Election bannerElection banner
Published:Updated:

வேளாண் சட்டங்கள்: உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை; புதிய குழு - விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா?

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

`விவசாயிகள் நினைப்பதுபோல இந்தச் சட்டங்கள் அவர்களுக்கு எந்த நிலையிலும் இடையூறை ஏற்படுத்தாது. அவர்கள் மத்தியில் இது குறித்த முழுமையான புரிதல் இன்னும் ஏற்படவில்லை’ - அனில் கன்வத்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசாங்கம் அமல்படுத்தியது. இந்தச் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், அவர்களின் குடும்பத்தினரும் டெல்லியின் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகப் போராடிவருகின்றனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், விவசாயிகள் தொடர்ந்து போராடிவருகின்றனர். இதனால் வட மாநிலங்களில் பொருளாதாரச் சிக்கல்கள் தொடங்கி பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தநிலையில், நேற்று புதிய வேளாண் சட்டங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை அவற்றைச் செயல்படுத்தக் கூடாதென்று இடைக்காலத் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இந்தச் சட்டங்களை மறுசீராய்வு செய்யவும், இதிலுள்ள சிக்கல்களைக் கண்டறியவும் நான்கு பேர்கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்திருக்கிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒருபுறம் விவசாயிகள் வரவேற்றாலும், இதை அவர்களுக்குக் கிடைத்த முழுமையான வெற்றியாகக் கருதவில்லை. அதேசமயம், உச்ச நீதிமன்றம் அமைத்திருக்கும் ஆய்வுக்குழுவில் உடன்பாடில்லை என்றே விவசாய அமைப்பினர் தெரிவிக்கின்றனர். ஏனெனில், அக்குழுவிலுள்ள ஆய்வாளர்கள் மத்திய அரசுக்குச் சாதகமாகச் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று விமர்சித்திருக்கிறார்கள்.

இது தொடர்பான விளக்கம் அளித்த உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குழு உறுப்பினரான அனில் கன்வத்,``விவசாயிகள் நினைப்பதுபோல இந்தச் சட்டங்கள் அவர்களுக்கு எந்த நிலையிலும் இடையூறை ஏற்படுத்தாது. அவர்கள் மத்தியில் இது குறித்த முழுமையான புரிதல் இன்னும் ஏற்படவில்லை. விவசாயிகளுக்குக் கண்டிப்பாக விரைவில் நீதி கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும், ``உச்ச நீதிமன்றம் அமைத்திருக்கும் இந்தக் குழு, விவசாயிகளின் நலனுக்கானதே அன்றி, எந்த வகையிலும் மத்திய அரசுக்கு ஒருதலைபட்சமாகச் செயல்படாது. இந்தக் குழுவிலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் பல்வேறு வேளாண் நிறுவனங்களின் ஆய்வாளர்கள்” என்று கூறினார்.

அனில் கன்வத்
அனில் கன்வத்
ANI

வேளாண் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்குழுவில் பிரமோத் ஜோஷி, குலாட்டி, அனில் கன்வத், பூபிந்தர்சிங் மன் ஆகிய நால்வர் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களில் அனில் கன்வத், மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஷேத்காரி சங்கதனா (Shetkari Sanghatana) என்னும் விவசாய அமைப்பின் தலைவராக இருக்கிறார். இவரது சங்கம் மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை மட்டுமே விதித்திருக்கும் நிலையில், அவற்றைத் திரும்பப் பெறுவது தொடர்பான எந்தவோர் அறிவிப்பும் வெளிவரவில்லை. இதனால், சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றே விவசாய அமைப்பினர் ஒரே குரலில் ஒலிக்கின்றனர்.

இதுவரை மத்திய அரசுடனான எட்டுகட்டப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்திருக்கும் நிலையில், வரும் ஜனவரி 15-ம் தேதி அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு