Published:Updated:

புழல் சிறை டூ யங்கூன் ஏர்போர்ட்... திக் திக் பயண ரிப்போர்ட்!

சென்னையிலிருந்து மியான்மர் திரும்பியவர்கள்
சென்னையிலிருந்து மியான்மர் திரும்பியவர்கள்

கொரோனாநோய்த் தொற்றுப் பரவல் வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த மியான்மர் முஸ்லிம்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து, அவர்கள் மியான்மர் திரும்பிய பயணத்தின்போது ஏற்பட்ட திக் திக் அனுபவத்தைச் சொல்கிறது இந்தக் கட்டுரை.

மியான்மரில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள், சென்னை திரும்பியிருப்பது மகிழ்ச்சியென்றால், மியான்மர் நாட்டைச் சேர்ந்த 13 பேரை அவர்களது நாட்டுக்குத் திருப்பியனுப்பியதன் பின்னணியில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள், விறுவிறு ஆங்கிலப் படங்களுக்கு இணையான சுவாரஸ்யம் நிறைந்தவை.

2020 வருட ஆரம்பத்தில், மதப் பிரசாரத்துக்காக வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்திருந்த, 'தப்லிக் ஜமா அத்' அமைப்பினர் இங்கே கொரோனாநோய்த் தொற்றைப் பரப்பிவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, நாடு முழுக்க இந்த அமைப்பினர் கைதுசெய்யப்பட்டனர். அந்த வகையில், ஒன்பது நாடுகளிலிருந்து வருகைபுரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 முஸ்லிம்கள் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் இறுதி வாரம் கைதுசெய்யப்பட்டார்கள்.

மியான்மர் திரும்பியவர்கள்
மியான்மர் திரும்பியவர்கள்

முதலில், சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள், பின்னர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் அடிப்படையில், இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதும் புழல் மத்தியச் சிறை வளாகத்திலுள்ள சிறார் சிறையில் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு அடைக்கப்பட்டார்கள்.

இதையடுத்து, `வெளிநாட்டினருக்கான தடுப்பு முகாம், சிறை வளாகத்தில் அமையக் கூடாது' என்ற விதிமுறையைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்ட அறிவிப்பை வெளியிட்டது. உடனடியாக, 129 வெளிநாட்டு முஸ்லிம்களையும் சென்னை சூளையிலுள்ள தமிழ்நாடு ஹஜ் சேவை சங்கத்தின் விடுதியில் தங்கவைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன் பிறகு இவர்கள் மீதான வழக்குகள் விசாரணைக்கு நீதிமன்றங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் முதல் வழக்காக, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதியன்று மியான்மர் நாட்டு முஸ்லிம்கள் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து இந்த 13 வெளிநாட்டவர்களையும் அவர்களது தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது. ஆனால், இந்தியாவிலிருந்து மியான்மர் செல்வதற்கு விமானச் சேவை இல்லாத நிலையில் அவர்கள் சென்னையிலேயே சுமார் இரண்டு மாதங்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலில், அக்டோபர் 7-ம் தேதி 'மியான்மரில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கு `ஏர் இந்தியா வந்தே பாரத்’ விமான சேவை டெல்லியிலிருந்து இயக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இங்கேயும் புதிதாக ஒரு சிக்கல் எழுந்தது...

விமானம்
விமானம்
Representational Image

தமிழகத்தில் கைதுசெய்யப்பட்ட தப்லிக் ஜமா அத்தினர் வழக்குகள் தொடர்பான பணிகளைக் கடந்த ஆறு மாதங்களாக ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கும் `மனித நேய மக்கள் கட்சி' தலைவர் ஜவாஹிருல்லா இது குறித்துப் பேசும்போது, ``மியான்மருக்குச் செல்லும் வந்தே பாரத் விமானத்தில், இந்தியக் கடவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில், இந்தப் பிரச்னையை நான் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். மேலும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியிடமும் இது குறித்து முயற்சி எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். இதையடுத்து நவாஸ்கனி எடுத்த முயற்சியின் விளைவாக, 13 மியான்மர் முஸ்லிம்களுக்கும் வந்தே பாரத் விமானத்தில் பயணிப்பதற்கான பயணச்சீட்டுகள் கிடைத்தன. வெளிநாட்டு பதிவு அலுவலக அலுவலர் (FRRO) இவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறுவதற்கான அனுமதியையும் (Exit Visa) வழங்கினார்.

இதையடுத்து, அக்டோபர் 6-ம் தேதி மாலை 7 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் டிக்கெட் புக் செய்தோம். 13 முஸ்லிம்களும் டெல்லிக்குச் செல்ல விமான நிலையத்துக்கு வந்து, தங்களது உடைமைகளை ஒப்படைத்து, விமானம் ஏறுவதற்கான அனுமதிச் சீட்டையும் (Boarding Pass) பெற்றுக்கொண்டு காத்திருந்தனர். இந்தச் சூழலில் இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி, `இவர்களை விமானத்தில் ஏற்றுவதற்கு, முன் அனுமதி பெறவில்லை என்பதால் விமானச் சேவை பாதுகாப்பு அதிகாரிகள் (BCAS) மறுக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து விமானத்தில் ஏற்றப்பட்ட 13 பேரின் உடைமைகளும் கீழிறக்கப்பட்டன.

ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா

உடனே, (BCAS) கூடுதல் இயக்குநர் சேனாதிபதியிடம் `இந்த 13 மியான்மர்காரர்களும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கிடையாது. இவர்கள்மீது வழக்கு எதுவும் இல்லை' என்று காவல்துறை உயர் அதிகாரிகள் பல ஆவணங்களை காட்டினர். ஆனாலும்கூட மாலை 7 மணிக்குப் புறப்படும் விமானத்தில் செல்வதற்கு அனுமதி மறுத்துவிட்டார். எனவே, இண்டிகோ விமானமும் இவர்களை ஏற்றாமலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டது.

நீதிமன்றம் விடுதலை செய்த பிறகும்கூட, ஊர் திரும்ப முடியாமல் இரண்டு மாதங்கள் சிரமப்பட்டவர்களுக்கு பெரும் போராட்டத்துக்குப் பிறகே விமான பயணச் சீட்டு கிடைத்தது. ஆனால், மீண்டும் ஓர் அதிகாரியின் நடவடிக்கையால், இவர்கள் பயணம் செய்ய இயலாதநிலை ஏற்பட்டது மிகுந்த துயரத்தை அளித்தது.

`நடிகர் சூரி கொடுத்த நிலமோசடி புகாரில் வழக்கு!' - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்

தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர் மற்றும் காவல் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு இந்தப் பிரச்னையை எடுத்துச் சொல்லி, இவர்களது பயணம் தொடர்வதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். இதையடுத்து தமிழக டி.ஜி.பி., சென்னை மாநகர காவல் ஆணையாளர், அரசுத்துறை உயரதிகாரிகள் ஆகியோர் உடனடியாக அதிரடி நடவடிக்கைகள் எடுத்தனர்.

சென்னையிலிருந்து இரவே கிளம்பினால்தான் மறுநாள் காலை 8 மணிக்கு டெல்லியிலிருந்து மியான்மர் கிளம்பும் வந்தே பாரத் விமானத்தைப் பிடிக்க முடியும். ஆனால், சென்னையிலிருந்து இரவு 9:30 மணிக்கு டெல்லிக்குப் புறப்படவிருந்த விமானம் திடீரென ரத்துசெய்யப்பட்டுவிட்டது என்ற அடுத்த அதிர்ச்சிச் செய்தி கிடைத்தது. உடனே அடுத்த திட்டமாக சென்னையிலிருந்து மும்பை சென்று, அங்கிருந்து டெல்லி செல்வதென முடிவெடுத்தோம். ஆனால், இதிலும் ஒரு சிக்கல் வந்தது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

அதாவது, மும்பையிலிருந்து டெல்லி செல்லும் விமானம் டெல்லியிலுள்ள 2-ம் முனையத்தில் சரியாக காலை 8:05 மணிக்குத்தான் தரையிறங்கும். ஆனால், மியான்மர் செல்லும் வந்தே பாரத் விமானமோ காலை 8 மணிக்கே, 3-ம் முனையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுவிடும். எனவே, மியான்மர் செல்லும் வந்தே பாரத் விமானத்தின் புறப்பாடு நேரத்தை தாமதப்படுத்துமாறு தமிழக அரசு அதிகாரிகள், வெளி விவகாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர். இந்த ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்ட பின்னரே, சென்னையிலிருந்து (SpiceJet SG 776) விமானம் மூலம் 13 மியான்மர் முஸ்லிம்களும் மும்பை புறப்பட்டுச் சென்றனர்'' என்று நீண்ட விளக்கம் கொடுத்து முடித்தார்.

தமிழகம் முழுவதும் அடைக்கப்பட்ட சலூன் கடைகள்! - திண்டுக்கல் சிறுமி வழக்கில் நீதி கேட்டுப் போராட்டம்

தற்போது மியான்மர் (யாங்கூன்) போய்ச் சேர்ந்திருக்கும் 13 முஸ்லிம்களில் ஒருவரான ஷா வின் என்பவரை வாட்ஸ்அப் வழியே தொடர்புகொண்டு பயணம் குறித்து விசாரித்தோம்... ``6-ம் தேதி நள்ளிரவில் சென்னையிலிருந்து விமானத்தில் கிளம்பிய நாங்கள், அதிகாலையில் மும்பை வந்து சேர்ந்தோம். பின்னர் அங்கிருந்து (Go Air. flight G 8327) விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்தின் 2-ம் முனையத்தை காலை 8:05 மணிக்கு வந்தடைந்தோம். அங்கு ஏற்கெனவே தயார் நிலையிலிருந்த தமிழக இல்லத்தின் அதிகாரிகள் எங்களை வரவேற்று, தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் வாகனங்களில் விமான நிலையத்தின 3-ம் முனையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ஷா வின்
ஷா வின்

அங்கே எங்களுக்காகக் காத்திருந்த (ஏர் இந்தியா AI 1202) வந்தே பாரத் விமானம் எங்களையும் ஏற்றிக்கொண்டு காலை 10 மணிக்கு மியான்மரை நோக்கிக் கிளம்பியது. மாலை 3 மணியளவில் நாங்கள் மியான்மர் வந்தடைந்தோம். தமிழக அதிகாரிகளின் முயற்சியால், நாங்கள் சொந்த ஊர் திரும்பியதில் ரொம்பவே மகிழ்ச்சி... ஆனாலும் இன்னும் எங்கள் சொந்த பந்தங்களைப் பார்க்க முடியவில்லை. இங்கேயே தனிமைப்படுத்திவைத்திருக்கின்றனர். கோவிட் டெஸ்ட் முடிவு தெரிந்து ஒரு வாரம் கழித்தே அவரவர் வீடுகளுக்குச் செல்ல முடியும்'' என்றவர் வார்த்தைகளில் மகிழ்ச்சி ததும்பியது.

தமிழக அரசு அதிகாரிகளின் அக்கறையும், துரித செயல்பாடும்தான் 13 மியான்மர் முஸ்லிம்களையும் அவர்களது தாய்நாட்டில் பத்திரமாக கால்பதிக்கவைத்திருக்கிறது. இல்லையெனில், கால வரம்பின்றி அவர்கள் இந்தியாவிலேயே தவித்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்!

அடுத்த கட்டுரைக்கு