Published:Updated:

``100 நாள் கறுப்பு சட்டை; அடுத்து விபரீத போராட்டம்...'' - கிலி கிளப்புகிறார் ஜான் பாண்டியன்

ஜான் பாண்டியன்
News
ஜான் பாண்டியன்

`தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும்' என்று மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி, கறுப்பு சட்டை போராட்டத்தை ஆரம்பித்தார் ஜான் பாண்டியன். இப்போது, அடுத்தகட்டமாக விபரீத போராட்டத்தையும் அறிவிக்கவிருப்பதாக ஆளுங்கட்சியினரை எச்சரித்துள்ளார்.

`பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றுங்கள்' என்ற குரல் மறுபடியும் தமிழக அரசியலில், ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த முறை உரிமைக்குரல் எழுப்பியிருப்பவர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்!

``ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வேளாண் தொழிலை மட்டுமே செய்துவரும் மக்களை 'குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார்' என 7 பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கிறார்கள். எங்கள் தொழிலை அடிப்படையாக வைத்து இந்த 7 பிரிவினரையும் ஒரே சமுதாயமாகத் `தேவேந்திர குல வேளாளர்' என்று அறிவித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

த.ம.மு.க உறுதிமொழி
த.ம.மு.க உறுதிமொழி

35 வருடங்களுக்கும் மேலாக, இந்தக் கோரிக்கையை வைத்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால், தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிற எந்தக் கட்சியும் எங்கள் கோரிக்கையைக் கண்டுகொள்வதே இல்லை. ஆனால், இந்த முறை எப்படியும் எங்கள் கோரிக்கையை வென்றெடுப்பது என்ற விடா முயற்சியில் இறங்கிவிட்டோம்.

'தேவேந்திர குல வேளாளர்களாக எங்களை அறிவிக்கும்வரை, எங்கள் மனதில் வெறுப்பும் மாறாது; எங்கள் உடலில் கறுப்பும் மாறாது' என்ற உறுதிமொழியோடு கடந்த நவம்பர் மாதம் முதல் எங்கள் கட்சியினர் அனைவரும் கறுப்புச் சட்டை அணியத் தொடங்கியிருக்கிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நாங்கள் கறுப்புச் சட்டை அணிய ஆரம்பித்து 100 நாள்களைக் கடந்துவிட்டது. ஆனால், இன்னமும் தமிழக அரசு எங்கள் விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. எனவே, அடுத்தகட்டமாக எங்கள் போராட்ட வடிவத்தை மாற்றிக்கொள்ள தீர்மானித்திருக்கிறோம்'' என்றனர் கட்சியின் முக்கியஸ்தர்கள்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனிடம் பேசினோம்... ''கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழக முதல்வரில் ஆரம்பித்து, பிரதமர் வரையிலாக அனைவரிடமும் எங்களது கோரிக்கையை எடுத்துவைத்தோம். அவர்களும்கூட `தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கிறோம்' என்று வாக்குறுதி அளித்தனர். அதை நம்பித்தான் நாங்களும் கூட்டணியில் இணைந்து தெருத்தெருவாகப் போய் வாக்கு சேகரித்தோம். ஆனால், தேர்தலுக்குப் பிறகு மத்திய - மாநில அரசுகள் இரண்டுமே எங்கள் கோரிக்கையைப் பற்றிக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

மோடி
மோடி

எனவே, இப்போது எங்கள் கோரிக்கையை வென்றெடுக்க போராடுவதைத்தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்திருக்கிறோம். இப்போதும்கூட, எங்கள் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக 'கறுப்புச் சட்டை' மட்டும் அணிந்து கடந்த 100 நாள்களாக ஜனநாயக முறைப்படி எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தோம். ஆனால், எங்கள் உணர்வுகளை மத்திய - மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும்கூட இப்போதும் மத்திய - மாநில அரசுகள் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

விரைவில் கூடவிருக்கிற எங்கள் கட்சியின் செயற்குழுவில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கவிருக்கிறோம்'' என்றவரிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``சாதி ஒழிப்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நேரத்தில், இதுபோன்று `பட்டியலினத்திலிருந்து வெளியேறினால் போதும்' என்ற நிலையை மட்டுமே முன்னெடுப்பது நியாயம்தானா?''

``சாதி ஒழிப்பு என்பதே நடைபெற முடியாத ஒன்று. இந்தியாவில் அது நடக்குமா? அதனால்தான் முழுவதுமாக சாதி ஒழிப்பை மட்டுமே கையில் எடுத்துச் செல்லும் ஒரு கட்சிகூட இங்கு இல்லை!

இடதுசாரி இயக்கங்களிலேயேகூட, தலைவரின் சாதிக்காரர்கள்தான் கட்சிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஏனைய சாதிக்காரர்களைக் கொடி பிடிக்க மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள். அவ்வளவு ஏன்... அவரவர் சொந்த சாதியில் மட்டும்தானே திருமணத்தையே வைத்துக்கொள்கிறார்கள்.''

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``ஏற்கெனவே, பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டு இதே கோரிக்கையை புதிய தமிழகம் கட்சியும் வலியுறுத்தியது. ஆனாலும் நிறைவேறவில்லையே?''

``1932-ல் நாங்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகத்தான் இருந்திருக்கிறோம். 1952-லும்கூட நாங்கள் பி.சி-யாக இருந்ததற்கான ஆதார ஆவணங்கள் இருக்கின்றன. உண்மை இப்படியிருக்கும்போது, எங்களை ஏன் பட்டியலினத்துக்குள் கொண்டுவந்தீர்கள் என்றுதானே கேட்கிறோம்.

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இருந்துகொண்டே எங்கள் கோரிக்கையை வென்றெடுக்கும் முயற்சியை நாங்கள் செய்துவருகிறோம். அடுத்ததாகக் கூட்டணியில் இருப்பதால்தான் அமைதியான முறையில் எங்கள் உணர்வுகளை நாங்கள் தெரிவித்துவருகிறோம்!''

``கடந்த காலங்களில் இதே கோரிக்கையை நிறைவேற்றாத ஆளுங்கட்சியினர் இப்போது மட்டும் நிறைவேற்றுவார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?''

ஜான் பாண்டியன்
ஜான் பாண்டியன்

''அண்மையில், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியபோதும், `விரைவில் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என்று உறுதியளித்திருக்கிறார். அதனால், எப்படியும் இந்தமுறை `தேவேந்திர குல வேளாளர்' என அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது!

எனவே செயற்குழுக் கூட்டத்தில், விபரீதமான போராட்டங்களை அறிவிக்கக்கூடிய சூழலை மத்திய - மாநில அரசுகள் ஏற்படுத்தாது என்று நம்புகிறோம். அதேசமயம், இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால், எந்தவிதப் போராட்டத்தையும் முன்னெடுக்க நாங்களும் தயாராகவே இருக்கிறோம்!'' என்கிறார் உறுதியாக!