பிரீமியம் ஸ்டோரி

‘தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு வைபவம் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நடத்தப்பட வேண்டும்’ என உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜனவரி 31-ம் தேதி தீர்ப்பு வழங்கியதை, தமிழ் உணர்வாளர்கள் வரவேற்றுள்ளனர். ‘‘இது முதற்கட்ட வெற்றி. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய கோயில் கருவறைக்குள்ளும் கோபுரக்கலசத்தின் அருகிலும் தமிழ் மந்திரங்கள் ஒலிக்கவிருக்கின்றன’’ என்று தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார். அதேசமயம், ‘‘1997-ம் ஆண்டில் எந்த மொழியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது? அன்றைக்கெல்லாம் வாய் மூடி இருந்தவர்கள், இப்போது ஏன் பேசுகிறார்கள்?’’ என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ‘‘சம்ஸ்கிருதத்தில் மந்திரம் ஓதப்படுவதைத்தான் மக்கள் விரும்புகின்றனர். இங்கு இருக்கும் சில அமைப்புகள்தான் தேவையில்லாமல் பிரச்னைகளைக் கிளப்புகின்றன’’ என்று தொடர்ச்சியாக கருத்து தெரிவித்துவருகிறார்கள். உண்மையில், தமிழில் மந்திரம் ஓதுவதை மக்கள் விரும்புகிறார்களா அல்லது சம்ஸ்கிருதத்தில் மந்திரம் ஓதுவதை விரும்புகிறார்களா?

‘தமிழில் வேண்டும் வழிபாடு’

இதுகுறித்து, 1998-ம் ஆண்டில் மக்களிடம் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. அதில், பெருவாரியான மக்களின் ஆதரவு தமிழில் மந்திரம் ஓதுவதற்கே இருந்திருக்கிறது. அந்த வாக்கெடுப்பை நடத்தியது, தமிழர் தேசிய இயக்கம். அதன் தலைவராக பழ.நெடுமாறன் இருந்துள்ளார். அவரின் ஒருங்கிணைப்பில் தமிழகத்தின் மிக முக்கியமான கோயில்களில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அப்போது 94.63 சதவிகிதம் மக்கள், தமிழில் மந்திரம் ஓதப்படுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அந்த வாக்கெடுப்பின் முழுவிவரம் பற்றி அறிய, பழ.நெடுமாறனைச் சந்தித்துப் பேசினோம்.

‘‘இப்போது தஞ்சை பெரிய கோயிலில் ஏற்பட்டதைப்போல் அப்போதும் ‘கோயில்களில் தமிழில் மந்திரம் ஓதுவதா, சம்ஸ்கிருதத்தில் ஓதுவதா?’ என்ற சர்ச்சை எழுந்தது. அப்போது, பா.ஜ.க, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள், ‘மக்கள், சம்ஸ்கிருதத்தில் மந்திரம் ஓதுவதைத்தான் விரும்புகிறார்கள்’ என கருத்து தெரிவித்திருந்தன. அவர்களின் கருத்தை சவாலாக ஏற்றுக்கொண்டு, மக்களிடமே கருத்துக்கணிப்பை நடத்தலாம் என முடிவெடுத்தோம்.

‘தமிழில் வேண்டும் வழிபாடு’

அதன்படி, 27.11.98 வெள்ளிக்கிழமை அன்று தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், சென்னை வடபழநி முருகன் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான பத்து கோயில்களில், பக்தர்கள் கோயிலுக்கு அதிகமாக வரும் நேரமான காலை 6 மணி முதல் 9 மணி வரை வாக்கெடுப்பு நடத்தி னோம். வாக்குச்சீட்டை அச்சடித்து மக்களிடம் கொடுத்தோம். இதுதான் வாக்குச்சீட்டு’’ என்று ஒரு பேப்பரைக் காட்டுகிறார். அதில் வாக்குச் செலுத்துவது தொடர்பான விவரங்கள் இருந்தன.

தொடர்ந்து பேசியவர், ‘‘கோயிலுக்கு வெளியே வாக்குப்பெட்டியை வைத்திருந்தோம். பத்து கோயில்களிலும் சேர்த்து மொத்தம் 18,700 மக்கள் வாக்களித்திருந்தனர். அவர்களிடம் வாக்கெடுப்பு குறித்து எந்தவிதமான பிரசாரத்தையும் செய்யவில்லை. தமிழுக்கு ஆதரவாக 17,695 பேரும், சம்ஸ்கிருதத்துக்கு ஆதரவாக 823 பேரும், இரு மொழிகளிலும் இருக்கலாம் என 182 பேரும் வாக்களித்திருந்தனர். அதன்படி, 94.63 சதவிகிதம் பேர் தமிழுக்கு ஆதரவாக வும், 4.4 சதவிகிதம் பேர் சம்ஸ்கிருதத்துக்கு ஆதரவாகவும், 0.97 சதவிகிதம் பேர் இரு மொழிகளுக்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த வாக்கெடுப்பு தொடர்பான விவரங்களை அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகனுக்கும் கடிதமாக அனுப்பி, தமிழில் மட்டுமே வழிபாடு செய்ய ஆணை பிறப்பிக்கும்படி வேண்டிக் கொண்டோம். மக்கள், சம்ஸ்கிருதத்தில் வழிபாடு செய்யவே விரும்புகிறார்கள் என்பது பொய். மக்களின் விருப்பம் என்ன என்பது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது’’ என்றவரிடம்,

‘‘தற்போது நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’ என்று கேட்டோம்.

பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

‘‘ஆகம விதிப்படிதான் தமிழக கோயில்கள் கட்டப்பட்டிருக் கின்றன. குடமுழுக்கு, வழிபாடு, அர்ச்சனை ஆகியவை எப்படிச் செய்யவேண்டும் என்பது சைவ, வைணவ ஆகமங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சம்ஸ்கிருதம் என்பது, ஸ்மார்த்தர்களின் தீ வேள்வி வழிபாட்டு மொழி. தீ மூட்டி வேள்வி செய்யும்போது மட்டும்தான் அந்த மொழியில் மந்திரம் சொல்ல வேண்டும். அவர்களுக்கு விக்கிரக வழிபாடு கிடையாது. அப்படியிருக்க, அந்த மொழியை விக்கிரக வழிபாட்டுக்கான அர்ச்சனை மொழியாக, வழிபாட்டு மொழியாக, குடமுழுக்க மொழியாகப் பயன்படுத்துவது தவறு. அடிப்படையான இந்த உண்மையை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்பதை நான் வருத்தத்தோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மக்களுக்குத் தெரிந்த மொழியில் மட்டும்தான் வழிபட நடத்த வேண்டுமே தவிர, மக்களுக்குத் தெரியாத மொழியில் வழிபாடு நடத்தப்படக் கூடாது. 2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 25,000 பேர் மட்டுமே சம்ஸ்கிருதம் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள். அதிலும் தமிழகத்தில், சில நூறு பேர்தான் என்று தெரியவந்திருக்கிறது. பெரும்பான்மையான ஏழு கோடி மக்களின் மொழியாக தமிழ்தான் இருக்கிறது.

தமிழ் மன்னர்களால், தமிழ்ச் சிற்பிகளால் கட்டப்பட்ட கோயில் களில் தமிழ் புறக்கணிக்கப்படுவது, மண்ணின் மைந்தர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பது மற்றும் மனித உரிமை மீறல். அதனால், `தமிழக கோயில்களில் தமிழ் மொழியில் மட்டும்தான் வழிபாடு நடத்தப்பட வேண்டும்’ என்று தமிழக அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும்’’ என்றார் பழ.நெடுமாறன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு