Published:Updated:

`ஓபிஎஸ் மகனுக்குத்தான ஓட்டுபோட்டீங்க; நாங்க டிடிவி ஆளுங்க!'-தண்ணீர் கேட்ட மக்களை பதறவைத்த அலுவலர்கள்

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

தேர்தல் நேரத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளருக்கு வாக்களித்ததாகக் கூறி கிராம மக்களுக்கு எதிராக டி.டி.வி.தினகரனின் ஆதரவு அரசு அதிகாரிகள் செயல்படுவதாகவும் இதனால், குடிநீருக்கு அவதிப்படுவதாகவும் கூறுகின்றனர் பசுமலைத்தேரி கிராம மக்கள்.

பசுமலைத்தேரி கிராம மக்கள்
பசுமலைத்தேரி கிராம மக்கள்

தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ளது பசுமலைத்தேரி கிராமம். 150 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்துக்கு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் ஊராட்சிக்குச் சொந்தமான ஓர் போர்வெல் உள்ளது. மூலவைகையில் போதிய நீர்வரத்து இல்லாததால், நிலத்தடிநீர் குறைந்து, போர்வெல்லில் தண்ணீர் இல்லை. தண்ணீர் பயன்பாடு இல்லாததால், சில மாதங்களாக போர்வெல்லை இயக்காமல் விட்டுவிட்டனர். மோட்டார் பழுதானது. தற்போது கிராமத்தில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவவே, போர்வெல்லை சரிசெய்து கொடுக்கும்படி ஊராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர் கிராம மக்கள். அதைச் சற்றும் கண்டுகொள்ளாத அதிகாரிகள், பக்கத்து கிராமத்துக்கு மட்டும் நிதி ஒதுக்கி, குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தி வந்ததாகவும், இதன் பின்னால், ஓ.பி.எஸ்-டி.டி.வி ஆதரவு நிலைப்பாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

போர்வெல் மோட்டாரை சரி செய்யும் கிராம மக்கள்
போர்வெல் மோட்டாரை சரி செய்யும் கிராம மக்கள்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பசுமலைத்தேரி கிராம மக்கள், ``கிராமத்துக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றைய அலுவலர்களை அணுகினோம். `உங்கள் கிராமத்துக்கு எதுவும் கிடையாது. ஓடிவிடுங்கள்…’ என்று சொன்னார்கள். எதற்கு எனக் கேட்டபோது, `தேர்தலில், ஓ.பி.எஸ் மகனுக்கு ஓட்டு போட்டீங்க… நாங்க டி.டி.வி ஆளுங்க…’ எனக் கூறினர். அதைக் கேட்டு அதிர்ச்சியாகிவிட்டது. ‘ஓட்டு யாருக்குப் போட்டா என்ன? கிராமத்துக்குத் தண்ணீர் வேண்டும். அதைச் செய்துகொடுக்க வேண்டியது உங்கள் கடமை’ என நாங்கள் கூறினோம். `அதெல்லாம் முடியாது… உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள்ளுங்கள்… யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல்லுங்கள்…’ என அலட்சியமாக பதில் கொடுத்தார்கள்.

இனி, அதிகாரிகளால் ஒன்றும் ஆகாது எனக் கருதி, வீட்டுக்கு இவ்வளவு என வரி போட்டு, மொத்தம் 60,000 ரூபாய் பணம் சேர்த்து, பழுதாகிக் கிடக்கும் மோட்டாரை சரி செய்து ஓட வைத்தோம். அரை மணி நேரம் ஓடியது. அதன் பின்னர் போர்வெல்லில் தண்ணீர் இல்லை. ஆழப்படுத்தினால்தான் தண்ணீர் என்ற நிலை. அதற்கு 1 லட்சம் வரை செலவாகுமாம். அவ்வளவு பணத்துக்கு நாங்கள் எங்கே போவது? அதனால், எங்கள் கிராம மக்களின் ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைக்க போனோம். விரைவில் உங்கள் கிராமத்ததுக்குத் தண்ணீர் கிடைக்கும் என்று கலெக்டர் சொன்னார். தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், போராட்டம் நடத்துவோம்” என்றனர்.

இனி, அதிகாரிகளால் ஒன்றும் ஆகாது எனக் கருதி, வீட்டுக்கு இவ்வளவு என வரிபோட்டு, மொத்தம் 60,000 ரூபாய் பணம் சேர்த்து, பாழுதாகிக் கிடக்கும் மோட்டாரை சரி செய்து ஓட வைத்தோம்.
பசுமலைத்தேரி கிராம மக்கள்
தங்கத்தின் கையில் இருந்த தேனி அ.தி.மு.க அலுவலகம்! - கைப்பற்றுவாரா ஓ.பி.எஸ்?

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் பேசியபோது, “பசுமலைத்தேரி கிராமத்துக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால்தான் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. மேலும், இதில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நிதி ஒதுக்கப்படாததே காரணம்” என்றனர். தேர்தல் முடிந்தும் தேனியில் ஓ.பி.எஸ் - டி.டி.வி.தினகரன் மோதல் இருந்துகொண்டுதான் இருக்கிறது!