Published:Updated:

`முதன்முதலாக எழுந்த உரிமைக்குரல்!' - அம்பேத்கருக்குப் பிடித்த `மாநாடு' இதுதான் - பகுதி 2

அம்பேத்கர்
News
அம்பேத்கர்

அம்பேத்கர் ஏற்றிய தீப ஒளியின் மூலமாக இருளகன்றதால் முன்னேறியவர்களில் பலரே... அந்தத் தீபத்தை அடுத்தடுத்தக் கட்டங்களுக்குச் சுமந்துசெல்லத் தயாராக இல்லாமல், சுயநலத்தோடு வாழ்கிறார்கள் என்பது கொடுமைதானே? அதை, தன் வாழ்நாளிலேயே உணர்ந்தவராக அப்போதே வெளிப்படுத்தியிருக்கிறார் அம்பேத்கர்.

அம்பேத்கரின் 65-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடந்த வாரம், `என் சமூகத்துக்காக இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறேன்!' என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதன் அடுத்த பகுதி இது.

நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் இன்றைய நிலை என்ன?

நாடு முழுவதும் பலர் படித்துப் பட்டங்களைப் பெற்றிருக்கலாம்; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாகியிருக்கலாம்; எம்.எல்.ஏ, எம்.பி என மக்கள் பிரதிநிதிகளாக உருவெடுத்திருக்கலாம்; மாநில அமைச்சர்கள், முதலமைச்சர்கள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், ஜனாதிபதிகள் என்றுகூட பெரும் பொறுப்புகளை சுமந்திருக்கலாம், சுமந்துகொண்டிருமிருக்கலாம். ஆனாலும்கூட இன்னமும் அடிமைத்தளையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்பதுதானே உண்மையாக இருக்கிறது.

அம்பேத்கர் ஏற்றிய தீப ஒளியின் மூலமாக இருளகன்றதால் முன்னேறியவர்களில் பலரே... அந்தத் தீபத்தை அடுத்தடுத்தக் கட்டங்களுக்குச் சுமந்து செல்லத் தயாராக இல்லாமல், சுயநலத்தோடு வாழ்கிறார்கள் என்பது கொடுமைதானே.

அதை, தன் வாழ்நாளிலேயே உணர்ந்தவராக அப்போதே வெளிப்படுத்தியிருக்கிறார் அம்பேத்கர்.

Ambedkar Statue
Ambedkar Statue
AP Photo/Rajanish kakade

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``தங்களின் நண்பர்கள் யார்; எதிரிகள் யார்; தங்களின் ஆதரவு ஜனநாயக சக்தி எது? என்பதையெல்லாம் அடையாளம் கண்டுகொள்ள முடியாதவர்களாக முடக்கப்பட்டு, இலவசங்களுக்கு வாக்களிக்கும் வாக்கு வங்கிகளாகத்தானே பெரும்பாலும் வைக்கப்பட்டிருக்கிறார்கள் எம் மக்கள்'' என்று ஆதங்கம் பொங்கச் சொல்லியிருக்கிறார்.

அம்பேத்கரின் அறிவைப் பெரிதும் ஆராதித்தது அமெரிக்காவிலிருக்கும் கொலம்பியா பல்கலைக்கழகம். ``அவர், இந்திய அரசியல் சாசனத்தைத் தயாரித்தவர்; மத்திய அமைச்சரவையின் கேபினட் அந்தஸ்துள்ளவர்; நாடாளுமன்ற உறுப்பினர்; இந்திய முக்கியக் குடிமகன்களில் ஒருவர்; சமூக சீர்திருத்தவாதி; மனித உரிமைகளை உறுதியுடன் போற்றுபவர்" என்று பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது கொலம்பியப் பல்கலைக்கழகம். ஆனால், உலகம் போற்றும் தலைவனைப் பாராட்ட, உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு மனம் வரவில்லை.

