும் லின்ச்சிங் சம்பவங்களை எதார்த்தப்படுத்துவது போலத்தான் பேசியிருக்கிறார் ஜெயா பச்சன். சர்வாதிகார நாடுகளிலெல்லாம் பொது வெளியில் மக்களின் பார்வையில் குற்றவாளிகளைத் தூக்கிலிட்டோ, துப்பாக்கியால் சுட்டோ தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்தியா அதுபோன்று கிடையாது என்றுதான் இதுநாள் வரையில் சொல்லிவருகிறோம். தூக்குத் தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளால் குற்றங்கள் குறைகிறது என்பது எங்குமே அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இந்தியாவில் தூக்குத் தண்டனை தற்போதும் அமலில் இருந்து வருகிறது. வழக்கம்போல விவாதிக்கப்பட வேண்டிய அடிப்படையான மாற்றங்களைப் பற்றி விவாதிக்காமல் கடந்து செல்கிறோம்.

நிர்பயா
நிர்பயா

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, பின்பற்றப்பட வேண்டிய அடிப்படையான மாற்றங்களைப் பற்றி The International Foundation for Crime Prevention and Victim Care (PCVC) அமைப்பின் நிறுவனர் பிரசன்னா பூர்ணசந்திரன் பேசுகையில், "2012 நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரத்துக்குப் பிறகு, நாம் நெடுந்தூரம் கடந்து வந்திருக்கிறோம். பொதுச் சமூகத்தில் ஒரு அறச்சீற்றம் இருந்தது. குற்றங்கள் நிகழ்ந்த பிறகு, குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டப்படி தண்டிப்பதில் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. குற்றங்கள் பதிவு செய்யப்படாமல் போவதுதான் பெரிய பிரச்னையாக இருந்தது. அதற்குப் பிறகு, பெண்களும் முன்வந்து அவர்கள் சந்தித்த வன்முறைகளைப் பதிவு செய்யத் தொடங்கினர். ஆனால், குற்றம் நிகழாமல் தடுக்க அதுமட்டுமே போதாது.

மக்களுடைய நம்பிக்கை, பொது அணுகுமுறை என அனைத்துமே மாற வேண்டும். அது, நமது வீடுகளிலிருந்துதான் தொடங்க வேண்டும். வீடுகளில் நிகழும் குடும்ப வன்முறைதான் இதன் தொடக்கப்புள்ளி. வீடு, கல்வி நிலையங்கள், வேலை நிறுவனங்கள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் இதில் பொறுப்பிருக்கிறது. மேலும், குற்றவாளிகள் ஒரு குறிப்பிட்ட பின்னணியில் இருப்பவர்கள் எனச் சொல்லப்படுவதும் தவறு. நாங்கள் சந்தித்த வழக்குகளில் நிறுவனத்தின் சி.இ.ஓ, மூத்த அரசு அதிகாரிகள் பல தரப்பினரும் சம்பந்தப்பட்டுள்ளனர்."

`5,000 பக்கங்கள்; அடுத்த வாரம் ஆக்‌ஷன்!'- தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பார்த்தவர்கள் விவரம்

"நாங்கள் கையாண்ட பாலியல் வன்முறை வழக்கு ஒன்றில் குற்றம் புரிந்த நபரை விசாரித்தோம். அப்போது அவர், 'சின்ன வயசுல இருந்தே வீட்டுல நான் எந்தப் பொருள் கேட்டாலும் எங்க அம்மா, அக்காவுக்கு இல்லைன்னாலும் எனக்குக் கொடுத்துடுவாங்க. எங்க வீட்டுப் பெண்கள் 'நோ’–னு சொன்னதே இல்லை. என்கிட்ட ஒரு பொண்ணு `நோ’னு சொன்னது எனக்குப் புதுசா இருந்தது. என்னால அத ஏத்துக்க முடியல. அதனால அப்படி நடந்துகிட்டேன்' என்றார்.

இந்தக் கொடூரத்தன்மை என்பது ஒரே நாளில் வருவது அல்ல. ஒரு பெண் வேண்டாம் என மறுப்பதைக்கூட ஒரு பெரும் தவறாக எண்ணி அந்த நபர் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார். குற்றம் புரிபவர்கள் ஏதோ உளவியல் சிக்கலில் இருப்பவர்கள் கிடையாது. அவையாவும் அவர்கள் பெற்ற அனுபவங்களிலிருந்து வளர்த்துக்கொண்ட குணாதிசயங்களே. கொலை செய்யப்படுவது உச்சபட்ச வன்முறை. பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய சிறு வன்முறைகளின் இறுதி வடிவமே அது. அனைத்து விதமான வன்முறைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குற்றம் நடைபெற்ற பிறகு, குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிப்பதுதான் அரசு, காவல்துறை, நீதித்துறை ஆகியவற்றின் கடமையாக இருக்க முடியும். குற்றம் நடைபெறாமல் தடுப்பதற்கான பொறுப்பு அனைவரிடத்திலும் உள்ளது.

பிரசன்னா பூர்ணசந்திரன்
பிரசன்னா பூர்ணசந்திரன்

வன்முறைகள் நடைபெறுவதற்கான மூல காரணத்தைக் கண்டடைந்து தீர்க்க வேண்டும். அதற்கான முயற்சிகள் சிறிய அளவில்தான் இருக்கின்றன. அது, மேலும் பரவலடைய வேண்டும். இன்று வன்முறை எதார்த்தமாகிவிட்டது. இத்தகையதொரு உளவியல் உருவாக்கப்பட்டதில் சினிமா போன்ற ஊடகங்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளது ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய உண்மை. கடுமையான தண்டனைகள் ஒரு அச்சத்தை உருவாக்கினாலும், குற்றங்களைத் தடுப்பதற்கு அது மட்டுமே போதாது. குற்றத்தில் ஒருவர் ஈடுபடுகையில் அந்தக் குற்றத்துக்கான தண்டனையைக் கவனத்தில் கொள்வதில்லை. நிர்பயாவுக்குப் பிறகு இதுபோன்றதொரு குற்றம் நடந்ததே நம் அனைவரின் ஒட்டுமொத்த தோல்வி. இனியாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு