Published:Updated:

'ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு சர்வதேச ஏலம்' - மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு கண்டனம்!

செயராமன்
செயராமன்

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான சர்வதேச ஏலத்துக்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

காவிரிப் படுகையில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைபடுத்த ஹைட்ரோகார்பன் இயக்குனரகம், ஜூன் 10-ம் தேதி சர்வதேச ஏலத்துக்கான அழைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஹைட்ரோகார்பன்
ஹைட்ரோகார்பன்

எண்ணெய் -எரிவாயு, ஹைட்ரோகார்பன் எடுக்க `Discovered Small Fields’ எனப்படும், (கண்டுபிடிக்கப்பட்ட சிறிய எண்ணெய் வயல்கள்) (DSF) ஏலத்திட்டத்தின் கீழ் 2017-ம் ஆண்டு முதல் ஏலமும், 2018-ம் ஆண்டு இரண்டாம் ஏலமும் நடைபெற்றன. தற்போது மூன்றாம் கட்ட ஏலம் பற்றிய அறிவிப்பு கடந்த 10-ம் தேதி வெளியானது. 32 ஒப்பந்தப் பகுதிகள் மூலம் 75 எண்ணெய் வயல்களை பெட்ரோலியத்துறை ஏலம்விடுகிறது. அதில் காவிரிப்படுகை புதுக்கோட்டை மாவட்டம், வட தெரு கிராமப் பகுதியில் 463.2 சதுர கிலோமீட்டர் பகுதி ஏலம் விடப்படுகிறது. ஜூன் 30-ம் தேதி ஏலம் பற்றி பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்திய அரசுக்கும் இடையே இணையவழிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து, டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டுமென பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், பெட்ரோலியத்துறை மற்றும் அமைச்சகம் ஏலம்விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதியை தமிழக அரசு ஒருபோதும் வழங்காது எனவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் இந்தச் செயலை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. இது பற்றி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமனிடம் பேசினோம். "ஓ.என்.ஜி.சி., ஓ.ஐ.எல் போன்ற நிறுவனங்கள் முன்னமே ஆய்வுசெய்து அடையாளம் கண்ட பல இடங்களை இந்திய அரசு வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஏலத்தில் ஒப்படைக்கிறது. இந்த ஏலம் முழுவதுமே தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கானது. 2020, பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்பாட்டுச் சட்டம் நடைமுறையில் இருக்கும்போதே காவிரிப்படுகையில் எண்ணெய் - எரிவாயு, ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஏல அறிவிப்பை இந்திய அரசு வெளியிடுவது கண்டனத்துக்குரியது. 2020 பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டப்படி தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் ஐந்து பிளாக்குகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து பிளாக்குகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன. இப்போது ஏலத்தில் கொண்டுவரப்படும் வடதெரு நிலப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட வரம்புக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தது. இந்தப் பகுதியில் எண்ணெய் - எரிவாயு கிணறுகள் அமைக்க பெட்ரோலியம் சுரங்கக் குத்தகை மூலம் 2027 வரை ஓ.என்.ஜி.சி அனுமதி பெற்றுள்ளது என ஏலஅறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் 20 ஆண்டுகளுக்கு மரபுசார்ந்த மற்றும் மரபுசாரா ஹைட்ரோகார்பன்கள் எடுக்க அனுமதிக்கப்படுவதாக அது கூறுகிறது. மரபுசாரா ஹைட்ரோகார்பன்களை 'ஹைட்ராலிக் ஃபிராக்சரிங்' எனப்படும் அபாயகர 'நீரியல் விரிசல் முறை'யின் மூலம்தான் எடுக்க முடியும்.

ஹைட்ரோ கார்பன்
ஹைட்ரோ கார்பன்

தமிழ்நாடு வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகும்கூட காவிரிப் படுகைப் பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க இந்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிடுவது என்பது தமிழ்நாட்டையும், தமிழ்நாடு அரசு இயற்றியுள்ள சட்டத்தையும் அவமதிப்பதாகும்.இந்திய அரசு ஏலம்விடப்படும் பகுதியிலிருந்து காவிரிப்படுகை பகுதியைக் கைவிட வேண்டும் என்று கோருகிறோம். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெட்ரோலியத்துறை அமைச்சகம் காவிரிப்படுகைப் பகுதியை ஏலப் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய வேண்டுகிறோம். காவிரிப்படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை வேண்டிக்கொள்கிறோம். எண்ணெய் -எரிவாயு ஹைட்ரோகார்பன் எடுப்பு என்பது தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் நடைபெறக் கூடாது என்று வலியுறுத்துகிறோம். எதிர்வரும் காலத்தில் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் எண்ணெய் - எரிவாயு, ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கத் தடை செய்யும் வகையில் சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை வகுக்க வேண்டுகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு