Published:Updated:

நதி நீரில் சதிவலை பின்னுகிறதா மத்திய அரசு?

ஒரே நாடு... ஒரே தீர்ப்பாயம்

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவில் இரு மாநிலங்களுக்கு இடையே நதி நீரைப் பகிர்ந்து கொள்வதிலேயே சிக்கல்கள் தீர்ந்த பாடில்லை. இந்தச் சூழலில், நாட்டில் பல்வேறு மாநிலங் களுக்கு இடையே நிலவும் நதி நீர்ப் பிரச்னை களுக்குத் தீர்வு காண ஒரே தீர்ப்பாயம் அமைக் கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தீர்வு அளிக்கும் விஷயமா, இல்லை... மாநிலங் களின் உரிமையைப் பறிக்கும் செயலா? பார்ப்போம்.

வெற்றிச் செல்வன்
வெற்றிச் செல்வன்
வீரப்பன்
வீரப்பன்

ஜூலை 10-ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்தான் இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஒரே நாடு, ஒரே தீர்ப்பாயத்துக்காக, மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பிரச்னைகளுக்கான சட்டம் 1956-ல் திருத்தங்கள் கொண்டு வரப்படும். அந்தத் திருத்தங்களின் படி பல்வேறு நதி நீர் தீர்ப்பாயங்களுக்குப் பதில், ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்படும். இந்த நிரந்தரத் தீர்ப்பாயத்துக்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார். நிரந்தரத் தீர்ப்பாயத்துக்கு உதவிசெய்ய குழு அமைக்கப் படும். பிரச்னைகளுக்கு அதிகபட்சமாக ஒன்றரை ஆண்டுக் குள் தீர்வு காணப்படும். நதி நீர் விவகாரத்தில் இந்தத் தீர்ப்பாயம் கொடுக்கும் தீர்ப்பே இறுதியானது’ என்று அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது நாடு முழுவதும் நதி நீர்ப் பிரச்னை களைத் தீர்க்க எட்டு தீர்ப்பாயங்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான தீர்ப்பாயங்கள், தீர்ப்புகளை வழங்கிவிட்டன. காவிரி நிதி நீர் விவகாரத்துக்கும் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. என்னதான் தீர்ப்புகள் வழங்கினாலும், அவற்றை அமல்படுத்தத் தடையாக வழக்குகளும் சிக்கல்களும் நீடித்து வருகின்றன. தற்போதுள்ள 1956-ம் ஆண்டு சட்டத்தின்படி, தீர்ப்பாயங்களை ஏற்படுத்தவே கணிசமான கால அவகாசம் தேவைப்படுகிறது. அதேபோல நதி நீர்ப் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவர காலக்கெடு ஏதும் இல்லை. இந்தச் சூழலில், ஒரே தீர்ப்பாயம் அமைந்தால், பிரச்னைகள் சுமூகமாகத் தீர்க்கப்படுமா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. இன்னொரு பக்கம், ‘இது தீர்வைத் தராது, மாறாக மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயல்’ என்று மாற்றுக் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

நதி நீரில் சதிவலை பின்னுகிறதா மத்திய அரசு?

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் பேசினோம். “நதி நீர், மாநிலப் பட்டியலில் வருகிறது. இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்னைகளில் மத்திய அரசு தலையிடலாம் என்பது இப்போதைய நடைமுறை. மத்திய அரசு, தற்போது நீர் சார்ந்த திட்டங்களை அதிகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனால் நதி நீர் உட்பட அனைத்து நீர் நிலைகளையும் தன்வசப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது. ஒரே தீர்ப்பாயம் அமைந்தால், எந்த வழக்கையும் ஒரு மாநிலம் தொடுக்க முடியாது. ஏற்கெனவே, நிலத்தடி நீருக்கு அனுமதி வாங்கும் மசோதா தயாராக இருக்கிறது. அணைப் பாதுகாப்புக்கான மசோதாவைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. நீர்ப் போக்குவரத்துக்கான திட்டங்களும் கொண்டுவரப்பட உள்ளன. இப்படி ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப் போகிறது மத்திய அரசு. 2012-ம் ஆண்டு தேசிய நீர்க் கொள்கை கொண்டுவரப்பட்டது. தண்ணீரை விற்பனைப் பண்டமாக மாற்றுவது, நீர் மேலாண்மையைத் தனியாரிடம் ஒப்படைப்பது அதன் முக்கிய குறிக்கோள்கள். இந்தக் கொள்கை, காங்கிரஸ் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதைத்தான் பிரதமர் மோடி, இப்போது நடைமுறைப் படுத்துகிறார். இது மாநிலங்களுக்கு எந்த விதத்திலும் நன்மை கொடுக்காது” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூத்தப் பொறியாளர் அ.வீரப்பன் கூறுகையில், “மாநில அரசுகளே இருக்கக் கூடாது என்று நினைக்கிறது மத்திய பி.ஜே.பி அரசு. 1956-ம் ஆண்டு சட்டப்படி, மாநில நதி நீர்ப் பங்கீட்டின்போது ஏற்படும் பிரச்னை களைக் கவனிக்க ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்படும். அதில் நீதிபதிகள், வல்லுநர்கள் அடங்கிய குழு இருக்கும். இந்தக் குழு நேரடியாக மக்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் கேட்டு ஆய்வு நடத்துவார்கள். பின்பு தீர்ப்பு அளிக்கப்படும். அதற்கு பத்து ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்கிறார்கள். இப்படி தனித் தீர்ப்பாயமே தீர்ப்பை வழங்க பல வருடங்கள் ஆகின்றன எனில், பல்வேறு நதி நீர்ப் பிரச்னைகளைக் கையாளும் ஒரே தீர்ப்பாயம் எப்படி ஒரு வருடத்தில் தீர்ப்பு வழங்கும்? இந்தத் தீர்ப்பாயம் முழுமையான தீர்வு தராது. மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். அப்போதுதான் தீர்வு கிடைக்கும்” என்றார்.

சிறுவர் கதை ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. இரண்டு பூனைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு அப்பத்தை பங்கிட்டுத் தரச் சொல்லி குரங்கிடம் செல்லும். குரங்கு ஒட்டுமொத்தமாக அப்பத்தைத் தின்று ஏப்பம் விடும். நதி நீரைப் பகிர்ந்துகொள்ள மாநிலங்களுக்கு மனம் வராத வரை மொத்த நீரின் உரிமையையும் மாநிலங்கள் இழக்க நேரிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு