Published:Updated:

“எங்க குமுறலெல்லாம் உங்களுக்குக் கேக்குதா மோடி ஐயா!”

கோவணாண்டியின் கடிதம்
பிரீமியம் ஸ்டோரி
கோவணாண்டியின் கடிதம்

பிரதமருக்கு கோவணாண்டியின் கடிதம்

“எங்க குமுறலெல்லாம் உங்களுக்குக் கேக்குதா மோடி ஐயா!”

பிரதமருக்கு கோவணாண்டியின் கடிதம்

Published:Updated:
கோவணாண்டியின் கடிதம்
பிரீமியம் ஸ்டோரி
கோவணாண்டியின் கடிதம்
பாரத தேசத்தின் பாசமிகு ‘பகூத் படா’ மந்திரி, அதானுங்க... பிரதம மந்திரி மோடிஜி ஐயாவுக்கு தென்னாட்டுக் கோவணாண்டியின் வணக்கமுங்க.

‘என்னப்பா கோவணாண்டி, எங்க போனே நீ.... உன்னோட கடிதம் பார்த்து ஒரு மாமாங்கம் ஆகிப்போச்சு. அஞ்சாறு வருசமா ஆளையே காணலியே’னு பிடரியைப் பிடிச்சு, எங்க ஊரு இங்கிலிபீசு வாத்தியார் இழுத்தப்பதான் என்னோட நினைப்பு எனக்கே வந்துச்சு. ‘ஆசை வலை விரிச்சு, மோடிஜி உன்னை அள்ளிக்கிட்டுப் போயிட்டாரோ... வஞ்சக வலை விரிச்சு வளைச்சிப் போட்டுட்டாரோ... கலர் கலரா ரீல்விட்டு கவுத்துட்டாங்களோனு கவலையாப் போயிடுச்சு. அவங்க பேச்சைக் கேட்டு அறிவிழந்து போயிடாதய்யா... எல்லாம் நடிப்பு’னு வாத்தியார் வருத்தப்பட்டப்போதான், `பட்’டுன்னு புத்தியில உறைச்சுது.

அது கிடக்கட்டும் மோடிஜி...

உங்க அணா காசு மந்திரி, அதுதாங்க உங்க நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பைக் கேட்டு, கோவணாண்டிகள்லாம் கொதிச்சுப் போயிட்டாங்க. அடிவயிறு கலங்கி ஆடிப்போயிட்டாங்க. மூணு லட்சம் கோடி முழுசா உழவனுக்குத்தான்னு சொன்னாங்க. நானும் விளக்கெண்ணெயைக் கண்ணுலவிட்டு, தேடித் தேடிப் பார்த்தேனுங்க... ஒத்த ரூபாய்கூட உருப்படியா கோவணாண்டிக கணக்குல வரலீங்க. பழைய கணக்கயெல்லாம் (விவசாயிக்கு 6,000 ரூபா) புதிய கணக்குல சேர்த்துட்டாங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பட்ட கடனைக் கட்ட முடியலை. வட்டி குட்டி போட்டு வளர்ந்து நிக்குது. தள்ளுபடி கிடைக்கும்னு தவம் கெடந்தோம். யானை குட்டி போடும், குட்டி போடும்னு காத்துக்கிட்டு இருந்தா கடைசியில பெரும் சாணியைப் போட்டுட்டுப் போன கதையா, ‘அசல் தள்ளுபடியாகும்’, ‘இல்லாட்டி வட்டியாவது தள்ளுபடி ஆகும்’னு காத்திருந்தோம். கடைசியில எங்க தலையில பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுட்டாங்க சாமி உங்க நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்.

சரி, அதை விடுங்க... கடைசியில எங்க விளைபொருள்களுக்கு நல்ல விலையாவது கிடைக்கும்னு பார்த்தா, அதுவும் காத்துப்போன பலூன்கணக்கா காணாமப் போயிடுச்சே... கட்டுப்படியான விலை வரும். விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சொன்ன மாதிரி கணக்குப் போட்டா குவிண்டால் நெல்லுக்கு 3,000 ரூபா தரணும். கடைசியில 2,500-ஆவது வரும்னு காத்திருந்தோம். ஆனா, குவிண்டாலுக்கு 53 ரூபாய் கூட்டி, 1,868 ரூபாய்னு அறிவிச்சு எங்க வாழ்க்கையையே பொசுக்கிட்டீகளே மோடி சாமி. அந்த அம்மையார்கிட்ட கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க.

“எங்க குமுறலெல்லாம் உங்களுக்குக் கேக்குதா மோடி ஐயா!”

மந்திரத்துல மாங்காய் வரவழைக்கிற ஜோலி இல்லை விவசாயம். விடிய விடியப் பனி, பாம்புனு பார்க்காமப் பாடுபடணும். நெற்றி வியர்வை நிலத்துல சொட்டணும். 1,000, 2,000 அடினு ஆழ்துளைக் கிணறு தோண்டி, தண்ணி பாய்ச்சி, நாத்து நட்டு, களையெடுத்து விளையவெக்கிறது, நீங்க சொன்ன மாதிரி கைத்தட்டுறது, விளக்குவெக்கிறது மாதிரி சாதாரணமான வேலை இல்லீங்கய்யா.

உங்க அம்மையார் நெல்லுக்குக் கொடுத்த 53 ரூபாய், லஞ்சத்துக்கே பத்தாது. எங்க தமிழ்நாடு கவர்மென்ட் ஆசாமிங்களுக்கு நெல்லை எடுக்கணும்னா 100 ரூபாய் அழணும். இல்லாட்டி, `ஈரம் அதிகம்’னு நெஞ்சுல ஈரமே இல்லாமப் பேசுவாங்க. விலையை மாத்தி அறிவியுங்க நாட்டாமை. அப்பத்தான் ம.சி (மன்மோகன் சிங்), ப.சி (ப.சிதம்பரம்)-யில இருந்து `மாறுபட்ட மகா மந்திரி’னு நாங்க நம்புவோம். எங்க வருமானத்தை ரெட்டிப்பு ஆக்குறதாச் சொன்னீங்க. உங்க அம்மையார் அறிவிப்பு, விவசாயிக தற்கொலையை வேணுமுன்னா ரெட்டிப்பு ஆக்குமுங்க. தேர்தலுக்கு முன்னாடி ஆளுக்கு வங்கிக் கணக்குல 15 லட்ச ரூபாய் போடறதா டுபாக்கூர் விட்டீங்களே... அப்படித்தானா இந்த மூணு லட்சம் கோடி திட்டமும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ஒரு பானைச் சோத்துக்கு ஒரு சோறு பதம்’னு சொல்ற மாதிரி நெல்லு விலை அறிவிப்பே எங்களை நிலைகுலைய வெச்சுடுச்சுங்க. மத்தப் பொருளுக்குப் போனா நெஞ்சு வெடிச்சுடுங்க. அந்த மூணு லட்சம் கோடியில `ஒரு லட்சம் கோடிக்கு குடோன் கட்டித் தர்றேன்’னு சொல்றாங்க. அலுங்காம குலுங்காமப் போயி, வெச்சு விக்க `ரோடு போட்டுத் தர்றேன்’னு சொல்றாங்க. அது சரிங்க ஜி, சட்டியில இருந்தாத்தானே அகப்பையில வரும். ம.சி, ப.சி காலத்துல எங்க கோவணத்தயாவது விட்டு வெச்சிருந்தாங்க - அடகுவெக்க. ஆனா, உங்க ஆளுங்க எங்க கோவணத்தையும் உருவிவிட்டு அம்மணத்தோட விரட்டுறாங்க. இந்தக் கொடுமை இயற்கைக்கே பொறுக்கலை. எல்லாரும் கோவணத்தை இடுப்புலதான் கட்டுவாங்க. ஆனா, அதை உருவி இப்ப மூஞ்சியில கட்டவெச்சிருச்சில்ல இயற்கை.

விளைஞ்சவுடனேயே கடன் கொடுத்தவன் அள்ளிட்டுப் போயிடுறான். இதுல கொடோன்ல கொண்டுபோயி எதைவெக்குறது... எங்ககிட்ட வாங்கிட்டுப்போற வியாபாரிங்கதான் இப்ப வரைக்கும் குடோனைப் பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க. வழக்கம்போல அவங்க காட்டுல மழை. எங்களுக்கு எப்பவும்போல வறட்சிதான்.

“எங்க குமுறலெல்லாம் உங்களுக்குக் கேக்குதா மோடி ஐயா!”

அப்புறம் அம்மையார் சொல்றாங்க, ‘விவசாயியே அவங்க விளைபொருளுக்கு விலை வைத்து விற்பனை செய்யலாம்’னு... விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தோத்துட்டாரு போங்க. எங்க பொருளுக்கு இப்ப வரைக்கும் நாங்கதான் விலை சொல்றோம். ஆனா, கேட்கத்தான் நாதியில்லை. எல்லா வியாபாரிகளும் கூட்டுப் போட்டுக்கிட்டு எங்களைக் குழியில தள்ளுறாங்க. அதுக்குத்தான் அரசாங்கமே வாங்கிக்கணும்னு சொன்னாக் கேட்க மாட்டேங்கிறீங்க. நெல்லுக்கு குவிண்டால் 3,000 ரூபாய், கரும்பு டன்னுக்கு 5,000 ரூபாய், பசும்பால் லிட்டருக்கு 60 ரூபாய், எருமைப்பால் 75 ரூபாய்னு கொடுத்தாத்தான் ஓரளவுக்காவது கட்டுப்படியாகும் ஜி.

எங்க நிலைமை தெரியாம பேசிக்கிட்டு இருக்காங்க நிதியமைச்சர். விவசாயிகளுக்கு உரக் கடைக்காரர்தான் ஃபைனான்சியர். விவசாய விஞ்ஞானி, வியாபாரி எல்லாம் அவர்தான். விதை முதல் அறுவடை வரைக்கும் அவர் சொல்ற ஆலோசனைப்படிதான் நடக்கும். விதை, ரசாயன உரம், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி, அறுவடை இயந்திரம்னு அவரே எல்லாத்தையும் கொடுத்து, அறுவடையை அள்ளிக்கிட்டுப் போயிடுவாரு.

அவர் கொடுத்த கடனுக்கு வட்டிக்கு வட்டி போட்டு எடுத்துக்குவாரு. மிச்சம் இருந்தா காசு கொடுப்பாங்க. இல்லையின்னா, இன்னும் இவ்வளவு பாக்கினு ஒரு சீட்டுக் கொடுப்பாங்க. இதுதான் எங்க பொழப்பு. அப்புறம் குளுகுளுப் பெட்டி, குடோன்ல எதைவெச்சு விக்குறது... கொஞ்சம் நடைமுறையில யோசிங்க ஐயா. உங்களுக்குப் புண்ணியமாப் போகட்டும்.

சந்தைப் பொருளாதாரத்துல வாங்குறவன் வெக்கிறதுதான் சட்டம். தக்காளி கிலோ 50 ரூபாய்னு சொல்வோம். 5 ரூபாய்க்குக் கேப்பாங்க. வேதனையில விவசாயிங்க ரோட்டுலயும் சாக்கடையிலயும் கொட்டிட்டு வெறும் கையோட வீட்டுக்கு வர்றாங்க. இதெல்லாம் உங்க அம்மையாருக்குத் தெரியலைபோல.

சீட்டுக் கணக்கு எழுதிட்டு இருக்க வேண்டிய அம்மையாரை நாட்டுக் கணக்கு எழுதச் சொன்னா இப்படித்தான் பண்ணுவாங்க. இதை நான் சொல்லலீங்க. உங்க கட்சியில இருக்குற ஒரே ஒரு பொருளாதார நிபுணர் சுப்பிரமணியன் சுவாமி சொல்றாரு.

நாட்டாமை ஐயா... எதுக்கும் மந்திரியை மாத்திப்பாருங்க. நல்லது நடக்கும். கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்க. அவங்க எங்களை மட்டும் கவுக்கலை. இப்படியே போனா, அடுத்த தேர்தல்ல உங்களையும் சேர்த்தே கவுத்துடுவாங்க. ஜாக்கிரதை!

இப்படிக்கு,

கோவணாண்டி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism