Published:Updated:

நடக்குறது அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா?

அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா?
பிரீமியம் ஸ்டோரி
அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா?

முதல்வர் எடப்பாடிக்கு கோவணாண்டியின் கடிதம்

நடக்குறது அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா?

முதல்வர் எடப்பாடிக்கு கோவணாண்டியின் கடிதம்

Published:Updated:
அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா?
பிரீமியம் ஸ்டோரி
அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா?
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் விவசாயிகளுக்கு அடையாளமாகக் காட்டிய பச்சைத் துண்டை உங்கள் தலையில் உருமாகட்டி, உழவன் மகனாகக் கம்பீரமாகக் காட்சி தரும் `எங்கள் தங்கம்’ தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு மீண்டும் கோவணாண்டியின் வணக்கமுங்க...
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘தமிழ்நாட்டில் நடப்பது அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா?’னு ஒரே குழப்பமா இருக்குதுங்க. உதய் மின் திட்டத்தை அம்மா எதிர்த்தாங்க. ஆனா, ‘அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி’னு மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்ற நீங்க அதை ஏத்துக்கிட்டீங்க. ‘நீட்’ தேர்வை அம்மா எதிர்த்தாங்க. ஆனா, அதே அம்மா வழியில(!) ஆட்சி செய்யற நீங்க அதை ஆதரிக்கிறீங்க. இயற்கை எரிவாயு (கெயில்) திட்டத்தை அம்மா முதலில் அனுமதிச்சாலும், பிறகு விவசாயிகளோட வேதனைக் கண்ணீரைப் பார்த்துட்டு தடுத்தாங்க. `நெடுஞ்சாலை ஓரமா கொண்டு போங்க’னு மாற்றி அறிவிச்சாங்க. ஆனா, நீங்க ஒண்ணும் பேச மாட்டேங்குறீங்க. ஜி.எஸ்.டி வரி விதிப்பை அம்மா எதிர்த்தாங்க. நீங்க மண்டிபோட்டு ஏத்துக்கிட்டீங்க. பிறகு, ‘மத்திய அரசு எல்லா வரியையும் வாங்கிக்கிட்டு, தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய பங்குத் தொகையைக் கொடுக்க மாட்டேங்குது’னு கண்ணீர் வடிக்கிறீங்க.

நடக்குறது அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா?

இப்படி ஒவ்வொரு செயல்லயும் அம்மா ஆட்சிக்கும் உங்க ஆட்சிக்கும் ஏகப்பட்ட முரண்பாடு இருக்குது. இதுல, `அம்மா ஆட்சி’னு சொல்லிக்கிறதுல மட்டும் குறைச்சலில்லை. இப்போ எங்களுக்கு ஒரு சந்தேகம்... ஏற்கெனவே சொன்ன மாதிரி, பல திட்டங்களை அம்மா எதிர்த்தாங்க. அதே திட்டங்களை நீங்க ஆதரிக்கிறீங்க. இதுல யார் செய்யறது சரி? நீங்க செய்யறதுதான் சரின்னு சொன்னா, அப்போ அம்மா தவறான முடிவு எடுத்துட்டாங்களா? இல்லை, அம்மா செஞ்சதுதான் சரின்னு சொன்னா, அப்போ நீங்க எடுத்தது தவறான முடிவா? இதுவே பெரிய குழப்பமா இருக்குது. இந்தக் குழப்பம் தீர ஒரே வழிதான். ‘எனது தலைமையிலான ஆட்சி’னு அம்மா சொன்ன மாதிரி நீங்களும் ‘என் வழி தனி வழி’னு சொல்லிடுங்க. யார் எதிர்த்து கேள்விக் கேட்கப்போறா? அதை விட்டுட்டு பேச்சுக்குப் பேச்சு `அம்மா ஆட்சி’னு சொல்லிக்கிட்டு எல்லாரையும் குழப்பாதீங்க சாமி.

சரி, விஷயத்துக்கு வர்றேன். மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கு முன்னாடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறை வல்லுநருங்ககிட்ட கருத்து கேட்டாங்களாம். அப்போ விவசாயிகள் குழு ஒண்ணும் நிர்மலா அம்மாவைப் பார்த்து, கருத்து சொன்னாங்களாம். நிறைய கருத்துகள் சொல்லிட்டு கடைசியா, ‘தேசிய வங்கிகளில் விவசாயிகளுக்குக் கொடுக்குற பயிர்க்கடனை பழையபடியே மானியத்தோட நாலு சதவிகித வட்டிக்குக் கொடுக்கணும். குறு, சிறு விவசாயிகளுக்கு இப்போ கொடுக்குற மூணு லட்ச ரூபா கடன் தொகையை அஞ்சு லட்சமா உயர்த்திக் கொடுக்கணும்’னு கோரிக்கை வெச்சாங்களாம். ஆனா நிதியமைச்சர் அம்மா, விவசாயிகளோட கோரிக்கையை நிராகரிச் சுட்டாங்களாம். இல்லைனு சொல்லியிருந்தாக்கூட பரவாயில்லை. ஆனா, அதுக்கு நிதியமைச்சர் சொன்ன காரணம்தான், தூங்கவிடாம துரத்தித் துரத்தி அடிக்குது.

‘விவசாயிகள் என்ற பேர்ல போலியான ஆட்கள் அதிகம் கடன் வாங்கிட்டு, வட்டிச் சலுகை அனுபவிச்சுக்கிட்டு அரசை ஏமாத்துறாங்க. அதனால, விவசாயக் கடன் கொடுக்குறதுல கடிவாளம் போடப் போறோம்’னாராம். அதுல கொஞ்சம் உண்மை இல்லாம இல்லை. ஆனா, ‘தவறு எங்கே நடக்குது, யார் தவறு செய்யறாங்க’னு கண்டுபிடிக்க வேண்டியது அரசாங்கத்தோட வேலைதானே? ஆனா, ‘நாங்க எதுக்கு அவங்களைக் கண்டுபிடிக்கணும்’னு அவங்க நினைக்கிறாங்க. ‘மொத்தத்துல சலுகையை நிறுத்திட்டா, யாரும் போலித்தனமா அனுபவிக்க முடியாதுல்ல’னு சொல்லிட்டு ஒரு லுக் விட்டாங்களாம் நிதியமைச்சர். `அதை இப்போ நினைச்சாலும் தாங்க முடியலை’னு புலம்புறாரு போயி சந்திச்ச குழுவுல இருக்குற என்னோட தோஸ்து ஒருத்தர்.

தெரியாமத்தான் கேக்குறேன்... தவறு செஞ்சவங்களைக் கண்டுபிடிச்சு தண்டிக்காம, எல்லா விவசாயிகளையும் தண்டிக்கிறது எந்த விதத்துல நியாயம்? இதை விவசாயிகள் சார்பா மத்திய அரசுகிட்ட எடுத்துச் சொல்லி, நீங்கதான் முதல்வரே வாங்கிக் கொடுத்திருக்கணும். `டாஸ்மாக்கைத் திறக்கக் கூடாது’னு உயர் நீதிமன்றம் சொன்னதும் வேட்டியை வரிஞ்சுகட்டிக் கிட்டு, உச்ச நீதிமன்றம் வரைக்கும் போய், தமிழ்க் குடிமகன்களின் வயித்துல சரக்கை வார்த்த நீங்க, சம்சாரி பிரச்னைன்னதும் சாந்தமாகிட்டீங்களே... இதுதான் உங்க தர்மமா?

நிர்மலா சீதாராமன் அம்மா சொன்ன அறிவிப்பையும் தாண்டி, உங்க அரசு போட்டுச்சு பாருங்க எங்க பொழப்புல ஒரு அணுகுண்டு... ஐயோ... தாங்க முடியலை. ‘கடன் கொடுத்தாத் தானே வட்டியில சலுகை கேட்குறீங்க... கடனே கொடுக்காம விட்டுட்டா எதுவும் கேக்க முடியாதுல்ல’னு வடிவேல் படத்துல வர்ற காமெடி மாதிரி எதையாவது செஞ்சுக்கிட்டே இருக்காங்க உங்க ஆளுங்க.

‘கூட்டுறவு வங்கிகள்ல கடனைக் கொடுக்காதீங்கன்னு முறையா உத்தரவு வரலை. ஆனா, போன்ல குறுஞ்செய்தி வந்துச்சு... அதனால கடனைக் கொடுக்க முடியாது’னு சொல்றாங்க பேங்க் ஆபீஸருங்க. உடனே விவசாயிங்க கோபம் அதிகமாகி, போராட்டத்துல இறங்கலாம்னு பேசிக்கிட்டு இருந்தோம். அடுத்த நாளே, அறிக்கை ஒண்ணைக் கொடுத்து, அதை ஆஃப் பண்ணுனீங்க பாருங்க... ஐயா, சும்மா சொல்லக் கூடாது. நீங்களும் பல சமயத்துல சாணக்கியனா மாறிடுறீங்க. கழுவுற மீன்ல நழுவுற மீன் மாதிரி கொழகொழா அறிக்கை கொடுத்து, பிரச்னையைத் தற்காலிகமா தள்ளி வெச்சிருக்கீங்க. ஆனா, உங்க அறிவிப்பை எந்த விவசாயியும் நம்பலை எடப்பாடி ஐயா அவர்களே.

