Published:Updated:

தொடங்கியது டெல்லி... தொடர்கிறது சென்னை!

குடியுரிமை போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
குடியுரிமை போராட்டம்

இது இன்றைக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அல்ல.

தொடங்கியது டெல்லி... தொடர்கிறது சென்னை!

இது இன்றைக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அல்ல.

Published:Updated:
குடியுரிமை போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
குடியுரிமை போராட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் பெண்களால் பற்றவைக்கப்பட்ட போராட்டத் தீ, தமிழகம் முழுவதும் பற்றிப்பரவி அனலாகத் தகித்துக்கொண்டிருக்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன்பாக் என்ற பகுதியில் இரண்டு மாதங்களைத் தாண்டி இடைவிடாது நடக்கும் போராட்டம் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அதேபோன்ற ஒரு தொடர்போராட்டத்தை சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கிய பெண்கள் அதற்கு ‘சென்னையின் ஷாகீன்பாஃக்’ என்று பெயரிட்டுள்ளனர். பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என்று பலரும் பங்கேற்கும்வகையில் மாறியுள்ள இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் முற்போக்கு இயக்கங்களும் தங்கள் ஆதரவை அளித்துள்ளனர்.

போராட்டம்
போராட்டம்

கடந்த 14-ம் தேதி காவல்துறையினர் போராட்டக் காரர்கள்மீது தடியடி நடத்தியதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் ‘ஷாகீன் பாஃக்’ ஆக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டத்தின் பின்னணியில் தி.மு.க இருக்கிறது என்று குற்றம்சாட்டி யிருக்கிறார் பா.ஜ.க தலைவர் இல.கணேசன். சில சக்திகளின் தூண்டுதல் என்று சட்டசபையில் விளக்கம் தந்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி. களநிலவரத்தை அறிய சென்னை வண்ணாரப்பேட்டைக்கு நேரில் சென்றேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போராட்டபூமியாக மாறியிருக்கும் வண்ணாரப் பேட்டை லாலாகுண்டா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையை ‘சென்னையின் ஷாகீன் பாஃக்’ என்ற பதாகை அலங்கரித்துள்ளது. மேடையில் நின்றுகொண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் மட்டுமல்லாமல், மழலைகளும்கூட ‘ஆதார் கார்டு இருக்கு... என்.ஆர்.சி எதுக்கு...’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று நரம்புகள் புடைக்க முழக்கமிடுகிறார்கள். அவர்கள் எழுப்பும் முழக்கங்களை, அங்கு நூற்றுக்கணக்கில் திரண்டிருக்கும் பெண்கள் எதிரொலிக்கிறார்கள்.

பெரும்பாலும் இஸ்லாமியப் பெண்களே திரண்டிருக்கும் அந்தப் போராட்டத்தில், அம்பேத்கரையும் பெரியாரையும் முன்னிறுத்தித் தொடர்முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. “மோடியே அமித்ஷாவே… ‘போ’ன்னு சொன்னா போவதற்கு, நாங்கள் என்ன சாவர்க்கரா... நாங்கள் எல்லாம் பெரியாரே… நாங்கள் எல்லாம் அம்பேத்கரே... நாங்கள் எல்லாம் திப்புசுல்தானே, ‘இந்து - முஸ்லிம் சமூக மக்கள்… நாங்கள் எல்லாம் சகோதரர்கள்’ எச்சரிக்கை எச்சரிக்கை... இது அம்பேத்கரின் கூட்டம் எச்சரிக்கை’’ என்று நரம்புகள் புடைக்க கோஷமிடுகிறார்கள் இஸ்லாமியப் பெண்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளால் பல்வேறு அமைப்புகளாலும் நடத்தப்பட்டுவந்த போராட்டம், பிப்ரவரி 14-ம் தேதியிலிருந்து தன்னெழுச்சிப் போராட்டமாக மாறியிருக்கிறது. பிப்ரவரி 14-ம் தேதி என்ன நடந்தது என்று அங்கு போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களிடம் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இது இன்றைக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அல்ல. குடியுரிமைத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டபோதே, தினமும் ஒரு மணி நேரம் என இந்தப் போராட்டத்தைப் பெண்கள் ஆரம்பித்தனர். ஒவ்வொரு நாளும் 50 பெண்கள், 60 பெண்கள் எனப் போராட்டம் நடத்திவந்தனர். எங்கள் குடியிருப்புப் பகுதிக்குள்தான் இந்தப் போராட்டம் அமைதியாக நடக்கிறது. போராடும் பெண்களுக்கு ஆதரவாக ஆண்கள் இருக்கிறோம். பிப்ரவரி 14-ம் தேதி மதியம் 2 மணியளவில் போராட்டம் நடந்த இடத்தில் இருந்த ஆண்களை போலீஸார் கைதுசெய்ய ஆரம்பித்தனர். பிறகு, வண்ணாரப்பேட்டை ஜமாத்தில் உள்ள முக்கியஸ்தர்களைக் குறிவைத்து போலீஸார் தாக்கினர். அதனால் கோபமடைந்த பெண்கள், ‘ஏன் அவர்களை அடிக்கிறீர்கள்’ என்று வாக்குவாதம் செய்தனர். சற்று நேரத்தில் இங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்களை வேறுபக்கம் திருப்பிவிட்டு, சந்துகளுக்குள் புகுந்து பெண்களை போலீஸ்காரர்கள் தாக்க ஆரம்பித்தனர். பெண்களிடம் போலீஸார் அத்துமீறவும் செய்தார்கள். ஜாமர் கருவியை வைத்துவிட்டதால் செல்போன்கள் வேலை செய்யவில்லை. போலீஸார் செய்தது மிகப்பெரிய அராஜகம்” என்று குமுறினர்.

தொடங்கியது டெல்லி... தொடர்கிறது சென்னை!
தொடங்கியது டெல்லி... தொடர்கிறது சென்னை!

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் சிலரிடம் பேசியபோது, “சோறு தண்ணி இல்லையென்றால்கூட பட்டினியாகக் கிடப்போம். ஆனால், இங்கு நாங்கள் குடியிருக்கவே முடியாது என்ற நிலை வந்தால் என்ன செய்வது? அஸ்ஸாமில் என்.ஆர்.சி என்ற பெயரில் என்னவெல்லாம் நடந்தது என்பதைப் பார்த்தோம். டெல்லி ஷாகீன் பாஃக்கில் பெண்கள் நடத்திவரும் போராட்டம் எங்களுக்குப் பெரும் ஊக்கத்தைக் கொடுத்தது. அதனால்தான், எங்கள் வீட்டு ஆண்களைக்கூட எதிர்பார்க்காமல் பெண்களாகச் சேர்ந்து போராட்டத்தை ஆரம்பித்தோம்’’ என்றனர்.

வண்ணாரப்பேட்டையில் நாம் கண்ட காட்சிகள், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவூட்டுவதாக இருந்தன. NO CAA, NO NRC, NO NPR என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீ ஷர்ட் அணிந்த இளைஞர்கள் போக்குவரத்தையும், மக்கள் நடமாட்டத்தையும் ஒழுங்குபடுத்துகிறார்கள். போராட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் தண்ணீர் பாட்டில்களும் உணவுப்பொட்டலங்களும் குளிர்பானங்களும் அவ்வப்போது விநியோகிக்கப் படுகின்றன. எந்தப் பக்கம் திரும்பினாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான சுவரொட்டிகள் காட்சியளிக்கின்றன. சிறுவர், சிறுமியர் தங்கள் கன்னங்களிலும், பெண்கள் தங்கள் கைகளிலும் NO CAA NO NRC என்று மெஹந்தி வரைந்திருக்கிறார்கள். அதே வளைக்கரங்களில் தேசியக்கொடிகளும் அசைந்து கொண்டிருக்கின்றன. போராட்ட மேடையில் ஒரு திருமணமும் அரங்கேறியது.

“சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி ஆகியவை இந்தியக் குடிமக்களின் குடியுரிமையை சந்தேகத்துக்குரிய ஒன்றாக ஆக்கக்கூடியவை. முஸ்லிம்களை மட்டுமல்லாமல், இந்திய மக்கள் அனைவரைக்கும் இது பாதிப்பை உண்டாக்கும். ஷாகீன்பாஃக் பாணியிலான போராட்டங்கள் நாட்டில் 167 இடங்களில் நடைபெற்றுவருகின்றன. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் ஜனவரி 30-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மனிதச்சங்கிலி இயக்கத்தில் வரலாறு காணாத அளவுக்கு 40 லட்சம் மக்கள் பங்கேற்றனர். சி.ஏ.ஏ-வுக்கு எதிராகவும், என்.பி.ஆரைத் தமிழகத்தில் நடத்த மாட்டோம் என்றும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது. முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஜனவரி 10-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.

இந்நிலையில்தான், வண்ணாரப்பேட்டையில் பெண்கள் முன்னெடுக்கும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. தொடர் போராட்டத்தை அனுமதித்தால் மத்திய பா.ஜ.க அரசுக்கு பதில் சொல்லவேண்டுமே என்ற எண்ணத்தில் காவல்துறை மூலம் தமிழக அரசு தாக்குதல் நடத்தியிருக்கிறது. தாக்குதலுக்குப் பின்பே தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. சி.ஏ.ஏ-வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் படும்வரை, என்.பி.ஆரை நடத்தமாட்டோம் என்ற நிலைப்பாட்டைத் தமிழக அரசு எடுக்கும்வரை இந்தப் போராட்டம் தொடரும்” என்றனர்.

தி.மு.க மகளிரணித் துணைத்தலைவர் சல்மா, “அனைத்து மதத்தினரும் இப்போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா, சுபா முட்கல் உட்பட பலர் அங்கு சென்று போராட்டத்துக்கு ஆதரவாகப் பாடல்கள் பாடியுள்ளனர். பல எழுத்தாளர்கள் கவிதை வாசித்துள்ளனர். சி.ஏ.ஏ வாபஸ்பெறப்படும்வரை இந்தப் போராட்ட அலை ஓயாது” என்றார் உறுதிப்பட.

தொடங்கியது டெல்லி... தொடர்கிறது சென்னை!

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசியபோது, “இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்தனர். என்.பி.ஆர் எனப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் ஆறு அம்சங்கள் தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதாகத் தெரிவித்தனர். அந்த ஆறு அம்சங்கள் நீக்கப்பட வேண்டும் என்று கோரினர். அவர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வேன். இஸ்லாமியர் களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நிலை தமிழகத்தில் ஒருபோதும் ஏற்படாது” என்றார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் சட்டமன்றத் தேர்தலையும் தமிழகம் எதிர்நோக்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ‘ஷாகீன் பாஃக் போராட்டம்’ பரவுவதால், இப்பிரச்னையை எப்படிக் கையாளுவது என்று எடப்பாடி பழனிசாமி அரசு தீவிரமாக யோசித்துவருகிறது. இப்போராட்டத்தைக் கண்காணிக்க ஆறு சிறப்பு அதிகாரிகளைத் தமிழக அரசு நியமித்துள்ளது. சி.ஏ.ஏ-வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம், தமிழகத்தில் என்.பி.ஆரை நடத்தமாட்டோம் என்ற அறிவிப்பு என்கிற கோரிக்கைகளை எதிர்கொள்வது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மிகப்பெரிய சவால்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism