Published:Updated:

கழுகார் பதில்கள்

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

தமிழ் சமுதாயம் செய்துகொண்டிருக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் அந்தச் சமுதாயத்தைத் தாங்கிப் பிடிக்கும் செயலே!

@வடபழநி ஆர்.கே.எஸ்.மகேஷ், சென்னை

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு கைதுகள் எதுவரை தொடரும்?

‘முக்கியப் புள்ளி’களுக்கு முந்தைய புள்ளிகள் வரை!

து.சாம்பசிவம், குத்தாலம், நாகப்பட்டினம் மாவட்டம்.

‘நீட் தேர்வு ரத்துசெய்யப்பட வேண்டும்’ என்று தொடர் போராட்டம் நடத்தாத எதிர்க்கட்சிகள், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்துவது வாக்குவங்கி அரசியல் தானே?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எல்லாவற்றுக்குமே வாக்குவங்கிதான் பின்புலம். ஆனால், ஒரு பிரச்னைக்கு குரல்கொடுத்து முடிப்பதற்குள் அடுத்த பிரச்னை வந்துவிடும்போது, பாவம்... அவர்களும் என்னதான் செய்வார்கள்? அடுத்து, ஆட்சிக்கட்டிலில் ஏறுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் இன்று போராடிய விஷயங்களுக் கெல்லாம் உண்மையிலேயே தீர்வுகண்பார்களா என்பதுதான் முக்கியம்.

ச.வசுமதி, வேங்கைவாசல், சென்னை-73.

இடைத்தேர்தலுக்குப் பதிலாக வேறு வழிமுறை களில் அந்தத் தொகுதியின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்தால், மக்கள் பணம் விரயமாகாமல் இருக்கும்தானே?

உண்மைதான். ஆனால், எத்தகைய வழிமுறையைக் கண்டுபிடித்தாலும் அதை தங்களுக்குச் சாதகமான ‘வழிமுறை’யாக்கிக் கொண்டுவிடுவார்களே கட்சிக்காரர்கள்! ‘நீ ராஜினாமா பண்ணினாலும் இடைத்தேர்தல் வரும்... பண்ணாட்டியும் இடைத்தேர்தல் வரும்’ என்று ஒரு படத்தில் ராஜ்கிரண் டயலாக் விடுவார். அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டே யோசிக்க வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

@காந்தி, திருச்சி.

‘தர்பார்’ நஷ்டமா?

தர்பாருக்கு நஷ்டமில்லை!

ரஜினி
ரஜினி

@பி.மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்.

தமிழ் சமுதாயத்தைத் தாங்கிப் பிடிக்கின்ற அளவுக்கு தற்போது தமிழ்த் திரைப்படங்கள் வருகின்றனவா?

தமிழ் சமுதாயம் செய்துகொண்டிருக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் அந்தச் சமுதாயத்தைத் தாங்கிப் பிடிக்கும் செயலே! அந்த வகையில் குறிப்பிடத்தக்க படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. `அசுரன்’, `பரியேறும் பெருமாள்’, `மேற்குத்தொடர்ச்சி மலை’, `அருவி’, `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆனால், இதையெல்லாம் உணர்ந்து தமிழ் சமுதாயம் தன்னை மாற்றிக் கொள்ளக் கூடாது என்பதில் சிலர் குறியாக இருப்பதுதான் வேதனை. சாதிப்பெருமை, குலப்பெருமையை உயர்த்திப் பிடிக்கும் படங்களை இப்போதும் சிலர் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ‘சமுதாய காவலர்கள்’ என்று சொல்லிக்கொள்ளும் சிலர், இதுபோன்ற படங்கள் தயாராவதன் பின்னணியில் நிற்கத்தான் செய்கிறார்கள்.

பா.சக்திவேல், கோயம்புத்தூர்.

‘கவர்ச்சி அரசியலைத்தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள்’ என்று தமிழருவி மணியன் சொல்கிறார். அது உண்மைதானா?

‘அது தவறு’ என்பதை எடுத்துச்சொல்லி மக்களை நல்வழிப்படுத்தும் வேலையைத்தான் தமிழருவி மணியன் போன்றோர் செய்ய வேண்டும். அதைவிடுத்து, அதே ஆயுதத்தை கையில் எடுத்து யாருக்கோ முட்டுக்கொடுத்து, ‘அவரை ஆட்சியில் அமர்த்திய பிறகு சரிப்படுத்தி விடுவோம்’ என நினைப்பது பெரும்தவறு.

தி.மு.க-வுக்கு எதிராக எம்.ஜி.ஆரை கையில் எடுத்தபோதும் அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட பலரும் இப்படித்தான் சமாதானம் சொல்லிக்கொண்டனர். ஆனால், ‘எம்.ஜி.ஆரின் ஆட்சியும் தி.மு.க ஆட்சிக்கு சற்றும் சளைத்ததல்ல’ என்பதாகவே இருந்தது. இதையெல்லாம் தமிழருவி மறந்திருக்க மாட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@மு.கனகராஜ், புஞ்சை புளியம்பட்டி.