அவர் எழுதிய இந்திய அரசியல் சட்டத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவரை மட்டும் இன்றும்கூட முழுமையாக ஏற்க மறுக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கிரேக்க நாட்டின் அறிஞர் பிளேட்டோவின் அரசியல் பற்றித் தெரியாதவர்கள், கிரேக்க நாடுகளில் ஆட்சியாளனாக முடியாது. சீனத்தின் கன்பியூசியஸ் தத்துவத்தையும் அரசியலையும் உள்வாங்காதவர்கள், சீனத்தின் ஆட்சியாளராக முடியாது. அறிஞர் கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களை உள்வாங்காதவர்கள், பொதுவுடைமை நாடுகளில் ஆட்சியாளராக முடியாது. அதேபோல் அம்பேத்கரின் தத்துவார்த்த அரசியலை உள்வாங்காதவர்கள், இந்தியாவின் சிறந்த ஆட்சியாளராக முடியாது. ஆம், எத்தனையோ தலைவர்கள் இந்தியாவில் வந்து போயிருக்கலாம். ஆனால், ஓரிருவர் தவிர வேறு யாருமே சிறந்த ஆட்சியாளராக இங்கே உருவெடுக்கவில்லை என்பதுதானே உண்மையாக இருக்கிறது.

காந்தியும்கூட இதற்கு விதிவிலக்கில்லை என்பதை அப்போதே அம்பேத்கர் உடைத்துக்காட்டத்தான் செய்திருக்கிறார்.

இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேயர்கள், இந்திய அரசியலமைப்பு உள்ளிட்ட பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதற்காக வட்டமேசை மாநாடுகளை இங்கிலாந்தில் நடத்தினார்கள். அதில் பங்கேற்பதற்காக ஆங்கிலேய வைசிராயிடம் இருந்து அம்பேத்கருக்குக் கடிதம் வந்தது.

காந்தி
காந்தி

லண்டன் மாநகர் சென்றடைந்து வட்டமேசை மாநாட்டில் பேசும்போது, ``அரைவயிற்றுக் கஞ்சிக்கும் இடுப்பில் துணிக்கும் வக்கில்லாத ஊமைகளின் பிரதிநிதியாக நான் பேசுகிறேன். பிரிட்டிஷ் இந்தியாவில் ஐந்தில் ஒருபாக மக்கள்; ஆனால், நாங்கள் அடிமைகளைவிட மோசமான நிலையில் வைக்கப்பட்டிருக்கிறோம். அனைத்துத் தாழ்த்தப்பட்ட மக்களும் அந்நிய ஆதிக்கத்தை நீக்கி, மக்களால் மக்களுக்காக ஆளப்படும் மக்களாட்சியை விரும்புகிறார்கள். ஆனால், உங்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன பயன்? எங்களைப் பற்றி சிந்திக்கக்கூட உங்களுக்கு நேரமில்லை. நீங்கள் எங்கள் நாட்டுக்குள் வருவதற்கு முன் நிலைமை எப்படி இருந்ததோ... அதே நிலைமைதான் இன்றும் தொடர்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுக்கிணற்றில் நாங்கள் தண்ணீர் எடுக்க முடியாது; கோயில்களில் நுழைய முடியாது; காவல்துறையில் வேலைவாய்ப்பு கிடைக்காது; ராணுவத்தில் சேர்க்க மாட்டார்கள்.

எங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவுகளையும் குறைகளையும் நீக்கக்கூடிய வலிமையும் அதிகாரமும் நீங்கள் பெற்றிருந்தாலும், உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளும் மக்களின் எதிர்ப்புக்கு பயந்து, எதிலும் தலையிடாமல் கையைக் கட்டிக்கொண்டு விட்டுவிட்டீர்கள். எங்கள் கையில் அரசு அதிகாரம் வந்தாலொழிய, எங்கள் குறைகள் நீங்காது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் அதிகம் படித்து, உலகிலுள்ள பட்டங்களைப் பெற்ற நபர் நான் ஒருவன்தான். பெருமைக்காக நான் இதைச் சொல்லவில்லை. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பெருமக்களில் பெரும்பான்மையினர், நான் அதில் கலந்துகொள்வதை விரும்பவில்லை என்பதற்காகவே சொல்கிறேன்'' என்று அந்த மாநாட்டில் முழங்கினார் அம்பேத்கர்.

Mahatma Gandhi
Mahatma Gandhi

இந்தியா - இங்கிலாந்து சரித்திரத்தில் இந்த மாநாடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதைவிட தாழ்த்தப்பட்டவர்கள் வரலாற்றில், அப்போதுதான் முதன்முறையாக மற்ற இந்தியர்களோடு தாழ்த்தப்பட்டவர்களும் கலந்தாலோசிக்கப் பட்டு, அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சி நடந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளில் முதன்முறையாக தாழ்த்தப் பட்டவர்கள் தங்கள் உரிமைக்காக, தாங்களே குரல் கொடுத்தது இந்த மாநாட்டில்தான். அந்த வகையில், அம்பேத்கருக்கு பிடித்தமான மாநாடும்கூட!

முதல் வட்டமேஜை மாநாட்டுக்காக இங்கிலாந்து சென்றவர், சுமார் ஐந்து மாதங்கள் அங்கு தங்கியிருந்தார். பல்வேறு விவாதங்களில் பங்கேற்றார். பத்திரிகையாளர்கள், அறிஞர்கள் எனப் பலரையும் சந்தித்தார். ``உலகில் உள்ள அறிஞர்களின் உதவியால்தான் இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை மேம்பாடு அடைய முடியும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை, அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க - அமெரிக்க மக்களின் நிலையைவிட மோசமானது என்பதை முதன்முறையாக உலகம் அப்போதுதான் உணர்ந்தது.

முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருந்த காந்தியார், இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வது பற்றி யோசிக்க ஆரம்பித்தார். ஆனால், கலந்துகொள்வாரா என்பது சந்தேகமாக இருந்தது. இச்சமயத்தில் அம்பேத்கரை சந்திக்க விரும்பினார், காந்தியார். நேரில் சென்ற அம்பேத்கரை உற்றுப் பார்த்துக்கொண்டே, ``தங்களுக்கு என் மீதும், காங்கிரஸ் மீதும் குறைகள் இருப்பதாக அறிகிறேன். தாங்கள் பிறப்பதற்கு முன்னால், என் பள்ளிக் காலத்திலிருந்தே தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்னை பற்றி நான் எண்ணி செயல்பட்டுக்கொண்டிருக்கின்றேன். மேடைகளில் இதை அடிப்படையாகப் பேசுவதோடு, காங்கிரஸின் திட்டங்களில் ஒன்றாகச் சேர்க்க முயற்சி எடுத்தேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்" என்று சொன்னார் காந்தியார்.

காங்கிரஸ் கட்சி இந்தப் பிரச்னைக்கு அங்கீகாரம் கொடுத்தது உண்மை. ஆனால், பெயரளவில் அங்கீகாரம் கொடுத்ததைத் தவிர காங்கிரஸ் வேறொன்றும் செய்யவில்லை. உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்குமானால், தாங்கள் எப்போதோ என்னைப் பார்த்திருக்க வேண்டும். மேலும் காங்கிரஸில் சேருவதற்கு கதர் சீருடை அணிய வேண்டும் என்று நிபந்தனை இருப்பதுபோல், தீண்டாமை ஒழிப்பையும் ஒரு நிபந்தனையாக ஆக்கியிருக்க வேண்டும். அப்படி ஒரு நிபந்தனையை ஏற்படுத்தி இருந்தீர்களேயானால், தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைவதை ஒரு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எதிர்க்கும் அசிங்கமான செயலைத் தவிர்த்திருக்கலாம். நாங்கள் மகாத்மாக்களை நம்பத் தயாராக இல்லை. நான் வெளிப்படையாகக் கேட்கிறேன், என்னைப் பயங்கரவாதி என்று சொல்லவும், எங்கள் இயக்கத்தை எதிர்க்கவும் காங்கிரஸுக்கு அவசியமென்ன?
- இப்படி காந்தியாருடன் பேசும்போது, அம்பேத்கருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ஒரு நிமிடம் தாமதித்து மெதுவாகச் சொன்னார்...
அம்பேத்கர்
அம்பேத்கர்

``காந்தி அவர்களே... எனக்குச் சொந்த நாடு இல்லையே?"

