Election bannerElection banner
Published:Updated:

`தமிழகத்தில் விரைவில் 820 மின்சாரப் பேருந்துகள்!’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

M.R. Vijayabaskar
M.R. Vijayabaskar

``தமிழகத்தில் விரைவில் 820 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. முதல்கட்டமாக, 300 பேருந்துகள் இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சரின் குடிமராமத்துப் பணிகள் திட்டம் தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்திலும் இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தமிழகப் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் முத்தூர் தடுப்பணையை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Vikatan

அப்போது பேசிய அவர், ``மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம்தான் முத்தூர் அணை திட்டம். இந்த அணையிலிருந்து விடுவிக்கப்படும் தண்ணீர் நொய்யல் ஆற்றின் வழியாக வந்து, கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி மற்றும் கரூர் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 19 - ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமைக்கப்பட்டது. இந்த அணை அமைக்கப்பட்ட பிறகு, மூன்றாண்டுகள் மட்டுமே தண்ணீர் வந்து சேர்ந்தது. பின்னர், திருப்பூர் சாயக் கழிவுகளால் இதில் தண்ணீர் வருவதற்கான தடை ஆணையை விவசாயிகள் நீதிமன்றத்தில் பெற்றார்கள்.

M.R. Vijayabaskar
M.R. Vijayabaskar

இதனால், இந்த நீராதாரத்தை நம்பி இருந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அண்மையில் பெய்த கனமழையால் அணை நிரம்பி ஆற்றில் பெருக்கெடுத்து வந்த தண்ணீரை கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் உள்ள அணைப்பாளையம் அணையில் தேக்கி வைத்து, அதிலிருந்து பாசன வாய்க்கால்கள் மூலம் மீண்டும் பாசன வசதி பெறும் விவசாயிகள் பலன் பெறவும் திட்டங்கள் மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் இருந்ததால், இம்முறை தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உருவானது. இதன் பயனாக கடந்த 25 ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் இருந்த நிலை மாறி தற்போது நல்ல தண்ணீர் விவசாயத்திற்குப் பயன்படுத்துகின்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது வந்த தண்ணீரில் 2,000 டி.டி.எஸ் குறைவாக உப்பின் அளவு இருந்ததால், தண்ணீர் திறந்து விடலாம் என்ற சூழல் உள்ளது. ஆயினும் முதல்கட்டமாக அந்தத் தண்ணீரில் உப்பின் அளவு 400 டி.டி.எஸ் என்ற அளவில்தான் உள்ளது. இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயிகளின் அனுமதியோடு நீதிமன்றத்தில் ஆணை பெறப்பட்டு, தொடர்ந்து தண்ணீர் விடுவதற்கான சூழல் உருவாக்கப்படும்.

தமிழகத்தில் இயக்கப்படும் மின்சாரப் பேருந்துகளுக்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மின்சாரப் பேருந்துகள் 60 முதல் 70 கிலோமீட்டர் வரை செல்லும் வகையில் உள்ளது. அடுத்து 150 கிலோமீட்டர் செல்லும் வகையில் கொண்டுவரப்படவுள்ளது. மத்திய அரசு 520 பேருந்துகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. விரைவில் அது நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். சி 40-என்ற அமைப்பு 2,000 பேருந்துகள் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளது.

M.R Vijayabaskar
M.R Vijayabaskar

அதில் முதல்கட்டமாக, 300 பேருந்துகள் கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக மொத்தம், 820 மின்சாரப் பேருந்துகள் முதல்கட்டமாக தமிழகத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மாநகராட்சிப் பகுதிகளில் இயக்கப்படும். பின்னர், படிப்படியாக கரூர் போன்ற நகராட்சிப் பகுதிகளிலும் மின்சாரப் பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு