Published:Updated:

``பா.ரஞ்சித் மீதான தனிப்பட்ட விமர்சனம் தவறு” - நீலம் பண்பாட்டு மையத்தின் ட்வீட்டும் எதிர்வினைகளும்

கம்யூனிஸ்ட்களை விமர்சித்து நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்ட ஒரு ட்வீட், இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தினருக்கு இடையிலான சமூக ஊடகங்களில் கருத்து மோதலாக மாறியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் என்கிற அமைப்பை செயல்படுத்திக்கொண்டிருக்கிறார். அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கம்யூனிஸ்ட்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய ஒரு பதிவு வெளியிடப்பட்டது.

``இந்தியாவில் தலித் மற்றும் பழங்குடியினருக்கும் நீதியையும் சமத்துவத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியினரால் கொண்டுவர முடியுமா? மோசமான சமூகக் கட்டமைப்பைக் கொண்ட இந்தியாவில், அம்பேத்கரியத்தால் மட்டுமே அடித்தட்டு மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர முடியும். கம்யூனிஸ்ட்கள் உயர் சாதியினருக்கானவர்கள்” என்பதுதான் அந்த ட்வீட்.

ட்விட்டர் கருத்து
ட்விட்டர் கருத்து

இப்படியொரு ட்வீட் வெளியானதைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியினர், திராவிட இயக்க ஆதரவாளர்கள், தலித் சிந்தனையாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீலம் பண்பாட்டு மையத்தின் ட்வீட்டுக்கு எதிராக சமூக ஊடகங்களில் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர்.

``இந்தியாவில் உழைக்கும் வர்க்கத்துக்காக கடந்த நூறு ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் இயக்கம் போராடிவருகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சுமார் 70 சதவிகிதம் பேர் பட்டியலினத்தவர், பழங்குடியினர், விளிம்பு நிலை மக்கள் என்கிறபோது, அவர்களுக்காக எண்ணிலடங்கா போராட்டங்கள், தடியடிகள், சிறைவாசம், உயிர் தியாகம் என மகத்தான தியாகங்களை கம்யூனிஸ்ட்கள் செய்திருக்கிறார்கள்.

இந்தியாவில் தேசிய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் தீண்டாமையை ஒழிப்பதற்கென தனியாக அமைப்புகளை வைத்து கம்யூனிஸ்ட் கட்சி போராடிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, சாதி ஒழிப்பு பற்றியும் அம்பேத்கரியம் பற்றியும் பேசுகிற இயக்குநர் பா.ரஞ்சித்தும், அவரது நீலம் பண்பாட்டு மையமும் கம்யூனிஸ்ட்களைத் தாக்குவதன் நோக்கம் என்ன? கீழ் வெண்மணி உள்பட தமிழகத்தில் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராக உறுதியுடன் களமாடிவருகிற கம்யூனிஸ்ட்களைப் பார்த்து, இவர்கள் உயர் சாதியினருக்கானவர்கள் என்று சொல்வதன் உள்நோக்கம் என்ன?” என்று பா.ரஞ்சித்தை நோக்கி சமூக ஊடகங்களில் கேள்விகள் வைக்கப்பட்டன.

முகநூல் பதிவு
முகநூல் பதிவு

மேலும், ``பா.ரஞ்சித் போன்றவர்கள் தலித் முகமூடிக்குள் புகுந்துகொண்டு திராவிட, பொதுவுடைமை, சமூகநீதியை அழிக்க இந்துத்வவாதிகளால் ஏவிவிடப்பட்ட கைக்கூலிகள்” என்று தனிப்பட்ட முறையில் பா.ரஞ்சித்தை விமர்சிக்கிற பதிவுகளும் சமூக ஊடகங்களில் வெளிப்பட்டன. அதேபோல, நீலம் பண்பாட்டு மையத்தின் ட்வீட்டை அடிப்படையாகக் கொண்டு கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான காட்டமான பதிவுகளையும் சமூக ஊடகங்களில் பார்க்க முடிந்தது.

``தலித்துகள் தங்களுக்கென தனித் தலைமையை உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காக, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் தொழிலாளர் அணியாகக் களமிறக்கப்பட்டவர்கள் தான் கம்யூனிச வியாபாரிகள்” என்பது போன்ற பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளிப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் எழுத்தாளர் அழகிய பெரியவன் பா.ரஞ்சித் தரப்பு மீதான விமர்சனங்களுடன் தன் சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு கருத்தைப் பகிர்ந்தார்.

``இந்தியாவில் ஒருவர் தலித்தாக பிறந்துவிட்டதாலேயே அவர் சாதியத்தை அடிமுதல் நுனிவரை புரிந்து கொண்டவர் என்று பொருளில்லை. இங்கு நிலவும் ஆண்டாண்டு கால அடக்குமுறையையும், சமூக இயங்கியலையும் தெளிவுபடுத்திக்கொள்ள கள அனுபவமும், வாசிப்பும் தேவை. இவற்றோடு நிலவி நீடிக்கும் சிக்கலின் பரிமாணங்களை பார்ப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறையும் அவசியம்.

முகநூல் பதிவு
முகநூல் பதிவு

இல்லையென்றால் மேம்போக்காக பேசி, அறிக்கை விட்டு, குழப்பி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாதிய சக்திகளுக்கு துணைபோக வேண்டியதுதான். கம்யூனிஸ்டுகளைப் பற்றிய நீலம் பண்பாட்டு மையத்தின் கருத்தும் இவ்வகையானதே. சாதி ஒழிப்பு என்பது ஒரு கதாநாயகன் கத்தியை எடுத்து நூறுபேரை வெட்டிச் சாய்த்து விடுவது போன்றதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது மிகவும் சிக்கலானது. சாதியத்தை வேரறுக்க தோழமை சக்திகளுடன் இணைந்த ஒத்திசைவு மிக்க கூட்டுச் செயல்களே உதவும்” என்று அழகிய பெரியவன் கூறியிருந்தார்.

எதிர்வினைகள் எழுந்ததைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த ட்வீட்டை நீலம் பண்பாட்டு மையம் நீக்கியது. இதற்கு முன்பாக கடந்த காலத்தில் பா.ரஞ்சித் பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இப்போது புதிய சர்ச்சையாக இந்த விவகாரம் கிளம்பியிருக்கிறது.

இது குறித்து நீலம் பதிப்பகத்தின் பொறுப்பாசிரியர் வாசுகி பாஸ்கரிடம் பேசினோம்.

``நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்ட அந்த ட்வீட்டில், கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் கேள்வி கேட்தாக எடுத்துக்கொண்டு சிலர் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். அந்த ட்வீட் போட்டதன் நோக்கமே வேறு. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. இந்த புதிய அமைச்சரவையில் தலித் மற்றும் பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவம் குறித்துதான் ட்வீட் வெளியிடப்பட்டது. உயர் சமூகமாகக் கருதப்படும் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு 50 சதவிகிதம் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

வாசுகி பாஸ்கர்
வாசுகி பாஸ்கர்

ஆனால், 21 சதவிகித மக்கள்தொகையைக் கொண்ட தலித் மற்றும் பழங்குடியினர் ஒருவர் அல்லது இருவர் தான் அமைச்சர் என்பது நியாயம் கிடையாது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு 50 சதவிகிதம் கொடுத்திருக்கிறார்கள் என்றால், அது இயல்பாக நடந்ததாகப் பார்க்க முடியாது. அழுத்தம் காரணமாகவே அவ்வளவு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, தலித் மற்றும் பழங்குடியினருக்கு ஏன் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதை ஜனநாயக ரீதியில் கேள்வி கேட்கிறோம்.

அந்த ட்வீட்டில் தவறான சில வார்த்தைகள் இடம்பெற்றுவிட்டன. அவை தவறானவை என்பதை ஏற்றுக்கொள்வதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. எனவேதான், உடனடியாக அந்த ட்வீட்டை நீக்கிவிட்டோம். ஆனால், எங்களை விமர்சிப்பவர்கள், அந்த ட்வீட்டில் முன்வைக்கப்பட்ட முக்கியமான கேள்விக்கு பதில் சொல்லவே இல்லை. நியாயமாக அந்த சாரம்தான் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அந்த ட்வீட்டுக்காக விமர்சிப்பதாக இருந்தால், நீலம் பண்பாட்டு மையத்தை நோக்கி விமர்சனங்களை வைக்கலாம். ஆனால், அதன் நிறுவனர் என்கிற காரணத்தால், நேரடியாக இயக்குநர் பா.ரஞ்சித்தை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள். எந்தப் பின்னணியிலிருந்து பா.ரஞ்சித் இயங்குகிறார் என்று கேள்வி எழுப்புவதும், அவரை பி.ஜே.பி இயக்குகிறதா... ஆர்.எஸ்.எஸ் இயக்குறதா... குருமூர்த்தி இயக்குகிறா என்று கேட்பதும், அவர் ஒரு என்.ஜி.ஓ என்று முத்திரை குத்துவதும் அடிப்படையற்ற விமர்சனங்களாகவும் அவதூறாகவும்தான் நாங்கள் பார்க்கிறோம். இந்துத்துவாவுக்கு எதிராக உறுதியான கருத்துகளை முன்வைத்துவரும் அவரை, இந்துத்துவவாதிகள் இயக்குகிறார்களா என்று கேட்பதெல்லாம் அவரைத் துடைத்தெறிந்துவிட வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது.

இந்தக் கேள்வி உங்கள் மனதை வேதனைப்படுத்துவதாக இருக்கிறது என்பதற்காக, எங்களை வலதுசாரி சட்டகத்துக்குள் அடைக்க முயற்சிப்பது தவறு. அப்படியென்றால், `நாங்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு அமைதியாக இருங்கள்’ என்று மறைமுகமாகச் சொல்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

ட்விட்டர் பதிவு
ட்விட்டர் பதிவு

கம்யூனிஸ்ட்களைப் பற்றி நன்றாகவே அறிந்தும் புரிந்தும் வைத்திருக்கிறோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கம்யூனிஸ்ட்கள் அளித்த பங்களிப்பு, தியாக வரலாறு குறித்து அறிந்திருக்கிறோம். எனவேதான், இடதுசாரி தலைவர்களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் அழைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம்.

கம்யூனிஸ்ட்கள் எங்களின் தோழமை சக்திகள் என்பதால்தான், உரிமையுடன் இப்படியான கேள்விகளை எழுப்புகிறோம். இந்த கேள்வியை பா.ஜ.க-விடம் எழுப்ப முடியுமா? எங்களால் யாருடன் உரையாட முடியுமோ, யாரை நட்பு சக்தியாக நினைக்கிறோமோ அவர்களிடம்தான் எங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் கேட்கிறோம். என்னுடைய சமூக விடுதலைக்காக உங்களுடன் பயணம் செய்கிறபோது, நீங்கள் எனக்கு என்ன இடம் கொடுக்கிறீர்கள் என்பதுதான் என் கேள்வி. அதைக் கேட்கக் கூடாதா?” என்றார் வாசுகி பாஸ்கர்.

இந்த சர்ச்சை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம்.

``எதிர்ப்புக்கு மதிப்பளித்து சர்ச்சைக்குரிய அந்தப் பதிவை நீலம் பண்பாட்டு மையம் நீக்கியிருப்பதை வரவேற்கிறேன். அதே நேரம், இயக்குநர் பா.ரஞ்சித் முன்வைக்கும் கருத்துகளைத் தொடர்ந்து கவனித்துவருபவன் என்கிற அடிப்படையில் சில கருத்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். பா.ரஞ்சித் போன்றவர்கள் இன்றைய காலச்சூழல் மற்றும் இன்றைய தேவைக்கு ஏற்ப கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். மத்தியில் பா.ஜ.க அதிகாரத்தில் இருக்கிறது. அந்த ஆட்சி, மனு அநீதியை மீண்டும் நிலைநாட்டப் பார்க்கிறது. மாட்டிறைச்சி விவகாரம், இடஒதுக்கீடு ஒழிப்பு என எப்படியெல்லாம் பா.ஜ.க இயங்கிவருகிறது என்பது பா.ரஞ்சித்துக்கும் தெரியும்.

``பா.ரஞ்சித் மீதான தனிப்பட்ட விமர்சனம் தவறு” - நீலம் பண்பாட்டு மையத்தின் ட்வீட்டும் எதிர்வினைகளும்

இந்தச் சூழலில், அம்பேத்கரியவாதிகள், மார்க்சியவாதிகள், பெரியாரியவாதிகள் என அனைவரும் சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் ஒன்றுபட்ட வேண்டும். ஆனால், பா.ரஞ்சித்தின் போக்கு, எல்லோரையும் விமர்சனம் செய்து தனிமைப்படுவது மாதிரியாகவே இருக்கிறது. மூன்று இயக்கங்களுக்கு இடையே ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், வேறுபாடுகளை வளர்ப்பதைப் போல பதிவுபோடுவது தவறு.

விமர்சனங்களையும் கருத்து வித்தியாசங்களையும் சொல்லவே கூடாது என்று நான் சொல்லவில்லை. அதன் நோக்கம் இந்த மூன்று இயக்கங்களுக்கு இடையே ஒற்றுமையை பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். மாறாக அம்பேத்கரியமே உயர்ந்தது, கம்யூனிசம் காலாவதியானது, பெரியாரியம் சரியில்லை என்பது மாதிரியெல்லாம் பேச்சுகள் வருகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் இத்தகைய பார்வை கிடையாது. இந்த மூன்று சித்தாந்தவாதிகளும் இணைந்து செயல்படுவதையே அவர் வலியுறுத்துகிறார். இதற்கு முன்பாக தலித்துகள் தனியாக தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பா.ரஞ்சித் பேசினார். அந்தக் கருத்தை ஏற்க முடியாது என்று திருமாவளவன் பதில் கொடுத்தார்.

இந்த மூன்று இயக்கத்தவரும் கொள்கை ரீதியாக மனுவாதிகளை எதிர்த்து, சங் பரிவாரத்தை எதிர்த்து, ஆணாதிக்கத்தை எதிர்த்து, சாதியவாதத்தை எதிர்த்து, மூடநம்பிக்கைளை எதிர்த்து களத்தில் நிற்க வேண்டும் என்கிற பார்வை பா.ரஞ்சித்துக்கு இருப்பது போலத் தெரியவில்லை. நாங்கள் அதை வலியுறுத்துகிறோம். நீலம் பண்பாட்டு இயக்கம் ட்விட்டரில் வெளியிட்ட கருத்தும், அதை ஆதரித்து சமூக ஊடகங்களில் சிலர் வெளியிட்ட கருத்துகளும் ஒற்றுமைக்கு பதிலாக வேறுபாடுகளை வளர்ப்பதுபோல இருக்கின்றன. பொது எதிரியை விழ்த்த ஒருங்கிணைந்த சிந்தனை வேண்டும் என்று பா.ரஞ்சித் சொல்லட்டும்.

முகநூல் பதிவு
முகநூல் பதிவு

அரசியலில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை எங்கள் கட்சி வலியுறுத்துகிறது. ஆனால், திடீரென ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. அதே நேரத்தில், இந்தப் பிரதிநிதித்துவம் போதாது என்று சொல்கிற உரிமை அவர்களுக்கு உண்டு.

லட்சத்தீவு மக்கள் கொந்தளிப்பு: காரணமாக இருக்கும் பிரபுல் கோடா படேல் - யார் இவர்?

எண்ணிக்கையைப் பார்ப்பதைவிட, கம்யூனிஸ்ட்களின் பார்வையும் செயல்பாடுகளையும் நண்பர்கள் பார்க்க வேண்டும். தீண்டாமைக்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் தலித் உள்ளிட்டவர்கள் ஆகம கோவில்களில் அர்ச்சகர் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். கேரளாவில் பெரிய அளவுக்கு தீண்டாமையைக் கட்டுப்படுத்திவிட்டார்கள்.

பினராயி விஜயனுக்கு திருமாவளவன் பாராட்டு
பினராயி விஜயனுக்கு திருமாவளவன் பாராட்டு

இப்போது அமைக்கப்பட்டுள்ள இடது முன்னணி அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலினத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் இருக்கிறார். எண்ணிக்கையைவிட எத்தகைய பொறுப்பு தரப்படுகிறது, அதன் அர்த்தம் என்ன, ஒட்டுமொத்தமாக பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியினர் பற்றிய அந்த அரசின் பார்வை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்” என்றார் அருணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு