‘கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக இருக்கும் ராஜகோபால் ஐ.ஏ.எஸ், தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படலாம்’ என்று கடந்த ஜூ.வி இதழில் கழுகார் சொன்னது நடந்துவிட்டது. ஸ்ரீபதி, ராமானுஜம், ஷீலாப்ரியா வரிசையில் ராஜகோபாலின் நியமனமும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கவர்னர் மாளிகையில் பணியாற்றியபோது, ‘சர்ச்சை நாயகன்’ என்று பெயரெடுத்தவர் ராஜகோபால். அப்போது நடந்த விஷயங்களை ஜூ.வி-யில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறோம். ராஜகோபால் மாற்றப்பட்டதை இனிப்பு கொடுத்துக் கொண்டாடியிருக்கிறார்கள் ராஜ்பவன் அலுவலர்கள் சிலர். அவர்களிடம் பேசினோம்...

‘‘நிர்மலாதேவி விவகாரத்தில் ராஜ்பவன் பற்றிய செய்தியை வெளியிட்டதற்காக நக்கீரன் கோபால் கைதுசெய்யப்பட்டு, உடனடியாக விடுதலைசெய்யப்பட்டார். கோபாலைக் கைதுசெய்வதற்கு ராஜகோபால் காரணமாக இருந்ததாக புகார் எழுந்தது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவியேற்பு விழாவில், நீதிபதிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கிய விவகாரத்திலும் இவர் தலை உருண்டது. நீதிபதிகளும் கண்டனத்தைப் பதிவுசெய்தனர்.

ஆளுநரின் மெய்க்காப்பாளர்களில் ஒருவரான துரை, ராஜ்பவன் பற்றி தமிழ்ப் பத்திரிகைகளில் வரும் செய்திகளை கவர்னருக்கு அனுப்பியதற்காகத் தூக்கியடிக்கப்பட்டார். இன்னொரு மெய்க்காப்பாளராக இருந்த கடற்படையைச் சேர்ந்த சோம்வன்ஷியையும் மாற்றினார்கள். கடந்த ஓராண்டில் ஐந்து கணக்கு அலுவலர்கள் மாற்றப்பட்டனர். வேலையே இல்லாத ஊட்டி ராஜ்பவனுக்கு சிலரை இடம் மாறுதல் செய்தார்கள். நான்கு கவர்னர்களுக்கு பி.ஏ-வாக இருந்த சீராளன், ஜஸ்டின் ராஜேஷ், பீட்டர் சகாயநாதன் ஆகியோர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டனர். சீனிவாசன், எட்வின், இருதயராஜன், நிக்சன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

‘புரோஹித் கவர்னர் ஆன பிறகு ராஜ்பவனில் பெருமளவில் செலவுகள் குறைக்கப்பட்டன. சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன’ என்று செய்திக் குறிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் அதற்கு நேர்மாறாக, தேவையில்லாத செலவுகள் செய்யப்பட்டன. ராஜ்பவனில் இருந்த பட்டேல் சிலையைத் தூக்கிவிட்டு, விவேகானந்தர் சிலையை அமைத்தார்கள். செயலகத்தில் இருந்த பி.ஆர்.ஓ அலுவலகத்தை அகற்றி, துப்புரவு சாதனங்கள் வைக்கும் அறைக்கு மாற்றினார்கள்.

ராஜகோபாலின் தாய், தந்தை, தம்பி ஆகியோர் கவர்னர் மாளிகையில் வி.வி.ஐ.பி-க்கள் தங்கும் ஜி7, ஜி8, ஜி9, ஜி10 அறைகளில் தங்கினார்கள். ராஜகோபாலின் தாய் ராஜ்பவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரை கவனித்துக்கொள்வதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு டாக்டர்கள் சிலருக்கு ராஜ்பவனில் டூட்டி போட்டார். அவரின் தாய்க்காக மருத்துவமனையில் வசதிகள் செய்யப்பட்டன. இரண்டு உயர் அதிகாரிகள் தங்கும் இரண்டு அடுக்கு வசதிகொண்ட ராஜ்பவன் ஒயிட் ஹவுஸ், ஒரே குடியிருப்பாக மாற்றியமைக்கப்பட்டது. இப்படி நிறைய செலவுகள் செய்யப்பட்டன’’ என்றார்கள்.

இன்னொருபுறம், ‘‘வெளிப்படையான நிர்வாகம் அமைய வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்டது தகவல் அறியும் உரிமைச் சட்டம். அதைச் செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தகவல் ஆணையத்தின் ஆணையர் நியமனம் ‘ரகசியமாக’ நடந்திருக்கிறது’’ என்று கொதிக்கிறார்கள் ஆர்.டி.ஐ ஆர்வலர்கள்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டுக் கிடைக்காவிட்டால் தகவல் ஆணையத்தில் முறையிடலாம். தகவல் தரவில்லையென்றால், அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 25,000 ரூபாய் அபராதம் விதிக்கும் அதிகாரம்கொண்டது தகவல் ஆணையம். முதலமைச்சர், அமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக்கொண்ட குழுதான் தகவல் ஆணையர்களைத் தேர்வுசெய்யும். ராஜகோபாலைத் தேர்வுசெய்யும் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. ‘‘தகவல் ஆணையர் பதவிக்கு எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள், அவர்களின் விவரங்கள் உள்ளிட்ட எந்தத் தகவலும் தரவில்லை. வெளிப்படைத்தன்மை இல்லாததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை’’ என்று சொல்லிவிட்டார் ஸ்டாலின்.

இது தமிழக அரசியலில் சகஜம்தான். தி.மு.க ஆட்சியில் தலைமை தகவல் ஆணையராக ஸ்ரீபதி நியமிக்கப்பட்ட நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவும் இதேபோல் ‘தகவல் ஆணையர் தொடர்பாக எனக்கு எந்த ஆவணமும் தரவில்லை’ என்றார். அன்றைக்கு ஜெயலலிதாவுக்கு தகவல் தராத தி.மு.க-வின் ஸ்டாலின் தான் இன்றைக்கு அதே பல்லவியைப் பாடுகிறார்.

ஜெயலலிதா மட்டும் என்ன விதிவிலக்கா? அவருடைய ஆட்சியில் தலைமை ஆணையராக, ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி-யான ராமானுஜம் நியமிக்கப்பட்டபோதும் வெளிப் படைத்தன்மை கடைப்பிடிக்கப் படவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்துக்கு தகவல் ஆணையர் நியமனம் தொடர்பான விவரங்களை ஜெயலலிதா அனுப்பவில்லை.

தலைமைச் செயலாளர் பதவிக்குத் தான் ராஜகோபால் குறிவைத்தார். இலவசத் திட்டங்களில் அரசுக்கு ஆதரவு கொடுக்கும் நிதித்துறைச் செயலாளர் சண்முகத்தை அந்தப் பதவிக்குக் கொண்டுவந்து விட்டார்கள். இதனால், அந்தஸ்தான பதவியில் அமர ஆசைப்பட்டார் ராஜகோபால். ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைக்கும் அளவுக்குப் பெரிய பதவியான தகவல் ஆணையர் பதவியைக் கேட்டு வாங்கிவிட்டார்.

‘அறிவியல், சட்டம், தொழில்நுட்பம், சமூகசேவை, மேலாண்மை, இதழியல், ஊடகம், நிர்வாகம் போன்ற துறைகளில் அனுபவமுள்ளவர்கள்தான் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்படுவார்கள். ஆனால், ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு போஸ்டிங் போடும் இடமாக இது மாறிவிட்டது’ என்ற விமர்சனங்கள் எழுகின்றன. விமர்சனங்கள் தொடர்பாகப் பேச ராஜகோபலைத் தொடர்புகொண்ட போது, அவர் தரப்பிலிருந்து பதிலேதும் இல்லை. ராஜகோபாலின் மொபைலுக்கு வாட்ஸப் அனுப்பியுள்ளோம். அதை அவர் பார்த்துவிட்டாலும், பதிலேதும் இல்லை. அவரிடமிருந்து பதில் கிடைத்தால் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.

தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இனி என்னவாகப்போகிறதோ!