Published:Updated:

“தேவை சி.ஏ.ஏ-வுக்கு எதிராக சட்டமன்றத் தீர்மானம்!”

தெறிக்கும் கோஷம்... நெரிக்கும் போலீஸ்

பிரீமியம் ஸ்டோரி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க மக்களைக் கிளர்ந்தெழச் செய்தவர், விஜயேந்திர பிதாரி. அலங்காநல்லூரில் போராடியவர்கள்மீது மதுரை எஸ்.பி-யான விஜயேந்திர பிதாரி மேற்கொண்ட அடக்குமுறைகளையடுத்து இளைஞர்கள் பெருந்திரளாக குவிய... மெரினா புரட்சி வெடித்தது. இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான வண்ணாரப்பேட்டை போராட்டக் காட்சிகள் அதையே நினைவுபடுத்துகின்றன.

போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய தள்ளுமுள்ளு, தடியடி
போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய தள்ளுமுள்ளு, தடியடி

ஜனவரி 19-ம் தேதி வண்ணாரப் பேட்டை டி.பி.கே தெருவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரவு 10 மணிக்கு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர், மைக்செட் சுவிட்ச்சை அதிரடியாக ஆஃப் செய்தார். அங்கு இருந்த இளைஞர்கள் உடனே கொந்தளித்து கோஷமிட்டனர். ‘‘10 மணி ஆகிவிட்டது. இரண்டு நிமிடங்களில் முடிக்க வேண்டும் எனச் சொல்லியிருந்தால் கூட்டத்தை முடித்திருப்போம். போலீஸாரின் செயல் கண்டிக்கத்தக்கது. இதை உயர் அதிகாரிகளின் கவனத் துக்குக் கொண்டுசென்று நிவாரணம் தேடுவோம்’’ என்று பேசி முடித்தார் தெஹ்லான் பாகவி. அன்றிலிருந்தே வண்ணாரப்பேட்டையில் டென்ஷன் தான்!

பழைய மற்றும் புது வண்ணாரப் பேட்டையைச் சுற்றிலும் 14 மசூதிகள் இருக்கின்றன. அந்தப் பகுதி முஸ்லிம் ஜமாத்துகள் டிசம்பர் 19-ம் தேதி கூடி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை ‘வண்ணாரப் பேட்டை அனைத்து ஜமாத் கூட்டமைப்பு’ என்ற பெயரில் கூட்டாக நடத்த முடிவு செய்திருந்தனர். டிசம்பர் 27-ம் தேதி சிமென்ட் ரோடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன் பிறகு வாரம் ஒரு போராட்டம் நடைபெற்றுள்ளது. அதில் ஒரு கண்டனப் பொதுக் கூட்டத்தில்தான் ‘மைக் ஆஃப்’ சம்பவம் நிகழ்ந்தது.

போராட்டக் காட்சிகள்
போராட்டக் காட்சிகள்

அதையடுத்து, ஜனவரி 25-ம் தேதி கண்ணன் தெரு ரவுண்டானாவைச் சுற்றி அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தியது ஜமாத் கூட்டமைப்பு. இணை கமிஷனர் கபில்குமார் சரத்கர், துணை கமிஷனர் சுப்புலட்சுமி ஆகியோர் போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘போராட்டத்தைத் திரும்பப்பெற்றால், வேறு ஒரு தேதியையும் இடத்தையும் தருகிறோம்’ என்று போலீஸார் வாக்குறுதி கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு 72 மணி நேரப் போராட்டத்துக்கான தேதி கேட்டுப் போன நிர்வாகிகளிடம், ‘அப்படி எந்த ஒரு வாக்குறுதியும் நாங்கள் தரவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள். அதன் பிறகே வீடுகளில் கறுப்புக்கொடி, தொகுதி எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான ஜெயக்குமார் அலுவலகம் முற்றுகை எனப் போராட்டங்கள் தொடர்ந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிப்ரவரி 14 அன்று காவல்துறைக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளு, தடியடி, கைதுகள் எல்லாம் தமிழகம் முழுவதும் போராட்டத்தைப் பற்றவைத்தன. ‘கபில்குமார் சரத்கர் நிலைமையைத் தவறாகக் கையாண்டதாலேயே அங்கு வன்முறை வெடித்தது’ என்று கனிமொழி சொன்னதன் பின்னணியும் இதுதான்.

தா.பாண்டியன், நல்லகண்ணு, தயாநிதி மாறன், மன்சூர் அலிகான், சீமான் எனப் பலரும் வண்ணாரப் பேட்டைக்குப் படையெடுத்தனர். புதுகை பூபாளம் கலைக்குழு உட்பட பல குழுவினர் வந்து சி.ஏ.ஏ-வுக்கு எதிரான கருத்து களைப் பாடினர். மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி வந்து ஆதரவு தெரிவித்தார். மோடி, அமித் ஷா, இ.பி.எஸ், ஓ.பி.எஸ், ஜெயக்குமார், ரஜினி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் போராட்டத்தில் வறுபட்டனர்.

‘இது பெரியார் மண்ணுடா... இந்து-முஸ்லிம் நாங்க ஒண்ணுடா’ என்றெல்லாம் கோஷங்கள் ஒலித்தன. தேசியக்கொடி தவிர வேறு கொடிகளோ பிரிவினை தொடர்பான கோஷங்களோ இல்லை. டெல்லி ஜெ.என்.யூ-வில் எதிரொலித்த ‘ஆசாதி’ (விடுதலை) கோஷம், வண்ணாரப்பேட்டையிலும் அதிர்ந்தது.

‘முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்றால், முதலில் நான் வந்து நிற்பேன்’ என்று சில தினங்களுக்கு முன்பு ரஜினி பேசிய விஷயமும் போராட்டத்தில் எதிரொலித்தது. ‘‘ரஜினி பேட்ட... உடனே வாங்க வண்ணாரப்பேட்ட’’ என முழங்கினார்கள்.

விடிய விடிய போராட்டம் நடந்ததால் உணவு, வாட்டர் பாட்டில், பிஸ்கட் என வந்துகொண்டே இருந்தன. உணவு ஏற்பாடு, போக்குவரத்து ஒழுங்கு, பாதுகாப்பு ஏற்பாடு, குப்பைகள் அகற்றுவது எனத் தனித்தனி டீம்கள் இயங்கின. சட்டமன்றத் தொடர் தொடங்கியிருக்கும் நிலையில், ‘சட்டமன்றத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையைவைத்து போராட்டத்தைத் தொடர முடிவுசெய்ததால்... டெல்லி ஷாகின் பாக் போல் தொடர் போராட்டமாக மாறிவிடக் கூடாது என்ற அச்சம் ஆளுங்கட்சி தரப்பில் ஏற்பட்டது.

போலீஸ் தரப்பிலோ, “போராட்டங்கள் நடத்த சென்னை போலீஸ் கமிஷனர் தடைவிதித்த அடுத்த நாளில், வண்ணாரப்பேட்டையில் தடையை மீறி போராட்டம் நடத்துகிறார்கள். போராட்ட இடத்தைவிட்டு முன்னேறியதால் அவர்களைத் தடுத்து நிறுத்தினோம். நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துவருகிறோம். எந்தச் சூழலிலும் அமைதியைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்கள்.

உறுதியாக இருக்கின்றன அரசுகள்... உணர்வுடன் தொடர்கிறது போராட்டம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு