Published:Updated:

`பசிக்கு விடை; ஒரு பார்சலில் 2 வேளை சாப்பாடு!' - இந்தியாவுக்கே முன்னுதாரணம் ஆகும் கேரளா

கேரள மீனவர் மேம்பாட்டு அமைப்புபோல பல்வேறு அமைப்புகள், கேரள மாநிலம் முழுவதும் பசியை விரட்டும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.

ஆட்டோவில் சென்று உணவு விநியோகம்
ஆட்டோவில் சென்று உணவு விநியோகம் ( manorama online )

உலகில் பசியால் வாடும் மக்கள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. இந்தப் பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 94-வது இடத்திலும் இலங்கை 66-வது இடத்திலும் உள்ளன. தெற்காசிய நாடுகளில் பசியால் வாடும் மக்கள் நிறைந்த நாடுகளில் இந்தியாவுக்குத்தான் முதலிடம். வறுமையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

உணவு தயாரிக்கும் பெண்கள்
உணவு தயாரிக்கும் பெண்கள்

இந்தியாவில் கேரளாவில் பசியால் வாடும் மக்கள் குறைவாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரள அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளே இதற்குக் காரணம். இதுதவிர, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கேரளாவில் பசியைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேரள மீனவர் மேம்பாட்டு அமைப்பு பசியால் வாடுவோர் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டுப் பணியாற்றிவருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு `பசிக்கு விடை ' என்ற பெயரில் திட்டம் ஒன்றை இந்த அமைப்பு அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டத்தின்படி, கொல்லம் நகரிலிருந்து 25 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பசியால் யார் வாடினாலும் அவர்களைத் தேடி உணவுப் பொட்டலங்கள் போய்ச் சேரும். அதாவது, உணவுப் பொட்டலங்களுடன் ஆட்டோ ஒன்று நகரைச் சுற்றி வரும். பசியால் யார் கை நீட்டினாலும், அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும். ஓர் உணவுப் பொட்டலத்தில் இரண்டுவேளை சாப்பிடும் அளவுக்கு உணவு இருக்கும். சைவம் மட்டுமல்ல, அசைவ உணவுகளும் கேட்பவர்களுக்கு வழங்கப்படும். சாலையில் வசிப்போர், பிச்சை எடுப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் உணவுப் பொட்டலங்களை வாங்கிச் சாப்பிடலாம். பசித்த வயிற்றுடன் மக்கள் இருக்கக் கூடாது என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

உணவு
உணவு

மக்களின் பங்களிப்புடன் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு உணவு தயாரிக்கும் பணிகள் தொடங்கி காலை 10 மணிக்கு நிறைவடைகிறது. பிறகு 11 மணி முதல் மதியம்1 மணி வரை பசித்தோருக்கு ஆட்டோவில் சென்று உணவு விநியோகம் செய்யப்படுகிறது. இலவசமாகக் கொடுத்தாலும் தரமான உணவை வழங்குவதே இந்த அமைப்பின் முக்கியக் நோக்கம்.

அதனால், வாரத்துக்கு ஒருமுறை உணவின் தரத்தை அதிகாரிகள் பரிசோதிக்கின்றனர். கேரள மீனவர் மேம்பாட்டு அமைப்புபோல பல்வேறு அமைப்புகள் கேரள மாநிலம் முழுவதும் பசியை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கேரள அரசும் இந்த அமைப்புகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவருகிறது. இதனால், இந்தியாவிலேயே பசியில்லாதோர் மாநிலமாகக் கேரளா மாறி வருகிறது.