சற்றே அதிர்ந்த காந்தியார், ``உங்களுக்குச் சொந்த நாடு இருக்கிறது. வட்டமேசை மாநாட்டில் உங்கள் செயல்களால் உங்களைத் தேசபக்தராக நான் அறிகிறேன்" என்றார்.

``நான் மீண்டும் சொல்கிறேன்... நான் சொந்த நாடு இல்லாமல் இருக்கிறேன். பூனைகளைவிட, நாய்களைவிட எங்களை மோசமாக நடத்துவதும், எங்களுக்கு குடிக்ககூட தண்ணீர் கிடைக்காமல் செய்வதுமாக இருக்கும் இந்த நாட்டை, என் சொந்த நாடு என்று எப்படிச் சொல்வது? மரியாதை உள்ள தாழ்த்தப்பட்டவன் எவனொருவனும், இந்த நாட்டைப் பற்றி பெருமை கொள்ள மாட்டான்.

என்னை அரக்கன் என்று சொல்வதால் நான் கவலைப்படவில்லை. ஏனெனில், என்னை அரக்கன் என்று எந்த நாடு சொல்கிறதோ... அந்த நாடுதான் எங்களுடைய செயல்களுக்குப் பொறுப்பாகும். இந்த நாட்டுக்கு எவ்வளவு தீங்கு செய்தாலும் அது தவறாகாது. ஆனால், என் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு, இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நினைக்காமல், என் மக்களின் உரிமைக்காகப் போராடி வருகிறேன்"

- இந்த உரையாடலின் நடுவே சூழ்நிலை மோசமாகியவேளையில், ஒரு முக்கியமான கேள்வியை காந்தியாரிடம் கேட்டார் அம்பேத்கர்.

Gandhi
Gandhi

``காந்திஜி அவர்களே... தாழ்த்தப்பட்டவர்களைவிட சமூகரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உயர்ந்தவர்களான முஸ்லிம், சீக்கியர் ஆகியோரின் உரிமைகளை முதல் வட்டமேசை மாநாடு ஏற்றுக்கொண்டது. அந்த மாநாட்டில்தான் தாழ்த்தப்பட்டவர்களின் அரசியல் உரிமைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. எங்களைப் பொறுத்தவரை அவை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மையே. இதுகுறித்து தங்களுடைய கருத்து என்ன?"

அதற்கு, ``இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்கள் அரசியல்ரீதியாகப் பிரிக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன். அது தற்கொலைக்கு ஒப்பாகும்."
என்று பதில் தந்தார் காந்தி.

அம்பேத்கர் உடனே எழுந்து, ``தங்களுடைய மனம்திறந்த கருத்துக்கு நன்றி. நாம் எங்கே நிற்கிறோம் என்பதைத் தெரிந்துகொண்டது நன்மைக்கே. நான் விடைபெறுகிறேன்" என்றார்.

- தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை எப்படியும் முழுமூச்சுடன் போராடி வென்றெடுக்க வேண்டும் என்ற முடிவான தீர்மானத்துடன் அங்கிருந்து வெளியேறினார் அம்பேத்கர்.

``முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் பரிந்துரைக்கப்பட்ட உரிமைகளை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் தலைவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட உரிமைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிலும், இந்திய அரசியலில் வழிகாட்டியாக இருந்த காந்தியார் ஏற்றுக்கொள்ள மறுத்தது, என்னால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. கடுகடுப்பான முகத்துடன் அங்கிருந்து வெளியேறினேன்"

- இப்படி காந்தியுடனும் காங்கிரஸுடனும் கடுமையாக முரண்பட்ட அம்பேத்கர், பின்னாளில் எப்படி அரசியல் சட்டத்தை இயற்றுவதற்காக அதே காங்கிரஸால் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

(படிப்போம்)

- மல்லை சத்யா