Published:Updated:

“எங்க அண்ணன் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார் ராமதாஸ்!”

கதறும் காடுவெட்டி குருவின் சகோதரி

பிரீமியம் ஸ்டோரி

காடுவெட்டி குரு... பா.ம.க-வில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர். எம்.எல்.ஏ., வன்னியர் சங்கத் தலைவர் பதவிகளை வகித்தவர். அதிரடிப் பேச்சாலும் தீவிரமான போராட்டங்களாலும் எப்போதும் குருவை மையமாகக்கொண்டு சர்ச்சைகள் வெடி வெடிக்கும். அவர் இறந்த பிறகும் அவரது மணிமண்டபம் திறப்பு விழா, பிறந்தநாள் விழா, நினைவு தினம் என ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சர்ச்சைகள் வெடித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

மே 25-ம் தேதி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் குருவின் மகன் கனலரசன், குருவின் சகோதரி மகனும் மருமகனுமான மனோஜ், அவரின் அண்ணன் மதன் ஆகிய மூவரும் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸும், அவரின் மகன் அன்புமணி ராமதாஸும்தான் காரணம் என்று குருவின் உறவினர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டுவதால் அரியலூர் மாவட்டம் அனலாக தகிக்கிறது.

காயத்துடன் மருத்துவமனையில்...
காயத்துடன் மருத்துவமனையில்...

இது குறித்து நம்மிடம் பேசிய குருவின் தங்கை செந்தாமரை, “மே 25-ம் தேதி மாலை, குரு அண்ணனின் சமாதிக்குப் போய்விட்டு வந்தான் கனலரசன். அடுத்த நாள் கனலரசன் காரில் சென்றபோது, அரியலூர் மாவட்ட பா.ம.க செயலாளர் ரவி கனலரசனைப் பின்தொடர்ந்து சென்று ஹாரன் அடித்து வம்புக்கு இழுத்திருக்கிறார். இதையடுத்துதான் அன்றிரவு எங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டுச் சென்ற மாற்றுத்திறனாளிப் பையன் ஒருவனை எங்கள் ஊரைச் சேர்ந்த காமராஜ், சதீஷ், சின்னபிள்ளை, ஐயப்பன் ஆகியோர் சேர்ந்து அடித்து, அவனுடைய வண்டி சாவியைப் பிடுங்கியுள்ளனர்.

“எங்க அண்ணன் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார் ராமதாஸ்!”

விஷயத்தைக் கேள்விப்பட்டு கனலரசன், மதன், மனோஜ் ஆகிய மூவரும் சம்பவ இடத்துக்கு ஓடினார்கள். அவர்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, கனலரசனைக் கத்தியால் குத்த வந்திருக்கிறார் சின்னபிள்ளை. மதனும் மனோஜும் அதைத் தடுத்திருக்கிறார்கள். இதில் மதனுக்கும் மனோஜுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. லேசான காயங்களுடன் கனலரசன் தப்பிவிட்டான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவையெல்லாமே ராமதாஸ் சொல்லித்தான் நடக்கின்றன. இந்தத் தாக்குதல் நடந்தவுடனேயே, அரியலூர் மாவட்ட பா.ம.க செயலாளர் ரவி தரப்பினர், கனலரசன் தரப்பினர் தெரு மக்களைத் தாக்கிவிட்டதாக போலீஸில் விஷயத்தை மாற்றிப் புகார் கொடுத்துவிட்டனர். போலீஸாரும் தீர விசாரிக்காமல், மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த கனலரசனை விசாரணைக்காக அழைத்தனர். சிகிச்சையில் இருக்கிறான் என்று தெரிந்தும், அவனை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த பிறகுதான் அவனை இறக்கிவிட்டனர்.

கடந்த சில வாரங்களாகவே கனலரசனைக் கொலை செய்ய முயற்சி நடக்கிறது என்றும், அவனை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து படிக்க விடாமல் செய்யப்போகிறார்கள் என்றும் எனக்குத் தகவல்கள் வந்துகொண்டிருந்தன. என் அண்ணன் குரு இறப்பதற்கு முன்பு, அன்புமணியின் வளர்ச்சிக்கு குருதான் இடையூறு என ராமதாஸ் நினைத்தார்.

செந்தாமரை
செந்தாமரை

அவர் இறந்த பிறகு, ‘மாவீரன் மஞ்சள் படை’ என்ற அமைப்பைத் தொடங்கினான் கனலரசன். அவன் வயதையொட்டிய இளைஞர்கள் பலர் கனல் பின்னால் வர ஆரம்பித்தனர். அதை ராமதாஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், எங்கள் குடும்பமே இருக்கக் கூடாது என்று ராமதாஸ் நினைக்கிறார்.

எங்கள் குடும்பத்துக்குப் பாதுகாப்பு வேண்டும். அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இருப்பதால் எங்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்த போலீஸ் பாதுகாப்பையும் திரும்பப் பெற்றுவிட்டனர். இப்போது, கனலரசனைக் கைது செய்வதற்கும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த அரசு எங்களைக் கண்டுகொள்ளாமல்விட்டால் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என்றார் ஆற்றாமையுடன்.

ராமதாஸ்
ராமதாஸ்

ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர்மீது குருவின் குடும்பத்தினர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் குறித்து அரியலூர் மாவட்ட பா.ம.க செயலாளர் ரவியிடம் பேசினோம். “கனலரசனும் மனோஜும் வெளியூர் ஆட்களை அழைத்து வந்து மதுபோதையில் இரவு 11 மணியளவில் தெருவில் சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். ‘தொடர்ந்து இப்படிச் செய்கிறீர்களே... நாங்கள் எப்படி இங்கே குடியிருப்பது?’ என்று வீடுகளில் இருந்தவர்கள் கண்டித்துள்ளனர். அப்போதுதான் மோதல் ஏற்பட்டுள்ளது. இது தெருப் பிரச்னைதான். இதற்கும் அய்யா ராமதாஸ் மற்றும் பா.ம.க-வுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அய்யா ராமதாஸின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் கூறி வருகின்றனர்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு