Published:Updated:

`ஹேமமாலினி கன்னத்துடன் ஒப்பீடு!' - `சாலை' சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் அமைச்சர்

நம்முடைய சாலைகள் இப்போது பா.ஜ.க தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கன்னம் போன்று வடிவமற்று குண்டும் குழியுமாக இருக்கிறது.

பி.சி.சர்மா
பி.சி.சர்மா ( twitter )

மத்தியப்பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள சாலைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அம்மாநில அமைச்சர் பி.சி.சர்மா, போபால் பகுதியில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தார்.

அமைச்சர் பி.சி.சர்மா
அமைச்சர் பி.சி.சர்மா
twitter

அதன்பின் பேசிய அவர்,``மத்தியப் பிரதேசத்தில் சாலைகள் போடப்பட்டபோது வாஷிங்டன் சாலைகள் போன்று இருந்திருக்கலாம். ஆனால், இப்போது ஒரு மழைக்கே சாலையின் நிலை முற்றிலுமாக மாறிப்போய் இருக்கிறது.

நம்முடைய சாலைகள் இப்போது, பா.ஜ.க தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கன்னம் போன்று வடிவமற்று குண்டும் குழியுமாக இருக்கிறது. 15 நாள்களில் சாலைகள் முழுவதும் சரிபார்க்கப்படும். சாலை பழுது செய்யப்பட்ட பின் ஹேமமாலினியின் கன்னங்கள் போன்று சீராகப் பளபளவென்று இருக்கும்" என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஹேமமாலினி
ஹேமமாலினி
twitter

கடந்த் 2017ம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்ற போது, அப்போதைய முதலமைச்சர் சிவராஜ்சிங் ஒருமுறை பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய பேட்டியில் மத்தியப் பிரதேசத்தின் சாலைகள் வாஷிங்டன் சாலையைவிட, சிறப்பாக இருக்கிறது என்று பேசியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசுவதாக நினைத்து, சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் சர்மா.

``பெண்களை உடல்ரீதியான வார்த்தைகளால் அவதூறு செய்வது தவறு என்று இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு கூட புரிந்துவிட்டது. ஆனால், நாட்டில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் அமைச்சர்களே இதுபோன்று செயலில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது'' என பெண்ணியவாதிகள் பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அமைச்சர் பி.சி.சர்மா
அமைச்சர் பி.சி.சர்மா
twitter

பெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்தும் சர்மாவோ, காங்கிரஸ் கட்சியின் சார்பாகவோ இதுவரை எந்த வருத்தமும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.