Published:Updated:

“தலையை வெட்டி வாசல்ல வெச்சிடுவோம்!”

“தலையை வெட்டி வாசல்ல வெச்சிடுவோம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தலையை வெட்டி வாசல்ல வெச்சிடுவோம்!”

வழக்கு தொடர்ந்தவரை மிரட்டியதா புதிய தமிழகம்?

‘பண்ணாடி, குடும்பன், கடையன், காலாடி, மூப்பன், பள்ளன் ஆகிய ஆறு சமூகப் பிரிவுகளை இணைத்து ‘தேவேந்திர குல வேளாளர்’ என்று பெயர் மாற்றம் செய்து, அந்தப் பிரிவுகளைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து (எஸ்.சி), பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு (பி.சி) மாற்ற வேண்டும்’ என்று ‘புதிய தமிழகம் கட்சி’ பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதைப் பரிசீலிப்பதற்காக தமிழக அரசு 2019, மார்ச் மாதம் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
தன் மகனுடன் கிருஷ்ணசாமி
தன் மகனுடன் கிருஷ்ணசாமி

‘அந்தக் குழுவை அமைத்தது தவறு’ என்று திருச்சி, லால்குடியைச் சேர்ந்த அமர்நாத் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். இதையடுத்து, புதிய தமிழகம் கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள், அமர்நாத்தின் குடும்பத்துக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அவரது வீட்டுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமர்நாத்திடம் பேசினோம். “அக்டோபர் 7-ம் தேதி, திடீர்னு மூணு பேர் என் வீட்டுக்குள்ள வந்து, ‘நீதான் தலைவரை எதிர்த்து கேஸ் போட்டியா?’னு மிரட்டினாங்க. நான் பயந்துபோய், ‘கேஸெல்லாம் எதுவும் போடலைங்க’னு சொன்னேன். அதுக்கு, “அப்போ தலைவர்கிட்ட பேசி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துட்டு போடா’னு திட்டினாங்க. மறுநாள் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஐயப்பன், அவரது கட்சியைச் சேர்ந்த சிவசங்கர், பாலு, தினகரன், அரசகுமார் ஆகியோர் நான் வீட்டுல இல்லாத நேரத்துல வந்து, எங்க அப்பாகிட்ட, ‘உன் மவனை கேஸை வாபஸ் வாங்கச் சொல்லு... இல்லைன்னா அவன் தலையை வெட்டி உன் வீட்டு வாசல்லவெச்சுடுவோம்’னு மிரட்டிட்டுப் போயிருக்காங்க.

அதுமட்டுமில்லாம, நான் இந்த இனத்துக்கு துரோகம் செய்யறேன்னு சொல்லி, கண்ணீர் அஞ்சலி போஸ்டரை சமூக ஊடகங்கள்ல பரப்புறாங்க. எனக்காக இந்த வழக்கை நடத்தும் வழக்கறிஞர் அஜ்மல் கானையும் அவங்க மிரட்டினதால, அவரும் வழக்கிலிருந்து விலகிட்டார். இப்போ இன்னொரு வழக்கறிஞரை ஏற்பாடு செஞ்சிருக்கேன். இப்போ அவரையும் மிரட்டுறாங்க. டாக்டர் கிருஷ்ணசாமி இட ஒதுக்கீட்டில்தான் மருத்துவராகி, தன் மகனையும் மகளையும் மருத்துவர்கள் ஆக்கியிருக்காரு. பட்டியல் சமூகத்தில் இருந்தாத்தான் இப்படிப் பல சலுகைகள் கிடைக்கும். பி.சி பிரிவுக்கு மாறினா சலுகைகள் கிடைக்காது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டா, அதுக்குக் காரணம் கிருஷ்ணசாமிதான். எந்தப் பிரச்னை வந்தாலும் இந்த வழக்கை வாபஸ் வாங்க மாட்டேன்” என்றார் ஆவேசமாக.

ஐயப்பன் - அஜ்மல் கான்
ஐயப்பன் - அஜ்மல் கான்

புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஐயப்பனிடம் பேசினோம். “அமர்நாத் தாக்கல் செய்த வழக்கில், எங்க சமுதாய மக்களை இழிவுபடுத்தி, மற்ற சமுதாயத்தினருக்கும் எங்களுக்கும் மோதல் உருவாகும் வகையில் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்காரு. அதைக் கேட்பதற்காக அவர் வீட்டுக்குப் போனபோது வாக்குவாதம் ஏற்பட்டது... அவ்வளவுதான். மத்தபடி நாங்க அவருக்குக் கொலை மிரட்டல் எல்லாம்விடலை” என்றார்.

வழக்கறிஞர் அஜ்மல் கானிடம் பேசினோம். “தினமும் நிறைய பேர், போன் செய்து ‘எதுக்காக இந்த வழக்கை எடுத்து நடத்துறீங்க?’னு டார்ச்சர் பண்ணினாங்க. ஒருகட்டத்துல, ‘இஸ்லாமியர்கள் எங்களது சமுதாயத்துக்கு எதிராகச் செயல்படு கிறார்கள்’ என்று சமூக வலைத்தளங்களில் எழுதத் தொடங்கினார்கள். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சில வழக்கறிஞர்கள், இந்த வழக்கிலுள்ள பிரச்னைகள் பத்தியும், அது கடந்து வந்த பாதைகளையும் எடுத்துச் சொன்னாங்க. அதனால், இந்த வழக்கிலிருந்து விலகினேன்” என்றார்.

இது குறித்து விளக்கம் கேட்பதற்காக, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியைப் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. தொடர்ந்து கிருஷ்ண சாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான ஷாமிடம் பேசினோம்.

“தலையை வெட்டி வாசல்ல வெச்சிடுவோம்!”

“சாதியில்லாத தேசத்தைக் கட்டமைப்பதற்கான முதற்கட்டம்தான் இது. பிரிவு மாற்றிவிட்டால், சாதிகளுக்குள் இருக்கும் சண்டைகள் போய்விடும். உயர்வு, தாழ்வு என்பது பட்டியலைவைத்துத்தான் உருவாகிறது. அது போன்ற உயர்வு, தாழ்வு வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு. அமர்நாத் என்பவர் மாதம் ஏழாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கக்கூடியவர். ஆனால், ஐந்து லட்சம் கொடுத்து எப்படி அவரால் வழக்கு நடத்த முடியும்? பல மாதங்களாக வர்மா கமிஷன் விசாரணை நடக்கிறது. அவர்கள் அறிக்கை சமர்ப்பிக்கும் நேரத்தில், திடீரென இப்படியொரு வழக்கைத் தொடரக் காரணம் என்ன? இவர் யாரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்த வேலையைச் செய்கிறார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவோம்” என்றார்.

நியாயமான தீர்ப்பு வரட்டும்!