பெரியார் Vs மோடி: தமிழில் டிரெண்டாகும் எதிர்மறை ஹேஷ்டேக்குகள்... எல்லைமீறும் ட்விட்டர் யுத்தம்!

இந்திய அளவில் டிரெண்டாகும் இந்த ஹேஷ்டேக்கில் இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
தன் வாழ்நாள் முழுவதும் இந்து மதத்தையும் அம்மதத்தின் கடவுள்களையும், சாதி, சமய வேறுபாடுகளையும் தொடர்ந்து விமர்சித்துவந்தவர் திராவிடக் கழகத் தலைவர் பெரியார். `இந்தியாவின் வாழ்வியலில் இந்து மதத்தின் பங்கு மிகப்பெரியது' என்று பேசுபவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. நேரெதிர்க் கொள்கைகளைக்கொண்ட இவர்கள் இருவரும் இன்றைய தினத்தில்தான் பிறந்தார்கள்.
பொதுவாகவே பெரியார் ஆதரவாளர்களும், பா.ஜ.க ஆதரவாளர்களும் மோதிக்கொள்வது சகஜம். அப்படியிருக்கையில் நேரெதிர் கருத்துகளைக்கொண்ட இருவருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடப்படும்போது கருத்து மோதல்கள் வராமலா இருக்கும்? இன்று பெரியார், மோடி ஆகிய இரு தலைவர்களின் தொண்டர்களும் ட்விட்டரில் ஹேஷ்டேக் யுத்தம் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதியன்று, #HBDperiyar141 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் வெகுநேரம் முதலிடத்தில் டிரெண்டானது. #HappyBdayPMModi என்ற ஹேஷ்டேக் இரண்டாவது இடத்திலும், #FatherOfTamilNation என்ற ஹேஷ்டேக் மூன்றாமிடத்திலும், #Happybirthdaynarendramodi என்ற ஹேஷ்டேக் நான்காமிடத்திலும் டிரெண்டாகின. இதையடுத்து ட்விட்டரில் மோடியைப் பெரியார் பின்னுக்குத் தள்ளிவிட்டதாக தி.க., தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் கொண்டாடித் தீர்த்தனர். கடந்த ஆண்டே இருதரப்பினரிடமும் ட்விட்டர் போர் வலுத்திருந்தது. இந்த ஆண்டும் ட்விட்டரில் பெரியார், மோடி ஆதரவாளர்களிடையே எந்த ஹேஷ்டேக் அதிகம் டிரெண்டாகிறது என்கிற போட்டி தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, #HappyBirthdayPMModi என்ற ஹேஷ்டேக் முதலிடத்திலும், #HBDPeriyar என்ற ஹேஷ்டேக் நான்காமிடத்திலும் டிரெண்டாகி வந்தன. தங்களது தலைவர்களைக் கொண்டாடும்விதமாக ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்துவரும் அதேநேரத்தில் மோடி ஆதரவாளர்கள் பெரியாரையும், பெரியார் ஆதரவாளர்கள் மோடியையும் தாக்கும் விதமான ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்துவருகிறார்கள்.
பெரியார் ஆதரவாளர்களில் சிலர், ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும்விதமாகக் கூறிய வார்த்தையைக் கொண்டே மோடியை அச்சிலேற்ற முடியாத வார்த்தைகொண்டு விளித்து, ஒரு ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க ஆதரவாளர்கள் சிலரும், பெரியார் குறித்த தரக்குறைவான வார்த்தையைக் கொண்டு ஒரு ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்துவருகின்றனர். இந்த இரு ஹேஷ்டேக்குகளுமே இந்திய அளவில் முதல் 20 இடங்களுக்குள் டிரெண்டாகி வருகின்றன. இருதரப்பினரும் தங்களது தலைவர்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு இப்படி எதிர்மறையான ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்வது வேதனையளிப்பதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்துவருகின்றனர்.
பா.ஜ.க ஆதரவாளர்களுக்கும் பெரியார் ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்துரீதியான மோதல்கள் எப்போதும் நிகழ்வது வழக்கம். ஆனால், சமீபமாக நாகரிகமற்ற வார்த்தைகள் கொண்ட ஹேஷ்டேக் மோதல்கள்தான் பெரும்பாலும் அரங்கேறிவருகின்றன. இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளியாக #GoBackModi ஹேஷ்டேக்கைக் கைகாட்டுகிறார்கள் பா.ஜ.க ஆதரவாளர்கள். ``ஒரு நாட்டின் பிரதமர், நமது மாநிலத்துக்கு வரும்போது அவரை வரவேற்காமல், இது பெரியார் மண் என்று சொல்லி அவரைத் திரும்பிப் போகச் சொல்வது எந்த வகையில் நியாயம்... தமிழகத்துக்கும் மோடிதான் பிரதமர் என்பதை மறந்துவிட்டு #GoBackModi ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்கிறார்கள். பெரியார் ஆதரவாளர்களும் தி.மு.க-வினரும்தான் இந்த ஹேஷ்டேக் யுத்தத்தைத் தொடங்கி வைத்தார்கள்'' என்று இந்த ஹேஷ்டேக் யுத்தத்துக்கான ஆரம்பப்புள்ளியை விவரிக்கிறார்கள் பா.ஜ.க-வினர்.
எந்த நாளில், #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில், இந்திய அளவில் டிரெண்டாகிறதோ, அந்த நாளில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். மோடி எப்போது தமிழகம் வந்தாலும் இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்படுவதால் பா.ஜ.க ஆதரவாளர்கள் வெறுப்படைந்தனர். ஒரு சில நேரங்களில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவிலும் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

