Election bannerElection banner
Published:Updated:

ரூ. 5 லட்சம் மாத சம்பள அமெரிக்க வேலையைத் தேர்தலில் போட்டியிட துறந்த கரூர் இளைஞர்

நரேந்திரன் உருவாக்கிய சமுதாயக் காய்கறித் தோட்டம்
நரேந்திரன் உருவாக்கிய சமுதாயக் காய்கறித் தோட்டம் ( நா.ராஜமுருகன் )

இந்த நாடு முன்னேற, கிராமங்களை முன்னேற்ற திட்டங்களை வைத்திருக்கும் சமூகச் செயல்பாட்டாளர்களை அரசியல் கட்சிகள் கையிலெடுத்து, அவர்களுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும்.

``பசுமைக்குடி என்ற பெயரில் எனது கிராமத்தை மட்டுமன்றி, கரூர் மாவட்டத்திலுள்ள எத்தனையோ கிராமங்களில் இயற்கை குறித்த விழிப்புறணர்வு ஏற்பட முயற்சி எடுத்திருக்கிறேன். இந்த விழிப்புணர்வை, மாவட்டம், தமிழகம் என விரிவுபடுத்த நினைக்கிறேன். அது பெரிய சவால். அதைச் சாதிக்க தனிமனிதனாகச் சாத்தியப்படாது. எம்.எல்.ஏ மாதிரி ஒரு பதவி கிடைத்தால், அந்த விஷயத்தை செம்மையாகச் செய்ய முடியும். அதற்காகத்தான், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகம் வந்திருக்கிறேன்" என்கிறார் நரேந்திரன் கந்தசாமி.

நரேந்திரன் உருவாக்கிய சமுதாயக் காய்கறித் தோட்டம்
நரேந்திரன் உருவாக்கிய சமுதாயக் காய்கறித் தோட்டம்
நா.ராஜமுருகன்
கரூர்: `இந்த ஒவ்வொரு மரமும் எங்களுக்கு ஆசான்!' - குறுங்காடு அமைத்து அசத்தும் தலைமை ஆசிரியர்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திலுள்ள வ.வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நரேந்திரன் கந்தசாமி. அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றிவந்தார். மாதம் ரூ.5 லட்சம் வரை சம்பளம் வாங்கினார். இவர், தனது கிராமத்தில் 'பசுமைக்குடி' என்ற பெயரில் தன்னார்வலர்களை உருவாக்கி, அவர்கள் மூலமாக கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துவருகிறார். அதோடு, ஊர் பொது இடத்தில், 'சமுதாயக் காய்கறித் தோட்டம்' என்ற பெயரில் இயற்கைக் காய்கறித் தோட்டம் அமைத்து, அதில் விளைந்த காய்கறிகளை ஊர் மக்களுக்கு இலவசமாகவும் கொடுத்துவருகிறார். தமிழகத்தில் யாரும் செய்யாததாக இருக்கிறது இவரது முயற்சி. அதேபோல், கரூர் மாவட்டத்தில் உள்ள பல அரசுப் பள்ளிகளுக்கும், பல கிராம மக்களுக்கும் இலவசமாக நாட்டுக் காய்கறி விதைகள், மரக்கன்றுகள் கொடுத்து, இயற்கை வாழ்வியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

மக்களுக்கு காய்கறிகளை வழங்கியபோது...
மக்களுக்கு காய்கறிகளை வழங்கியபோது...
நா.ராஜமுருகன்

அவரது செலவில், 2,000 குடும்பங்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் அரிசி, காய்கறி, மளிகைச் சாமான்களை வழங்கினார். அரசுப் பள்ளிக்கு கல்விச் சீர், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி என்று தன்னாலான உதவிகளைச் செய்துவருகிறார். இதற்காக, தனது வருமானத்தின் பெரும்பகுதியை அந்தப் பணிகளுக்காகச் செலவழிக்கிறார்.