‘கடன் கொடுப்பதற்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கும் ஒரு வரம்பு, வழிமுறை வைத்துள்ளோம். சில வேளாண் கூட்டுறவு வங்கிகளில் அந்த விதிமுறைகளை மீறிச் செயல்பட்டிருக்கிறார்கள். அதனால், வங்கிகளில் வைப்பு வைத்தவர்களுக்கு அவர்கள் கேட்கும்போது பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. மற்றபடி எந்தக் கடனையும் நிறுத்தி வைக்கவில்லை’னு அறிவிச்சீங்க. அதாவது, பணம் இல்லைங்கிறதை சொல்லாம சொல்லிட்டீங்க. ‘இனி கடவுள்தான் காப்பாத்தணும்’னு கொரோனா விஷயத்துல சொன்ன மாதிரியே, இப்பவும் கையை விரிச்சுட்டீங்க. அதனாலதான் கோவணாண்டிகளுக்கு ஏற்கெனவே இருந்த சந்தேகம் அதிகமாகிடுச்சு. நடக்குறது அம்மா ஆட்சியா... இல்லை, அமித் ஷா ஆட்சியா?

பண மதிப்பிழப்பு நடந்தப்போ, எல்லா கூட்டுறவு பேங்க்குலயும் வேண்டாம் வேண்டாம்னு சொல்ற அளவுக்கு டெபாசிட் குவிஞ்சுதுன்னு சொல்லிக்கிட்டாங்க. அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெரும் வியாபாரிகள்னு பலரும் கறுப்புப் பணத்தை கூட்டுறவு பேங்க்ல போட்டு, வெள்ளையா மாத்தினதா கூட்டுறவு பேங்க்ல வேலை பார்க்குற சில ஆபீஸருங்க காதைக் கடிச்சாங்க. இதெல்லாம் எப்படிச் சாத்தியம்? பேங்க் அவங்க கன்ட்ரோல்ல இருந்தாத்தானே முடியும்? அதனாலதான் ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுபோயிட்டாங்களோனு சந்தேகமா இருக்குது.

நடக்குறது அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா?

‘மக்களால் நான், மக்களுக்காக நான்’னு அம்மா முழங்கினது மாதிரி, விவசாயிகளால் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டதுதான் கூட்டுறவு சங்கங்கள். விவசாயியான நீங்க அதைச் சீர்படுத்துவீங்கன்னு நினைச்சோம். ஆனா, மத்திய அரசு சீரழிச்சுக்கிட்டு இருக்குறதை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்க. கொரோனா காலத்துல இதயத்துல இடி இறங்குற மாதிரி வரிசையா அமிலச் சட்டங்களை அமல்படுத்துது மத்திய அரசு. அவங்க, ‘ஒரே நாடு... ஒரே கா(ர்)டு’ னு அடுத்த அலப்பறையை ஆரம்பிச்சுட்டாங்க.

மண்புழுகூட, தாக்க வரும்போது கொஞ்சம் வெகுண்டெழுந்து உரிமைக்காகப் போராடும். ரெண்டு துண்டாப் போனாலும், ரெண்டும் துடிக்கும். ஆனால், தமிழ்நாட்டோட உரிமையை டெல்லிவாலாக்கள் டெய்லியும் ஒவ்வொண்ணா வெட்டிக்கிட்டே இருக்காங்க. எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய நீங்க, அமைதியா இருக்கீங்க. ஒருவேளை கொரோனா கவசம் உங்க வாயைத் திறக்கவிடலையோ? இப்படியே இருக்காதீங்க. ‘இது எடப்பாடி அரசு அல்ல... எடுபிடிகளின் அரசு’னு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கலாய்க்கிறதை உண்மை ஆக்கிடாதீங்க. விவசாயிகளுக்குக் கடன் கொடுக்குற உரிமையில மத்திய அரசைக் கைவைக்க விடாதீங்க சாமி. தமிழகத்தோட உரிமையைக் காக்கலைன்னாலும், குறைஞ்சபட்சம் எதிர்ப்பையாவது பதிவு செய்யுங்க. அப்போதான் நீங்களும் விவசாயிங்கிறதை நம்புவோம்!

இப்படிக்கு,

கோவணாண்டி.