Published:Updated:

“அவதூறு கிளப்புகிறார்கள்!”

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மாநிலத் தலைவர் பேட்டி

பிரீமியம் ஸ்டோரி

‘குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்புப் போராட்டங்களுக்காக, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா என்கிற அமைப்பு 120 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்துள்ளது’ என்று பா.ஜ.க கூறும் குற்றச்சாட்டை, அந்த அமைப்பு மறுத்துள்ளது. இந்த நிலையில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழகத் தலைவர் முகமது இஸ்மாயிலைச் சந்தித்தோம்.

“பா.ஜ.க மட்டுமன்றி, கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளும் உங்கள் அமைப்புமீது புகார் எழுப்பினார்களே?’’

“கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளுடன் புரிந்துணர்வு இல்லாமல்போனது தவறுதான். அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்த நாங்கள் முயல்கிறோம். தலைவர்களுடன் பேசிவருகிறோம்.’’

“குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்புப் போராட்டத்துக்காக உங்கள் அமைப்புமூலம் 120 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக பா.ஜ.க குற்றம்சாட்டுவது பற்றி?”

“இது அவதூறு, ஆதாரமற்றது. எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக பல போராட்டங் களை நடத்திவருகின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்பும் இதேபோல் அவதூறு சுமத்தினார்கள். நாங்கள் பிரஸ் கவுன்சிலுக்குக் கொண்டுசென்ற பிறகு எங்களிடம் வருத்தம் தெரிவித்து, அவர்களுடைய செய்தித்தளத்தில் இருந்த ஆதாரமற்ற செய்திகளை அழித்தார்கள். அதுபோல்தான் இதுவும்!”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“வழக்கறிஞர் கபில் சிபலுக்கு 77 லட்சம் ரூபாய் பணப்பரிமாற்றம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?’’

“ஹாதியா வழக்கில் எங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான கபில் சிபலுக்கு அவருக்கான கட்டணத்தை வங்கிமூலம் அனுப்பினோம். இது வெளிப்படையானது.”

முகமது இஸ்மாயில்
முகமது இஸ்மாயில்

“காஷ்மீர் மாநிலத்துக்கு பணப்பரிவர்த்தனை செய்ததாகவும் புகார் எழுப்பப்படுகிறதே?’’

“காஷ்மீரில் எங்களுக்கு கிளைகள் இல்லை. 2014-ம் ஆண்டில் அங்கு இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க 1.25 கோடி செலவு செய்தோம். அதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. அதையெல்லாம் திரித்து வெளியிடுகிறார்கள்.”

“உங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி வருவதாகச் சொல்லப்படுகிறதே?’’

“எங்களுக்கு வெளிநாடுகளில் கிளைகள் இல்லை. அங்கிருந்து நிதியும் பெறுவதில்லை. எங்கள் அமைப்பு உறுப்பினர்களிடம் சந்தா வசூல் செய்கிறோம். ஆண்டுக்கு ஒருமுறை, பள்ளிவாசலுக்கு வரும் மக்களிடம் நிதி வசூல் செய்வோம். நாங்கள் முறைகேடாக பணம் பெற்றால் அரசு சும்மா இருக்குமா, நடவடிக்கை எடுத்திருக்குமே! ஒவ்வோர் ஆண்டும் எங்கள் அமைப்பின் வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்படுகின்றன.’’

“உங்கள் அமைப்பினர் தடைசெய்யப்பட்ட இயக்கங்களில் செயல்படுவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு பற்றி?’’

“சிமியில் இருந்தவர்கள் எங்கள் அமைப்பில் இருப்பதாகச் சொல்வார்கள். சிமி அமைப்பு இருக்கும் போதே எங்கள் அமைப்பு தொடங்கப்பட்டுவிட்டது. ஆரம்பத்தில் சிமி அமைப்பில் இருந்தவர்கள் எங்கள் அமைப்பில் இருந்திருக்கலாம்.எங்கள் அமைப்பு ஜனநாயகரீதியாகச் செயல்படும் அமைப்பு. தேர்தலில் போட்டியிட மாட்டோம். மக்களுக்கு எதிரான விஷயங்களுக்காகப் போராடுவோம். எங்கள் போராட்டங்களை ஒடுக்கவே இப்படி குற்றம்சாட்டுகிறார்கள்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு