Published:Updated:

`ஜெயலலிதாவால் 1912-13ல் தொடங்கப்பட்டது!' - ஓ.பி.எஸ் பேச்சால் அதிர்ந்த தேனி விழா

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு இன்று காலை தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விழா நடந்தது.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின்கீழ், 1360 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு இன்று காலை தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விழா நடந்தது.

வளைகாப்பு நிகழ்ச்சி
வளைகாப்பு நிகழ்ச்சி

மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து கர்ப்பிணி பெண்கள் மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

மண்டபத்திற்கு வெளியே அமர வைக்கப்பட்ட பெண்கள்
மண்டபத்திற்கு வெளியே அமர வைக்கப்பட்ட பெண்கள்

தனியார் மண்டபத்திற்கு சுமார் 600 முதல் 700 பேர் வரை மட்டுமே அமர வைக்க முடியும் என்பதால், மற்ற கர்ப்பிணி பெண்கள் அனைவரும், மண்டபத்தின் வளாகத்திற்கு உள்ளாகவே, திறந்த வெளியில் சாமியானா பந்தல் அமைத்து அமர வைக்கப்பட்டிருந்தனர்.

காலை 9 மணிக்கே அனைவரும் அழைத்துவரப்பட்டு அமர வைக்கப்பட்டிருந்தனர். துணை முதல்வரோ 10.30 மணிக்கு மேல்தான் வந்தார். அதுவரை, காத்திருந்த கர்ப்பிணி பெண்கள், இயற்கை உபாதைகளைக் கழிக்க மண்டபத்தில் இருந்த ஒரே ஒரு கழிவறைக்குச் சென்று வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. விழாவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் வந்திருக்கும் சூழலில், ஒரே ஒரு கழிவறையால் பலர் மிகவும் சிரமப்பட்டனர்.

OPS
OPS

கர்ப்பிணி பெண்களுடன் வந்திருந்த அவர்களது உறவினர்கள், ``மொபைல் டாய்லெட் வசதி செய்துகொடுத்திருக்கலாமே?” எனக் கேட்க, அங்கிருந்த போலீஸாரும் அரசு அதிகாரிகளும் பதில் ஏதும் பேச முடியாமல் அமைதியாகிவிட்டனர். அதிலும் மண்டபத்திற்கு உள்ளே அமர்ந்திருந்த கர்ப்பிணிகளால் மட்டுமே கழிவறைக்கு எளிதாக எழுந்து செல்ல முடிந்தது. மண்டபத்திற்கு வெளியே அமர்ந்திருந்தவர்கள், போலீஸார், அதிகாரிகள், கட்சியினர் எனப் பலரையும் கடந்து கழிவறைக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.

Vikatan

இதெல்லாம் ஒருபுறம் என்றால், நிகழ்ச்சியில் பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``இன்று நடைபெறக்கூடிய சமுதாய வளைகாப்பு விழா, 1912-13ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டு தற்போது வரை சிறப்பாக நடைபெற்றுவருகிறது” என்றார்.

இதைக் கேட்ட கட்சியினர், அரசு அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.