நரேந்திரனின் சேவையைக் கண்ட ஊர் மக்கள், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் தந்தை கந்தசாமியை, உள்ளாட்சித் தேர்தலில் நிற்க வைத்து, வரவணை ஊராட்சிமன்றத் தலைவராக்கினர். இந்தநிலையில்தான், தான் சார்ந்த கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிட நினைத்து, அமெரிக்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஊர் திரும்பியிருக்கிறார். தி.மு.க-வின் வேட்பாளர் நேர்காணலிலும் கலந்துகொண்டிருக்கிறார். 'நான் எம்.எல்.ஏவானால், கிருஷணராயபுரம் தொகுதியின் இயற்கைச் சூழலை சீர்படுத்தி, இந்தியாவிலேயே முன்மாதிரித் தொகுதியாக மாற்றுவேன்' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.

சொந்த ஊரில் இருந்த நரேந்திரன் கந்தசாமியிடம் பேசினோம்.``எனக்கு அரசியல் ஆர்வம் இல்லாமல்தான் இருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பு, எனது கிராமத்தில் வெயிலுக்கு ஒதுங்கக்கூட நிழல்தர மரம் இல்லாமல் இருந்தது. 'எங்கும் வறட்சி, எதிலும் வறட்சி என்கிற நிலைமைதான். மக்கள் குடிதண்ணீருக்கே அல்லாடினார்கள். எங்கள் ஊர் மட்டுமன்றி, தொகுதி முழுக்கவே இதே நிலைமைதான். காடுகளின் அளவு நான்கு சதவிகிதத்துக்கும் கீழ் இருந்ததால், இங்கே மழை பெரிதாக இருக்காது. இந்த ஊரைச் சேர்ந்த எனக்கு, பணி நிமித்தமாக இயற்கைச் சூழல் அற்புதமாக இருக்கும் பல நாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

நரேந்திரன் கந்தசாமி
நரேந்திரன் கந்தசாமி
நா.ராஜமுருகன்

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நான், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றினேன். சுவிச்சர்லாந்திலுள்ள இயற்கைச் சூழலை பார்த்துவிட்டுத்தான், என் ஊரை மாற்ற நினைத்தேன். அதற்காக, பசுமைக்குடி அமைப்பை உருவாக்கி, ஊர் இளைஞர்களை ஒருங்கிணைத்து, ஊரில் இயற்கைச் சூழலை மேம்படுத்தினேன். தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை பசுமையாக உருவாக்க என்னாலான முயற்சிகளையும், உதவிகளையும் செய்தேன்.

அதோடு, இயற்கை பாதுகாப்பு, கல்வி முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பொருண்மைகளில் களப்பணிகளைகளை பசுமைக்குடி அமைப்பு செய்துவருகிறது. 'சொந்த மண்ணைவிட்டு சென்ற பிறகு பலரும் திரும்பிப் பார்ப்பதில்லை, சொந்த நாட்டு முன்னேற்றத்துக்காக பாடுபடுவதில்லை' என்ற குற்றச்சாட்டை அயல்நாடுகளில் வசிக்கும் இளைஞர்கள் மீது வைக்கிறார்கள். ஆனால், வெளிநாடுகளில் இருந்துகொண்டு, அனுதினமும் எளிய கிராம மக்களின் வாழ்வை மாற்றியமைக்கத் துடிக்கும் என்னைப் போன்ற இளைஞர்கள் அரசியல் அதிகாரங்களைப் பெற வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக, வேலையைத் துறந்தேன்.

விருப்ப மனு அளித்த நரேந்திரன்
விருப்ப மனு அளித்த நரேந்திரன்
நா.ராஜமுருகன்

நான் அரசியலில் இறங்க நினைப்பது வருமானம் பார்க்க இல்லை. இப்போது நான் மாதம் ரூ. 5 லட்சம் சம்பளம் வாங்குகிறேன். ஆனால், எனக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.4,200 வரை தருவதற்குக்கூட கம்பெனிகள் தயாராக இருக்கின்றன. ஆனால், அதைவிட என் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்புதான் என் வேலையை ராஜினாமா செய்யவைத்தது. அரசியல் களத்துக்கு வந்திருக்கிறேன்.

இது என் ஆசை என்பதைவிட, என் நண்பர்கள் விரும்பினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில், சுயேச்சையாக நிற்க நினைத்தேன். ஆனால், சுயேச்சையாக நின்றால், அதன் மூலம் மக்களிடம் சென்றடைவது அரிது. அதனால், தி.மு.க-வை தேர்ந்தெடுத்தேன். ஆனால், நான் தி.மு.க உறுப்பினர்கூட கிடையாது. ஆனால், சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்தேன். நேர்காணலிலும் கலந்துகொண்டேன். எனக்கு சீட் கிடைத்து, எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பு கிடைத்தால், எனது சமுதாயக் காய்கறித் தோட்ட திட்டத்தை, தொகுதி முழுக்க இருக்கும் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்துவேன். அதோடு, எனது ஊரைச் சுற்றி, பழமரங்களை நட்டிருக்கிறேன். வெளியூர்களிலிருந்து எங்கள் ஊர் வழியாகப் போகும் வழிபோக்கர்கள் பசியாறுவதற்காகத்தான் அப்படிச் செய்திருக்கிறேன்.

மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
நா.ராஜமுருகன்

இந்தத் திட்டத்தையும் தொகுதி முழுக்க சொந்தச் செலவில் செயல்படுத்துவேன். தவிர, பல பன்னாட்டு தொழில்நுட்ப கம்பெனிகளில் பணியாற்றியிருக்கிறேன். அதனால், கிராமப்புற மாணவர்களின் கணினி அறிவை வளர்க்க, பல இலவசப் பயிற்சி மையங்களை உருவாக்குவேன். அதோடு, விவசாயிகள் நிலங்களை விற்றுவிட்டு, நகரம் இடம்பெயருகின்றனர். அவர்களின் ஊரிலேயே பொருளாதாரத்தை மேம்படுத்த, உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்க திட்டம் வைத்துள்ளேன். அதோடு, விவசாயத்தைக் கூட்டுறவு விவசாய உற்பத்தி உத்தியில் விவசாயிகளை இணைத்து, செய்ய வைக்கும் திட்டமும் கைவசம் இருக்கிறது.

மக்கள் பணியில் இளைஞர்கள் முழுமையாக இணைத்துக்கொண்டு இயங்க, சமூகப் பணியில் இருக்கும் இளைய தலைமுறைக்கு அரசியல் கட்சிகள் சட்டமன்ற, நாடாளுமன்ற, ஊராட்சி மன்ற அதிகாரங்களாக மையங்களாக அவர்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான், கிராமங்களை நாம் பழையபடி கட்டமைக்க முடியும். ஏனென்றால், இப்போது கிராமங்களில் இயற்கைச் சூழலைக் கட்டமைப்பதும், இயற்கை விவசாயம் செய்வதும் பெரும்பாலும் இளைஞர்கள்தான். கிராமங்கள்தான் இந்நாட்டின் முதுகெலும்பு, கிராமங்கள் முன்னேறும்போதுதான் நாடு முன்னேறும்.

 சமுதாயக் காய்கறித் தோட்டத்தில் விளைந்த கத்திரிக்காய்
சமுதாயக் காய்கறித் தோட்டத்தில் விளைந்த கத்திரிக்காய்
நா.ராஜமுருகன்

இந்த நாடு முன்னேற, கிராமங்களை முன்னேற்ற திட்டங்களை வைத்திருக்கும் சமூகச் செயல்பாட்டாளர்களை அரசியல் கட்சிகள் கையிலெடுத்து, அவர்களுக்கு அதிகாரங்களைப் பெற உதவினால் மாற்றம் நடக்க வாய்ப்பிருக்கும். வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு, முன்னோடிக் கட்சிகள் வாய்ப்பு வழங்க வேண்டும். அப்படி, எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், புதிய மாற்றத்துக்கான திறவுகோலாக கிருஷ்ணராயபுரம் தொகுதியை மாற்றிக் காட்டுவேன்’’ என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு