Published:Updated:

“அந்த வழக்கு மட்டும் இல்லையென்றால்..!” பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நினைவலைகள்

க.நெடுஞ்செழியன்

“அந்த வழக்கில் மட்டும் சிக்காமல் இருந்திருந்தால், அவரது திறமைக்கும், தகுதிக்கும், அரசியல் தொடர்புக்கும் பல்கலைக்கழக துணைவேந்தரே ஆகியிருப்பார் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்." - கொளத்தூர் மணி

“அந்த வழக்கு மட்டும் இல்லையென்றால்..!” பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நினைவலைகள்

“அந்த வழக்கில் மட்டும் சிக்காமல் இருந்திருந்தால், அவரது திறமைக்கும், தகுதிக்கும், அரசியல் தொடர்புக்கும் பல்கலைக்கழக துணைவேந்தரே ஆகியிருப்பார் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்." - கொளத்தூர் மணி

Published:Updated:
க.நெடுஞ்செழியன்
திராவிட இயக்க ஆதரவாளரும், ஆசீவக அறிஞருமான பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இன்று காலை, உடல்நலக்குறைவால் காலமாகியிருக்கிறார். அவரது மறைவுக்கு ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், தமிழ்த் தேசியர்கள் தொடங்கி தமிழ்நாட்டின் முதல்வர் வரையில் இரங்கல் தெரிவித்துள்ளனர். எல்லோருமே அவரது சமூகப் பங்களிப்பை நினைவு கூர்ந்திருக்கிறார்கள் என்றாலும் இன்னும் சில விடுதல்கள் இருப்பதாகவேபடுகிறது. அதை இட்டு நிரப்ப அவருடன் நெருக்கமான நட்பிலிருந்த சிலரிடம் பேசினேன்.
க.நெடுஞ்செழியன்
க.நெடுஞ்செழியன்

“அந்த வழக்கில் மட்டும் சிக்காமல் இருந்திருந்தால், அவரது திறமைக்கும், தகுதிக்கும், அரசியல் தொடர்புக்கும் பல்கலைக்கழக துணைவேந்தரே ஆகியிருப்பார் பேராசிரியர் க.நெடுஞ்செழியன். திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத் தலைவராகவும் பணியாற்றியவர் அவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய, அஞ்சல் வழிக்கல்விக்கான பெரியாரியல் பாடத்திட்டத்தை நன்னன், மு.க.சுப்பிரமணியன் ஆகியோருடன் சேர்ந்து உருவாக்கியவர் அவர்” என்கிறார் அவருடன் சிறையில் ஒன்றாக இருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

கொளத்தூர் மணி
கொளத்தூர் மணி

மேலும் அவர் கூறுகையில், “பேராசிரியர் க.நெடுஞ்செழியனுக்கு பல முகங்கள் உண்டு. அதில் முக்கியமானது அவரது அதிதீவிர விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாடு. தலைவரோடு அவருக்கு நேரடி அறிமுகம் உண்டு. பேராசிரியருக்கு பண்ணன் என்றொரு மகன் இருந்தார். அவர் எங்கே என்ன ஆனார் என்பது பலருக்கும் தெரியாது. இலங்கைக்கு அமைதிப்படை சென்றதே, அந்த காலகட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாக ஈழத்துக்கு நம்முடைய இளைஞர்கள் பலர் நேரடியாகச் சென்றார்கள். அதில் பண்ணனும் ஒருவர். அதில் பலர் பத்திரமாகத் திரும்பிவந்துவிட்டார்கள். ஆனால், பண்ணன் திரும்பவே இல்லை. தகவலும் இல்லை. ஆனாலும், நெடுஞ்செழியன் தன் புலிகள் இயக்க ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை” என்கிறார் கொளத்தூர் மணி.

சிறையில் ஒன்றாக இருந்த அனுபவம் பற்றிக் கேட்டோம். “திருச்சியில் ஒரு கூட்டம் நடத்தி பிரிவினைக்கு ஆதரவாகப் பேசினார் என்று அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அவரை தடா சட்டத்தில் கைது செய்தது போலீஸ். 1994-95 காலகட்டத்தில் நானும் தடா சட்டத்தில் கைதாகி அவருடன் சிறையில் இருந்தேன். அப்போது தினமும் மாலை நேரங்களில், இளைஞர்கள், இன உணர்வாளர்கள் மத்தியில், திராவிட இயக்கப் பார்வையில் இலக்கியம் பேசுவார். சங்க இலக்கியங்களில் எப்படி ஆரிய சார்பின்மை இருந்தது... எப்படி வைதீக எதிர்ப்பு இருந்தது என்று சொல்வார். சைவமும், வைணவமும் கூட வைதீக எதிர்ப்பு மதங்கள்தான் என்பது அவருடைய கருத்து. ‘சைவ குரவர்களும், வைணவ ஆழ்வார்களும்கூட தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் ஆதரித்து ஆரிய பண்பாட்டிற்கும் சம்ஸ்கிருதத்துக்கும் எதிராக இருந்தவர்கள்தான்’ என்பார்.

அந்த வழக்கில் ஜாமீன்பெற்று வெளிவந்த பிறகு, அதே பழைய பயிற்சி வகுப்பு சம்பவத்துக்காக பொய் வழக்கு போட்டு அவரை கைது செய்தது கர்நாடக காவல்துறை. அதாவது பெங்களூரு பிரேஸர் டவுன் வழக்கில் பிடிபட்டவன் இவரது அந்தப் பயிற்சியில் பங்கேற்றவன் என்று வழக்கு புனைந்து, கைது செய்தார்கள். இந்த வழக்கில் 32 மாத காலம் சிறையில் இருந்தார். அதனால், அவரது சமூக, ஆய்வுப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

க.நெடுஞ்செழியன்
க.நெடுஞ்செழியன்

அவர் நல்ல கவிஞரும்கூட. ஆரம்பக் காலத்தில் அவரது கவிதையால்தான் நான் ஈர்க்கப்பட்டேன் என்று அவருடைய காதல் மனைவியார் சக்குபாய் என்னிடம் ஒரு முறை தெரிவித்தார்கள். அவர் எழுதிய பல கவிதைகள் விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ இதழான ‘எரிமலை’யில் வெளியாகியிருக்கிறது. சிறையில் இருந்துகூட பல கவிதைகள் எழுதினார். அதில்,

‘பொய் வழக்குப் போட்டு - என்

புகழையெல்லாம் தீய்த்து

கைவிலங்கு மாட்டியெனை

கடுஞ்சிறையில் பூட்டி

வெங்கொடுமைச் செய்தாலும்

நான் வீழ்ந்துவிட மாட்டேன்

பங்கமெலாம் கண்டு

நான் பயந்து விடமாட்டேன்

வஞ்சகத்தின் முன்னே

நான் மண்டியிட மாட்டேன்’

எனத் தொடங்கும் கவிதை பலருக்கும் பிடித்தமானது” என்றார் கொளத்தூர் மணி.