Published:Updated:

`இடியும் நிலையில் எம்.ஜி.ஆர் கட்டிக்கொடுத்த வீடுகள்!' - ஓ.பி.எஸ் ஊரில் ஓர் அவலம்

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரின் அருகே, பழங்குடியின மக்களுக்கு இப்படி ஓர் அவல நிலை ஏற்பட்டிருப்பதை சமூக ஆர்வலர்கள் கடுமையாகச் சாடுகின்றனர்.

தரைமட்டமாகியுள்ள வீடுகள்
தரைமட்டமாகியுள்ள வீடுகள்

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் அருகே உள்ளது எண்டப்புளி கிராமம். அக்கிராமத்தின் அருகே உள்ள நேரு நகர், இந்திரா குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், ஆபத்தான வகையில், இடியும் நிலையில் உள்ள வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

தரைமட்டமாகியுள்ள வீடுகள்
தரைமட்டமாகியுள்ள வீடுகள்

சிலரது வீடுகள் இடிந்து தரைமட்டமாகிவிட்டது. குடியிருக்க வீடு இல்லாத அம்மக்கள், இன்று மாவட்ட கலெக்டரிடம் முறையிட வந்தனர்.

"எனக்கு இப்போ வயசு 62. மலையில் குடியிருந்த எங்களை 1980-ம் வருடம் மலையிலிருந்து கீழிறக்கினார்கள். எங்களைப் பார்க்க வந்த அப்போதைய மதுரை ஜில்லா கலெக்டர், `உங்களுக்கு எம்.ஜி.ஆர் வீடு கட்டித்தர சொல்லியிருக்கிறார்’ என்று கூறி, 21 ஓட்டு வீடுகள் கட்டிக்கொடுத்தார். கூடவே, கம்பு, கேப்பை போட 2 ஏக்கர் நிலம் கொடுக்கிறேன் என்றார்.

மயிலான்
மயிலான்

வீடு கட்டிக் கொடுத்தார்கள். ஆனால், நிலம் கொடுக்கவில்லை. மலையில் சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் செய்துகொண்டிருந்த எங்களை கீழே இறக்கி கொண்டுவந்துவிட்டு, கூலி வேலை செய்ய வைத்தார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எங்களுக்குக் கட்டிக்கொடுத்த வீடுகளில் பல இடிந்து தரைமட்டமாகிவிட்டன. சில வீடுகள் இடியும் நிலையில் இருக்கிறது. உறங்க இடம் இல்லாமல், குடிசை போட்டு வாழ்ந்துவருகிறோம்.

ஒரு காற்று, ஒரு மழை அடித்தால் போதும், குடிசை காணாமல் போய்விடும். பலமுறை மாவட்ட கலெக்டரை பார்த்து மனு கொடுத்துவிட்டோம். `இந்தா வருகிறோம். அந்தா வருகிறோம்' என்பார்கள். யாரும் வரமாட்டார்கள். எங்களுக்கு வீடு வேண்டும். அவ்வளவுதான்” என அழுத்தமாகப் பேசினார், ஊர் பெரியவர் மயிலான்.

பழங்குடியின மக்கள் வசிக்கும் தற்காலிக கூரை வீடு
பழங்குடியின மக்கள் வசிக்கும் தற்காலிக கூரை வீடு

குடியிருக்க வீடு இல்லாததால், குடும்பத்தோடு மலைகளில் இருக்கும் தனியார் தோட்டங்களுக்கு காவல் வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள் ஊர் மக்கள். சொந்த இடத்தில் விவசாயம் செய்து அழகான வாழ்க்கை வாழ்ந்து வந்த இம்மக்களை மலையிலிருந்து கீழிறக்கி, தற்போது அடிமைகளாக தோட்டங்களில் தஞ்சம் அடையவைத்துள்ளது மாவட்ட நிர்வாகம். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரின் அருகே, பழங்குடியின மக்களுக்கு இப்படி ஓர் அவல நிலை ஏற்பட்டிருப்பதை சமூக ஆர்வலர்கள் கடுமையாகச் சாடுகின்றனர்.