#GoBackModi ஹேஷ்டேக்கை பணம் கொடுத்து தி.மு.க-வினரும் தி.க-வைச் சேர்ந்தவர்களும்தான் டிரெண்ட் செய்ய வைக்கிறார்கள். தமிழக மக்கள், பா.ஜ.க-வுக்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாகத்தான் இருக்கிறார்கள்.பா.ஜ.க ஆதரவாளர்கள்
பா.ஜ.க ஆதரவாளர்களின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கருத்து ஒன்றைப் பதிவு செய்கிறார்கள் திமுக-வைச் சேர்ந்த சிலர். ``கர்நாடகாவில், பெருமழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்தனை, ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு வருத்தம், உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்காக வருத்தம், போர்ச்சுக்கல் நாட்டில் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களுக்கு வருத்தம், மாஸ்கோ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வருத்தம், கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் எனப் பல்வேறு விஷயங்களுக்கு ட்வீட் செய்த பிரதமர், டெல்லியில் 150 நாள்களுக்கும் மேலாகப் போராடிய தமிழக விவசாயிகளுக்காக, நீட் தேர்வால் மரணமடைந்த அனிதா உள்ளிட்ட மாணவர்களுக்காக, ராமநாதபுரம் மீனவர்களுக்காக, தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேருக்காக, குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக எனத் தமிழகத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு ஆதரவாக வாய் திறக்கவேயில்லை. அவர்தான் தமிழகத்துக்கும் பிரதமர் என்றால் இவற்றுக்கெல்லாம் ட்விட்டரில்கூட வருத்தம் தெரிவிக்காதது ஏன்? இவை அனைத்தையும் மனதில்கொண்டுதான் #GoBackModi ஹேஷ்டேக்கை மிகப்பெரிய அளவில் தமிழக மக்கள் டிரெண்ட் செய்கிறார்கள். நாங்கள் யாரும் காசு கொடுத்து டிரெண்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை'' என்ற கருத்தை எதிர்க்கட்சியினர் பலரும் பதிவுசெய்கின்றனர்.

``பிரதமர் மோடி, பெரியார் ஆகிய இருவரும் நேரெதிர்க் கொள்கைகளைக்கொண்டவர்களாக இருந்தாலும், தங்களுக்கு எதிரான கொள்கை, கோட்பாட்டோடு செயல்படுபவரை நாகரிகமற்ற சொற்களைக் கொண்டு விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான் உண்மை. ட்விட்டரில் என்ன டிரெண்டாகிறது என்பதை இந்திய மக்கள் அனைவரும் உற்று கவனிக்கிறார்கள். அப்படி ஒரு சூழலில் இது போன்ற வார்த்தைகளைத் தலைவர்களோடு ஒப்பிட்டு, அதுவும் தமிழில் டிரெண்ட் செய்யும்போது தமிழர்கள் மீதான மரியாதைக்கு அது பங்கம் விளைவிக்கும். கொள்கைரீதியான கருத்துகளை முன்வைத்து எழுப்பப்படும் விவாதங்கள் எப்போதுமே ஆரோக்கியமானவை. ஆனால், இது போன்ற நாகரிகமற்ற எதிர்மறை ஹேஷ்டேக்குகள் கொண்டு எல்லைமீறி டிரெண்ட் செய்யப்படுவது நல்லதல்ல'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இது ஒருபுறமிருக்க, இந்தியா முழுவதுமுள்ள பா.ஜ.க எதிர்ப்பாளர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் #NationalUnemploymentDay என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். ``2014-ல் தேர்தல் பிரசாரத்தின்போது இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்திருந்தார் மோடி. ஆனால், தற்போது வரை இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகளைக்கூட அவர் ஏற்படுத்தித் தரவில்லை. அம்பானி, அதானிக்கு ஆதரவாக மட்டுமே செயல்பட்டுவருகிறார்'' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து #NationalUnemploymentDay என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டுவருகிறது. இந்திய அளவில் டிரெண்டாகி வந்த இந்த ஹேஷ்டேக்கில் இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.