Published:Updated:

“ரஜினி உண்மையைச் சொல்ல வேண்டும்!”

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

கொந்தளிக்கும் ஸ்டெர்லைட் போராளிகள்!

“ரஜினி உண்மையைச் சொல்ல வேண்டும்!”

கொந்தளிக்கும் ஸ்டெர்லைட் போராளிகள்!

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம், விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், ரஜினி ஆஜராகவில்லை. ஆஜராவதற்கு விலக்கு அளிக்குமாறு ஆணையத்திடம் கேட்டிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது ஆணையம் விலக்கு அளித்துள்ளது. இந்த நிலையில், ‘`ரஜினி ஆஜரானால்தான் பல உண்மைகள் வெளிவரும்’’ என்று கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர் போராட்டத் தரப்பினர்.

2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை மூடச்சொல்லி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக நடந்த பேரணியில் திடீர் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்துப் பேட்டியளித்த நடிகர் ரஜினி “மக்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூகவிரோதிகளின் ஊடுருவல்தான் காரணம். வன்முறையில் ஈடுபட்ட சமூகவிரோதிகளை எனக்குத் தெரியும்” என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரஜினியின் இந்தப் பேச்சு சர்ச்சையானது. அதனால், ‘ரஜினியையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும்’ எனத் தமிழர் விடுதலைக் கொற்றத்தின் தலைவர் வியனரசு விசாரணை ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் அளித்தார். ஆணையத்தில் ஆஜரான பலரும் இதே கோரிக்கையை முன்வைத்தனர். அந்தச் சமயத்தில் ‘தேவைப்பட்டால் ரஜினியையும் விசாரணைக்கு அழைப்போம்’ எனத் தெரிவித்தது ஆணையம். தொடர்ந்து, ‘பிப்ரவரி 25-ம் தேதி ஆஜராக வேண்டும்’ என ரஜினிக்கு சம்மன் அனுப்பியது ஆணையம்.

வியனரசு - முகிலன் - அருள் வடிவேல் சேகர்
வியனரசு - முகிலன் - அருள் வடிவேல் சேகர்

ஆனால், ‘எனக்கு படப்பிடிப்புப் பணிகள் தொடர்ந்து இருக்கின்றன. நான் தூத்துக்குடி வந்தால் ரசிகர்களால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும். எனவே, நேரில் ஆஜராவதிலிருந்து எனக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஆணையம் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளிக்கத் தயாராக உள்ளேன்’ என, தன் வழக்கறிஞர் இளம்பாரதி மூலம் ஆணையத்துக்கு மனு அளித்தார் ரஜினி. இவற்றில் படப்பிடிப்புக் காரணத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு, ஆஜராவதற்கு ஒருமுறை மட்டும் விலக்கு அளித்துள்ளது ஆணையம்.

இதுகுறித்து தமிழர் விடுதலைக் கொற்றத்தின் தலைவர் வியனரசுவிடம் பேசினோம். “ரஜினியின் நடவடிக்கைகள்குறித்து எங்களுக்கு சில கேள்விகள் எழுகின்றன. மக்களின் போராட்டத்தில் ஊடுருவிய சமூகவிரோதிகளை தனக்குத் தெரியும் என்று சொல்லும் ரஜினி, ஏன் அதுகுறித்து காவல் நிலையத்தில் தெரியப்படுத்தவில்லை? போராட்டத்தில் காயமடைந்தவர்களைப் பார்ப்பதற்காக ரஜினி தூத்துக்குடி வந்தபோது ரசிகர்களால் கெடாத சட்டம் ஒழுங்கு, விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்போது மட்டும் கெட்டுவிடுமா? ரஜினியின் ரசிகர்கள் சட்டம் ஒழுங்கைக் கெடுப்பவர்களா? `போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவினர்’ என்று ரஜினி சொன்னது அவருடைய சொந்த கருத்தா அல்லது அவரை அப்படி யாரேனும் சொல்லவைத்தார்களா என்றும் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இதற்கெல்லாம் ரஜினி விளக்கம் அளிக்க வேண்டும். ரஜினியிடம் முழுமையாக விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும். அவர் ஆணையத்தில் ஆஜராகும்போது என் வழக்கறிஞர்மூலம் குறுக்கு விசாரணை செய்ய ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளேன்” என்றார்.

சமூக ஆர்வலர் முகிலனிடம் பேசினோம். “ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூகவிரோதிகள் கலந்துவிட்டார்கள் என்று கூறிய ரஜினிகாந்த் நல்ல மனிதராக இருந்தால், தனக்குத் தெரிந்த தகவல்களை ஆணையத்தில் ஆஜராகித் தெரிவித்திருக்க வேண்டும். சாமானிய மக்களும் பாதிக்கப்பட்டவர்

களும் இன்னும்கூட விசாரணை ஆணையங்களை நம்புகிறார்கள். ஆனால், ரஜினிகாந்த் போன்ற வி.ஐ.பி-கள் ஆணையங்களை மதிப்பதில்லை. ஜெயலலிதா மரணம் பற்றி கருத்து சொன்ன ஆடிட்டர் குருமூர்த்தி, அதுகுறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அந்த ஆணையத்தில் ஆஜராகவில்லை. அதே வழியைத் தான் ரஜினியும் பின்பற்றுகிறார்” என்றார்.

ஒரு நபர் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகரிடம் பேசியபோது, “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணையில் நடிகர் ரஜினிகாந்தின் சாட்சியத்தை மிக முக்கியமானதாகக் கருதுகிறது ஆணையம். அவருக்கு முழுமையான விலக்கு அளிக்கப்படவில்லை. மீண்டும் சம்மன் அனுப்பப்படும். அடுத்தடுத்த விசாரணைகளில் அவர் ஆஜராக வேண்டும். இன்னும் அடுத்த விசாரணைக்கான தேதி முடிவுசெய்யப்படவில்லை” என்றார்.

சட்டத்தின் முன்பாக அனைவரும் சமம். ரஜினி அதற்கு விதிவிலக்கல்ல!