ஊழல்வாதிகளைத் துப்பறியும் ஊடகங்கள், நேர்மையானவர்களை முன்னிலைப்படுத்துவதில் முனைப்பு காட்டாதது ஏன்?

அப்படியெல்லாம் ஒரேயடியாக குற்றம்சாட்டாதீர்கள். ஊழல்வாதிகளைத் துப்பறிவதற்கே நேரம் போதவில்லை அவர்களுக்கு. புதிது புதிதாக முளைத்துக் கொண்டே அல்லவா இருக்கிறார்கள்! என்றாலும், இடையிடையே நன்முத்துகளை முன்னிலைப்படுத்தவும்தான் செய்கின்றன ஊடகங்கள். ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதுகள் போன்ற முயற்சிகள் எல்லாம் அந்த ரகம்தானே!

@தமிழ், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டம்.

தாவரங்கள்போலவும் விலங்குகள் போலவும் நம்மால் வாழ முடியாதா... அவற்றையெல்லாம் உன்னதமான ஒரு வாழ்வைக் கடக்கின்றனவே?

வெகுதூரம் பயணித்துவிட்டோம். இனி ஒரு நாளும் திரும்பிச் செல்லவே முடியாது. ஆனால், தாவரங்களையும் விலங்குகளையும் அந்த உன்னத வாழ்வை வாழவிடாமல் நாம் நசுக்கு வதுதான் கொடுமை. அவற்றையாவது விட்டுவைத்தால், பார்த்துப் பார்த்து ஏங்குவதற்காவது வாய்ப்பு இருக்கும்!

சந்திர கிரகம்
சந்திர கிரகம்

@வாசுதேவன், பெங்களூரு.

பல வருடங்களுக்கு முன்பே சந்திரனில் கால் பதித்தும், இதுவரை அங்கே குடியேற மனிதன் ஏன் முயற்சி செய்யவில்லை?

ப்ளீஸ்... சந்திரனில் பாட்டி மட்டும் அப்படியே வடை சுட்டுக்கொண்டிருக்கட்டுமே!

@மா.மீனாட்சிசுந்தரம், மதுரை.

ஜெயக்குமார், சித்தாண்டி ஆகியோர் தலைமறைவானார்களா... ‘தலை’ மறைக்கப்பட்டார்களா?

‘தலை’களால் மறைக்கப் பட்டார்கள்.

@நீலன், கோயம்புத்தூர்.

‘இலவசங்களால் தமிழகத்தை திராவிடக் கட்சிகள் கெடுத்துவிட்டன’ என்று முழங்கும் பா.ஜ.க, டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக அதே ‘கெடுதல்’களை வாக்குறுதிகளாக அள்ளிவிட்டுள்ளதே! ‘கோதுமை கிலோ 2 ரூபாய், ஏழை கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி, 9, 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள், பெண் குழந்தை பிறந்தால் 2 லட்சம் ரூபாய், ஏழை விதவைகளின் பெண் குழந்தைத் திருமணத்துக்கு 51,000 ரூபாய்’?

ஒரே குட்டையில் ஊற ஆரம்பித்திருக்கும் நான்காவது மட்டை!

@‘திருப்பூர்’ அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

‘மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம்’ என்று பா.ஜ.க-வின் எம்.பி-யான அனந்தகுமார் ஹெக்டே கூறியிருக்கிறாரே?

ம்... ‘சங்கி முகமூடி’களைத் தாங்களாகவே ‘சும்மா கிழி’க்க ஆரம்பித்திருக்கிறார்கள்!

@கார்த்திகேயன் கவிதா.

பொதுத்துறை பங்குகளை விற்று மக்களுக்கு சேவை செய்கிறார்களாம். அதெல்லாம் தீர்ந்த பிறகு யாருடைய பங்குகளை விற்று வருங்காலங் களில் மீண்டும் சேவை செய்ய முடியும்... எந்தத் தைரியத்தில் இப்படியெல்லாம் முடிவெடுக்கிறார்கள்?

‘மக்கள் மீண்டு கிடந்தால் பார்த்துக்கொள்ளலாம்’ என்கிற தைரியமாக இருக்கலாம்.

@ஆ.ராஜபாண்டியன், சென்னை-30.

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்துசெய்துவிட்டார்கள். இத்தனை நாள்களாக எதற்கு இப்படி குழந்தைகளைப் படுத்தி யெடுத்தார்கள்?

‘இரவல் மூளை’களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

@கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி, திருவள்ளூர் மாவட்டம்.

ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க-வின் வெற்றிக்கு எதிரான வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டுவிட்டது. இந்தச் சட்டசபையின் ஆயுள் இன்னும் ஓராண்டு இருக்கும் சூழலிலும்கூட நீதிமன்றம் தீர்ப்பு சொல்லாமல் இருப்பது ஏன்?

இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகுகூட தீர்ப்பு சொல்லலாம். அது நீதிமன்றங்களின் அதிகாரவரம்புக்கு உட்பட்டது. அதைப் பற்றி கேள்வியெழுப்ப உங்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால், நீங்களும் இந்நாட்டு மன்னரே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!