Published:Updated:

ஜே.என்.யூ முகமூடித் தாக்குதல்... துணைவேந்தர்மீது பழிபோடுகிறதா பா.ஜ.க?

பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்

பிரீமியம் ஸ்டோரி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) நடந்த முகமூடித் தாக்குதலுக்கு, ‘இடதுசாரி மாணவ அமைப்பினர்தான் காரணம்’ என்று இந்துத்துவ மாணவ அமைப்புகளும், ‘ஏ.பி.வி.பி மாணவர் அமைப்புதான் காரணம்’ என்று இடதுசாரி மாணவ அமைப்புகளும் குற்றம்சாட்டிவந்த நிலையில், இந்தியா டுடே தொலைக்காட்சி ‘ஸ்டிங் ஆபரேஷன்’ நடத்திய வீடியோக்களில் ஜே.என்.யூ தாக்குதலில் ஈடுபட்டதை ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒப்புக்கொண்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிது. இந்தச் சூழலில், ‘அரசின் வழிகாட்டுதல்களை துணைவேந்தர் கடைப்பிடிக்காததே வன்முறை வெடிக்கக் காரணம்’ என்று பிரச்னையை புதுப்பாதையில் திருப்பிவிடுகின்றனர் பா.ஜ.க-வினர்.

கட்டண உயர்வை எதிர்த்து ஜே.என்.யூ மாணவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்திய பிறகும் முறையான தீர்வு எட்டப்படாமலேயே இருந்தது. ‘இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண சமரசத் தீர்வு அளித்தது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம். ஆனால், அதை ஜே.என்.யூ துணைவேந்தர் ஜகதீஷ் குமார் செயல்படுத்தத் தவறிவிட்டார். ‘சமரசம்செய்ய முடியாவிட்டால் 48 மணி நேரத்தில் ராஜினாமா செய்யவேண்டும்’ என்று அரசு சொன்னதையும் அவர் ஏற்கவில்லை’ என்று பா.ஜ.க-வினர் இப்போது குற்றம்சாட்டுகின்றனர்.

ஆஷி கோஷ்
ஆஷி கோஷ்

ஜே.என்.யூ துணைவேந்தர் ஜகதீஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை தற்போது வலுத்துவருகிறது. பா.ஜ.க-வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘‘அரசின் பரிந்துரையைச் செயல்படுத்த துணைவேந்தர் மறுப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த அணுகுமுறை இழிவானது, இத்தகைய துணைவேந்தர், பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்’’ என்று பதிவிட்டிருந்தார். ஆனால் ராஜினாமா செய்யப்போவதில்லை என்பதில் ஜகதீஷ் குமார் பிடிவாதமாக இருப்பதாகத் தெரிகிறது.

வன்முறைத் தாக்குதலில் சந்தேகிக்கப்படுவர்கள் ஒன்பது பேரின் புகைப்படங்களை கடந்த 10-ம் தேதி டெல்லி காவல்துறை வெளியிட்டிருந்தது. அதில், ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் ஆஷி கோஷ் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இந்தியா டுடே வெளியிட்ட வீடியோவில், தாக்குதலில் ஈடுபட்டதை ஏ.பி.வி.பி மாணவர்கள் ஒப்புக் கொண்ட நிலையில், சந்தேகப்பட்டியலில் ஆஷி கோஷ் புகைப்படத்தை வெளியிட்டது குறித்து டெல்லி காவல்துறை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில்தான் டெல்லி காவல்துறை இயங்கிவருகிறது. ‘ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் அனுமதி இல்லாமலேயே நுழைந்து மாணவர் போராட்டங்களை ஒடுக்கிய டெல்லி போலீஸ், ஜே.ஏன்.யூ தாக்குதலைத் தடுக்காதது ஏன்?’ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜகதீஷ் குமார்
ஜகதீஷ் குமார்

இதுதொடர்பாக ஜே.என்.யூ மாணவர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்துப் பார்க்கையில், இந்த வழக்கை டெல்லி போலீஸ் திசைதிருப்ப முயற்சிப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இதில் சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்றனர்.

உண்மையை வெகுநாள்கள் மறைத்துவைக்க முடியாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு